செய்திகள்
மகிந்தவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டும்
ஹைட் பார்க்கில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீதிமன்றங்களை விமர்சித்துள்ளார். எனவே அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரின் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் கூறுகையில் ;
என் மீது 5 ஆவது தடவையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்துள்ளார்கள். தங்களில் 51 பேர் உள்ளதாக இவர்கள் கூறுகின்றபோதும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 37 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். இதனை வைத்து உங்களால் என்ன செய்ய முடியும்? அண்மையில் ஹைட்பார்க்கில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது செலவுகளை நியாயப்படுத்தியுள்ளார்.
அத்துடன் நீதிமன்றங்களையும் விமர்சித்துள்ளார். தன் குடும்பத்தை பழிவாங்குவதாக நீதிமன்றங்களை
சாடியுள்ளார். எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்கு 35000 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 1800 கார்கள் எங்கேயென தற்போது மகிந்தவுக்கு கூடத் தெரியாது. அதுமட்டுமல்ல அம்பாந்தோட்டை துறைமுகம், விளையாட்டு மைதானங்கள், மிஹின் எயார், நுரைச்சோலை மின் திட்டம் என எதனை எடுத்தாலும் பொக்கற்றுக்குள் காசைப் போடும் வேலையே இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 100 பேருக்கு மதுபானசாலைகள் சொந்தமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அனுமதிகள் யாருடைய ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டன? யார் யாருக்கு வழங்கப்பட்டன? மனைவி, பிள்ளைகள் பெயர்களில் யார் யார் வைத்துள்ளார்கள்? என்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
n10




