செய்திகள்

புலிகளை தோற்கடித்தாலும் தமிழீழ கனவு தோற்கடிக்கப்படவில்லை : இன ஐக்கியம் மூலம் அதனை தோற்கடிப்போம் என்கிறார் ஜனாதிபதி

யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்தாலும் அவர்களின் தனித் தமிழீழ கொள்கை தோற்கடிக்கப்படவில்லையென உணர்வதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டுமாயின்  இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு நேற்று இரவு வழங்கிய விசேட நேர்காணலியே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம் 26 வருடங்களுக்கு அதிகமாக யுத்தத்திற்கு  முகம்கொடுத்து வந்திருப்பதுடன், பெரும்பாலும் யுத்தவெற்றி பற்றியே  கதைத்தும் வருகின்றோம். அந்த யுத்தம் எதனால் ஏற்பட்டது மீண்டும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே மிக முக்கியமாக தேவைப்படுகிறது. சுதந்திரம் ஏற்பட்டது முதல் இதுவரை தீர்க்கப்படாத மிக முக்கியமான பிரச்சினையாகவே நான் இதனை அடையாளம் காண்கிறேன். இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் ஏற்படாவிடின் அதுவே பிரச்சினையாக அமைகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பை யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டது.
அவ்வாறு எமது பாதுகாப்பு படைகளிடம் யுத்த ரீதியில் தோல்விகண்ட போதும் யுத்த களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும் ஈழத்திற்கான கனவை காணும் விடுதலைப் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். இந்நிலைமையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் மேற்கூறிய தனி தமிழீழத்திற்கான கருத்து என்பதை துப்பாக்கிக் குண்டுகள், எரிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்.
தனிநாட்டுக்கான கோரிக்கையை செயலிழக்கச்செய்ய வேண்டுமாயின் இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில் இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாம் எடுத்துவரும் முயற்சிகளை தடுக்கவோ நாம் இந்த நாட்டை காட்டிக்கொடுக்கிறோம் என்று சொல்பவர்களோ நாட்டை பலவீனப்படுத்துகின்றோம் என்று கூறுபவர்களோ மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் தீராது இருக்கும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும். அவ்வாறு அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்காதபோது எதிர்காலத்தில் மீண்டும் அந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேசெய்வார்கள். ஆகையால் மிக இக்கட்டான ஒரு பிரச்சினையாக உள்ள இதனை நாம் முன்னுரிமை கொடுத்து தீர்த்துவைக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். ஆகையால் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் முன்னுரிமையை நாம் வழங்கியிருக்கின்றோம்.
இதுவரையில தீர்க்கப்படாத ஆயினும் தீர்க்கப்படவேண்டிய எதிர்காலத்தில் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே மிக முக்கிய அம்சமாகும். எமது புதிய அரசியலமைப்பின் ஊடாகவும் இதுவரை செயலில் இருந்துவரும் நம் நாட்டு யாப்பில் மக்களின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால் இருந்து வரும் குறைபாடுகளை தீர்த்துவைத்தல் வேண்டும்.
ஆகையால் நாம் சுதந்திரமானதும் கல்விமான்கள், புத்திஜீவிகளை கொண்டதுமான நாட்டினர் என்ற வகையில் நாம் காட்டுமிராண்டிகளாக இல்லாமல்  உலகில் முன்னேறிய நாடுகளில் உள்ள உயர்ந்த கருத்துக்களை கவனத்திற்கொண்டு நமது நாட்டுக்கு உகந்த புதிய ஒரு நாட்டை உருவாக்குவதற்கும் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்;த்துவைப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் உறுதிபூணுவோம் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
n10