23 வருடங்களின் பின் வவுனியா நெற்களஞ்சியசாலை அதிரடிப்படையால் விடுவிப்பு
வவுனியாவில் கடந்த 23 வருடங்களாக நெற்களஞ்சியசாலையில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நேற்று வியாழக்கிழமை வெளியேற்றுள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான குறித்த கட்டத் தொகுதி வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ளது. நெற் களஞ்சியசாலை, அலுவலக கட்டத் தொகுதி என்பற்றை உள்ளடக்கியதாக இது காணப்பட்டது. யுத்த காலப்பகுதியில் வவுனியாவில் நிலை கொண்ட விசேட அதிரடிப்படையினரால் சுவீகரிக்கப்பட்ட இக் கட்டடத் தொகுதி கடந்த 23 வருடங்களாக இராணுவத்தினர் வசம் இருந்தது. இதனால் நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவது தொடர்பில் வவுனியாவில் பல்வேறு பிரச்சனைகள் எதிர்நோக்கப்பட்டதுடன், அதனை விடுவிக்குமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.
இதனால் இக்கட்டத் தொகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு நிலை கொண்டிருந்த அதிரடிப்படையின் வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் தமது முகாமினை அமைத்துச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விடுவிக்கப்பட்ட களஞ்சிய சாலையை வவுனியா மாட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, விவசாய அமைச்சின் மாவட்ட பணிப்பாளர் திருமதி எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதில் நெல்லினை களஞ்சியப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
N5





