செய்திகள்

வட மாகாண சபை தீர்வுத்திட்டம் அடுத்தவாரம்

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்றிட்டத்தில் வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை இடம்பெறச் செய்வதற்காக வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்மொழிவுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி எதிரணித் தலைவர்  இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 19 உறுப்பினர்கள் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட மேற்படி முன்மொழிவுகள் நேற்றைய தினம் மாகாண சபையின் 49 ஆம் அமர்வில் உறுப்பினர்களின் கருத்துக்களை பெறுவதற்காக சமர்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த தீர்வுத் திட்ட முன்மொழிவுகள் இரா.சம்பந்தன் ஊடாக சமர்ப்பிக்கப்படவுள்ளமை எப்படி? எப்போது? என உறுப்பினர்கள் சிலர் சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக பதிலளிக்கையிலேயே அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில். எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் வடமாகாண சபை முதலமைச்சர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 38 உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது எமது தீர்வுத் திட்ட முன்மொழிவுகள் அவரிடம் முதலமைச்சர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரினால் சமர்பிக்கப்படும். என அவைத் தலைவர் கூறினார்.
முன்னதாக பேசிய பிரதி அவை தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் வடமாகாண சபையினால் சமர்ப்பிக்கப்படும் தீர்வுத் திட்ட முன்மொழிவுகள் உரி வகையில் அது சேரும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுமா? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையை கருத்தில் கொள்வதில்லை. மாறாக அவர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையே அதிகம் நம்புகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அவைத் தலைவரின் கருத்தைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி உறுப்
பினர் எஸ்.தவநாதன் கருத்துத் தெரிவிக்கையில் ; இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக வடமாகாண சபையின் தீர்வுத் திட்ட முன்மொழிவுகளை பெற்றுக் கொள்கிறாரா? இல்லை எதிர்க்கட்சித் தலைவராக பெற்றுக் கொள்கிறாரா? என கேள்வி எழுப்பியதுடன் கூட்டமைப்பின் தலைவராக பெற்றுக் கொண்டால் அதில் நாம் கலந்து கொள்வது சிரமமான விடயம் என சபையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக தாம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசி தீர்மானம் எடுப்பதாக அவைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நேற்றைய தினம் உறுப்பினர்களின் கருத்துகளை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்ட முன்மொழிவுக்கு முழுமையான கருத்துகள் பெறப்படாமையினாலும் தீர்வுத் திட்ட முன்மொழிவில் சில விடயங்கள் இன்னும் முழுமைப்படுத்தப்படாமையினாலும் மீண்டும் 12 ஆம் திகதி விசேட அமர்வு ஒன்றை நடத்தி உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் திருத்தங்களை முழுமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
n10