மாலைதீவு இலங்கைக்கு அனுப்பிய கைதிகளில் “போரில் காணாமல் போன’ மூன்று தமிழர்கள்
மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 கைதிகளில் யுத்தம் இடம்பெற்றபோது காணாமற்போனதாக முறையிடப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் அடங்குகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற்போனதாக அவர்களது பெற்றோர்களினால் மன்னார் பிரஜைகள் குழுவின் ஊடாக காணாற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த மூவரும் 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 கைதிகளின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காணாமற்போனதாக முறையிடப்பட்டிருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களின் பெயர்களும் அடங்கியிருப்பதாகத் தெரிவிககப்படுகின்றது.
இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் இவர்கள் விடுவக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டு செலிக்கடைச் சிறைச்சாலைக்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
R-06




