உள்ளுராட்சிமன்ற தேர்தல் அடுத்த ஜனவரியில் இடம்பெறும்: அமைச்சர் மனோ அறிவிப்பு
நாட்டில் தடைப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் அளவில் நடைபெறவுள்ளதாக தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்வு கூறியுள்ளார்.
இதன்போது அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் மேலும் தலா 3 பிரதேச சபைகளாக உயர்த்தப்பட்டு அங்கு மக்கள் பிரதிநிதிகளாக நமது இளைஞர்கள் பங்கு கொள்ளும் நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெருந்தோட்டங்களில் அமைக்கப்படும் 4000 வீட்டு திட்டத்தில் முதல் கட்டமாக 404 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா – பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்:
இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடி மலையகத்துக்கான 4000 வீட்டு திட்டத்திற்கு இறுதி முடிவினை எடுத்தது. இதனால் இன்று ஆரம்ப கட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
குத்தகை அடிப்படையில் பேரம் பேசும் நிலையில் நாம் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவில்லை. பணத்திற்காக விளைப்போகவில்லை. இந்திய அரசுடன் சுமூகமான உறவையும் பொது நலத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த வீட்டு திட்டத்திற்கான பேச்சுகளை ஆரம்பித்தோம். இதன் பயன் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நேற்று அன்று அடிக்கல் நாட்டுப்பட்டு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கட்டியமைக்கப்படும் தனி வீட்டு தொகுதிக்கு அன்னல் மகாத்மா காந்திபுரம் என பெயர் சூடப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் தொப்புள் கொடி உறவிலான நீண்ட கால உறவு இருக்கின்றது. நமது தந்தை நாடான இந்தியாவின் நிதியின் ஊடாக வராலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளி மக்களுக்கு வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நன்நாளை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
இந்த செயற்பாடானது தொப்புள் கொடி உறவை இந்திய அரசாங்கம் இன்று பைரங்கப்படுத்தியுள்ளது. நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் அரசாங்கத்தின் முன்னெடுப்படும் தேசிய வீடமைப்பு திட்டத்தின் ஊடாக மலையக தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் கிடைக்கும் அதேவேளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும் தனி வீடுகள் சமமாக முன்னெடுப்படுகின்றது.
இதனடிப்படையில் இந்த நாட்டில் ஒரு காலத்தில் உரிமையற்று வாழ்ந்த மலையக மக்கள் இன்று தனி வீட்டு உரிமை, கல்வி உரிமை மற்றும் தொழில் உரிமையை பெறும் அளவில் மாற்றம் கண்டுள்ளனர்.
இந்த மாற்றத்தின் ஊடாக இந்த நாட்டில் உள்ள ஏனைய சமூகத்தினருடன் சமமாக வாழும் உரிமையை நாம் பெற்றுள்ளோம் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.




