முன்னாள் தூதுவர் உதயங்கவை தாய்லாந்தில் மகிந்த சந்தித்து இரகசியப் பேச்சு நடத்தினாரா?
தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சந்தித்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரியவரும், அவரது உறவினருமான உதயங்க, ரஷ்யாவிலிருந்து உக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
ரஷ்யாவில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இலங்கை விமானப்படைக்குத் தேவையான உலங்கு வானூர்திகள் உட்பட பல ஆயுதங்களை ரஷ்யாவிலிருந்து அவர் பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த ஆயுத பேரங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பது குறித்தும் இப்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2015 ஜனவரியில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உதயங்கரா அழைக்கப்பட்டபோதிலும், கொழும்பு திரும்பாமல் தொடர்ந்தும் அவர் வெளிநாட்டிலேயே இருந்து வருகின்றார். இந்த நிலையிலேயே தாய்லாந்தில் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த அவர் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
R-06




