தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பிரித்தானிய அரசிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிப்பு
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று (29.04.2016) உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப்பட்டது.
பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் அரசியல் உபகுழு இணைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி புவிதரன் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்களான சிரேஸ்ட சட்டத்தரணி இரத்தினவேல், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சட்டத்தரணி விஜயகுமார் மற்றும் சட்டத்தரணி காண்டிபன் ஆகிய ஐவர் கொண்ட குழு காலை 11.00 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகார பொறுப்பாளர் போல் கொட்விரியிடமும் பின்னர் மதியம் 1.15 மணியளவில் பிரித்தானிய தூதுவராலய அரசியல் பொறுப்பாளர் டானியல் பெயின்டர் அவர்களிடமும் நேரடியாக கையளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் இவ் அரசியல் இராஜதந்திரிகளிற்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது பேரவை உறுப்பினர்கள் இதுவரைகாலமாக தமிழ் மக்கள் எதை தமக்கு தீர்வாக எதிர்பார்கிறார்கள் என்ற ஒரு தீர்க்கமான திட்டம் உருவாக்க எவரும் முன்வராதது மட்டும் இன்றி எவரும் அவர்களைக்கேட்காததாலும், தமிழ் மக்களின் இழப்பை எவரும் சரியாக கண்டுகொள்ளாததாலும், தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் வேளையில், இதுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என மக்கள் கலந்துரையாடல் மூலம் ஒரு திட்டம் உருவாக்கி அதனை சர்வதேசத்திடம் சமர்ப்பித்து, இத்தீர்வுத்திட்டம் எமக்கு முழுமையாக பெற்றுத்தரும் சந்தர்ப்பத்தில் மட்டும்தான் தமிழ் மக்கள் தமது சுயகொளரவத்துடனும், சம உரிமையுடனும் வாழமுடியும் எனபதை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினர்.
R-06




