செய்திகள்

அன்று முதல் இன்று வரை இலட்சம் ரூபாய்கள் ஈட்டிக்கொடுக்கும் யாழ்ப்பாணத்து திராட்சை!

எஸ். ஷாலினி

யாழ்ப்பாணத்து  பனம் பழத்துக்கு எவ்வளவு தேவையும் கிராக்கியும் இருக்கின்றதோ அவ்வளவு கேள்வி யாழ்ப்பாணத்து திராட்சை பழத்துக்கும்  இருக்கின்றது.

வருகின்ற ஆவணி காய்த்து குலுங்க போகும் மருதனார்மடத்தில் உள்ள ஜீவா  அவர்களின் திராட்சை தோட்டத்தில் அவரை சந்தித்து இயற்கையோடு இணைந்த இந்த தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகள் பற்றி அளவளாவினோம்.

மற்ற தொழில் மாதிரி சுகமா காசு பாக்குற வேலை இல்லை விவசாயம். அதிக படியான வருமானமும் வரும். சில வேளை போட்ட முதலை எடுக்குறதும் கஷ்டம். எண்டாலும் நம்பிக்கையோடு வேலை செய்தா எதுவும் சாத்தியம் தான் என்று கூறி சிரித்தவரின் முகத்தில் ஜொலிக்கின்றது நம்பிக்கை. நூறு திராட்சை கன்றுகளை தனது தோட்டத்தில் வைத்து பராமரித்து வரும் திரு ஜீவா, திராட்சை பயிர் செய்கை பற்றி பல பயன் மிக்க தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஏறக்குறைய இருபத்தைந்து வருட ஆயுட் காலத்தினை கொண்ட திராட்சை பயிர் தடி வெட்டி பதிவைத்தல், எருபோடுதல், மற்றும் குப்பை கூளங்களை கொண்டு பசளையிட்டு பதனிடுதல் போன்ற பிரதானமான வேலைகளை செய்து முடிக்க வேண்டும். பயிர் வளர்வதற்கு முழுதாக மூன்று மாதங்கள் தேவை. மூன்று மாதத்தில் கொடிபடர்வதற்கு ஏதுவாக தூண் போட்டு கம்பி வரைய வேண்டும். முதல் தடவை குருத்து அரிந்ததும் ஒரு மாதத்திலேயே பூ வரும்.

Jaffna Grapesஐந்தாம் மாதத்தில் மருந்து அடிக்க வேண்டும். பிறகு காய் வருவதற்கும் மருந்து அடிக்க வேண்டும். திராட்சை உற்பத்தியில் எல்லாமே மருந்து அடிப்பதில் தான் தங்கி உள்ளது. பார்த்து மருந்து அடிக்காவிடில் எல்லாமே நாசமாகி விடும்.

காய் வந்ததும் கராவல் அடிக்காமல் இருப்பதற்கு மீண்டும் மருந்து. இடைப்பழம் விழும் போது மீண்டும் மருந்து. கொடி புதுசாக இருக்கும் போது முதலில் வெட்டும் பழம் புளிப்பாகவே இருக்கும் என்பதையும் வியப்போடு அறிந்தோம்.

பின்னர் பழங்கள் தரம் பிரிக்கப்பட்டு நல்ல தரத்தில் உள்ளவை கொழும்பிலுள்ள பழக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சிறிது குறைவான தரமுள்ள பழங்களே உள்ளூர் யாழ்ப்பாண சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

வருடம் இரண்டு முறை அறுவடை செய்யக் கூடிய இந்த பயிர் நல்ல இலாபத்தினையும் தரக்கூடியது. நல்ல பராமரிப்போடு கூடிய கன்றுகள் ஒரு அறுவடையில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் வருமானம் தரக்கூடியது. எனினும் சரியான பராமரிப்பு இல்லாவிடில் பெரிய நஷ்டமும் ஏற்படலாம்.

இலாபம், நஷ்டம், முயற்சி என்பன எல்லாவற்றினையும் விடுத்து இந்த பயிர் செய்கையில் பயன்படுத்தப்படும் செயற்கை நாசினிகளின் அளவு மலைப்பை ஏற்படுத்துகின்றது. இதில் மாற்றம் வேண்டும் என்பதில் ஐயமில்லை. மாற்றத்துக்கு வழி தான் என்ன?

சூழலுக்கு இயைவான பச்சை கோட்பாடினை (Green Concept) முன்னெடுக்கும் இன்றைய காலத்தில் இதற்கு மாற்று திட்டங்கள் நிச்சயம் தேவை. சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

 நன்றி:தமிழ் வர்த்தக தளம் (www.tamiltradepost.com)