செய்திகள்

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளம் விவசாய பண்ணைக் காணி பொருத்தமானதா…?

-கே.வாசு-

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த வன்னிப் பகுதிக்கு 2000 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஓதுக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இத் திட்டத்தை வவுனியாவில் அமைப்பதற்கே அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நான்கு மாதங்களுக்கு மேலாக வவுனியாவில் எங்கு இதனை அமைப்பது என்பது தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது. தாண்டிக்குளம் விவசாய பண்ணைக் காணி, ஓமந்தை மாணிக்கவளவு காணி, பம்பைமடு காணி, சாளம்பைக்குளம் அரச காணி, ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடி இருந்த காணி என பல காணிகள் இதனை அமைப்பதற்கு பரிசீலித்த போதும் இன்று வரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதற்கு காரணமும் இருக்கிறது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு இதனை அமைப்பதற்கான காணி நகரில் இருந்து 2 -3 கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என கோரியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டால் தாண்டிக்குளம் விவசாய காணி மாத்திரமே வழங்கக் கூடிய நிலையில் உள்ளது. இவ் விவசாய பண்ணைக் காணி வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ளதால் முதலமைச்சர் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் இதனை வழங்க மறுத்து வருகின்றனர். அதை தவறு என கருதவும் முடியாது. ஏனெனில் மாவட்டத்திற்குரிய அபிவிருத்திகள் மக்கள் விருப்பப் படியே அமைக்கப்பட வேண்டுமே தவிர அவை திணிக்கப்பட கூடாது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிடப்படாது அமைக்கப்பட்ட பல அபிவிருத்திகள் மக்களுக்கு பயன்படாத வகையில் சில இடங்களில் இருப்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இந்நிலையில் நீண்டகால அடிப்படையில் தாண்டிக்குளம் விவசாய பண்ணைக் காணி பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொருத்தமானதா என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

சில மக்கள் பிரதிநிதிகள் இத்திட்டத்தை வேறு இடத்தில் அமைக்க மத்திய அரசாங்கம் அனுமதி வழங்காத பட்சத்தில் தாண்டிக்குளம் காணியை என்றாலும் வழங்கி இதனை வவுனியாவில் அமைக்க வேண்டும் எனக் கூற இன்னும் சிலரும் சில அமைப்புக்களும் இதனை தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என பிடிவாதமாகவும் நிற்கிறார்கள். இது ஒரு புறமிருக்க, ஓமந்தையில் தான் அமைக்க வேண்டும் என இன்னும் ஒரு சாரார் பிடிவாதமாக உள்ளனர். மத்திய அமைச்சர் ஒருவர் இதனை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என விரும்புகின்றார். ஓமந்தையில் இடம்பெற்று வரும் அவர் சார்ந்த சில நடவடிக்கைகள் வெளிவந்து வந்துவிடும் என்ற அச்சம் அவரிடம் உள்ளது. குறுகிய இலாப நோக்கங்களை விடுத்து உண்மையில் இங்கு மாவட்ட நலன்சார்ந்து சிந்திக்கப்பட வேண்டும். இவ்வாறு இறுதி முடிவின்றி குழப்பம் தொடரும் நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார இணைத்தலைவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் ஓமந்தை மாணிக்கவளவு காணி நகரில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதுடன் 13 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள காணியாகும். இக் காணி 1966 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவ தனியார் ஒருவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இக் காணியை மீள் சுவீகரிப்பதற்கு காலஅவகாசம் குறுகியதொன்றல்ல. அத்துடன் நஸ்டஈட்டையும் காணி உரிமையாளருக்கு வழங்க வேண்டும். சாளம்பைக்குளம் அரச காணி வனவளத்திணைக்களத்தினால் வீடமைப்புதிட்டத்திற்கென விடுவிக்கப்பட்ட 200 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் காணியை மேற்படி விசேட பொருளாதார மையம் அமைப்பதற்கு விடுவிக்க முடியும் என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்திருந்தார். இக் காணியானது நகரத்தில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்காணியில் 2 ஏக்கர் காணியானது ஏற்கனவே 4 பயனாளிகளுக்கு அரை ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

பம்பைமடு அரசகாணி வவுனியா நகரத்தில் இருந்து மன்னார் வீதி வழியாக 8 கிலோமீற்றர் தூரத்தில் பம்பைமடுவில் இருந்து செக்கடிப்புலவு செல்லும் வீதிக்கு அடுத்ததாக பிரதான வீதிப்பக்கமாக 5 ஏக்கர் அரச காணி அமைந்துள்ளது. இக் காணி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமானது. இக்காணியை விடுவிப்பதற்கு கால அவகாசம் தேவை.

இதேவேளை ஈரப்பெரியகுளம் அரச காணியானது நகரத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் ஏ9 வீதியில் முன்பு பொதிகள் சோதனை செய்யும் சாவடிக்கு அண்மித்ததாக சுமார் 15 ஏக்கர் காணி அமைந்துள்ளது. இக்காணியில் விசேட பொருளாதார அமையம் ஒன்றினை அமைப்பதற்கு 5 ஏக்கர் காணியை விடுவிக்கலாம் என வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே மேற்குறிப்பிட்ட காணிகளில் தாண்டிக்குளம் பண்ணைக்காணியும் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள 5 ஏக்கர் காணியுமே உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது. இந் நிலையில் மிக குறுகிய காலத்தில் சாதகமான காணி பற்றிய பதிலொன்றை கிராமிய பொருளாதார அமைச்சுக்கு அனுப்பாத பட்சத்தில் இவ் விசேட பொருளாதார மையம் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவிக்க, பொருத்தமான காணியைத் தெரிவு செய்வது தொடர்பில் அவரால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கத்துவம் வகித்த சி.சிவகுமார் (விவசாய பணிப்பாளர், வடமாகாணம்), ஏ.ஜி.கே. குணதிலக (பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை, வடக்கு), யோகேஸ்வரன் ( பிரதி விவசாய பணிப்பாளர் – விரிவாக்கம், வவுனியா), கா.உதயராசா (பிரதேச செயலாளர், வவுனியா), ம.கிருபாசுதன் (திட்டமிடல் பணிப்பாளர், வவுனியா), திருமதி எல்.பி.ஈஸ்வரன் (விவசாய பணிப்பாளர், வவுனியா) ஆகியோர் தாண்டிக்குளம் காணி பொருத்தமற்றது எனவும் ஓமந்தையே சிறந்தது எனவும் கூறியுள்ளனர்.

உண்மையில் தாண்டிக்குளம் விவசாய பண்ணைக் காணி பொருத்தமில்லையா…? தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணியானது 140 ஏக்கரைக் கொண்டது. 1948 ஆம் ஆண்டு விதை உற்டபத்திப் பண்ணைக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு தற்போது வடமாகாண சபையின் கீழ் காணி உரிமம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் மத்திய அரசின் கீழ் காணப்பட்ட போதும் 1989 ஆம் ஆண்டு இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது வடமாகாணசபைக்குரியதாகவுள்ளது. ஏ9 வீதியில் நகரில் இருந்து 1 – 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இக் காணியில் 35 ஏக்கர் 1989 ஆம் ஆண்டு விவசயாக் கல்லூரிக்கு வழக்கப்பட்டது. இதனை இன்னும் விஸ்தரிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இப்பகுதியில் அமையப் பெற்ற பண்ணையானது வடமாகாணத்திற்கு தேவையான விதை உற்பத்திப் பொருட்களின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதுடன், விவசாய கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கற்றல் வசதிகளையும் வழங்குகின்றது. இங்கு பழமரக் கன்றுகளுக்கான தாய்தாவர பராமரிப்பும் இடம்பெறுகிறது. இரு போகத்திலும் பயிர்ச்செய்கை இப்பண்ணையில் மேற்கொள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பேணப்படுவதுடன் இப்பண்ணைக் காணிக்கு அருகில் உள்ள கிணறுகளில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 200 குடிமனைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. இக் காணியின் ஒரு பகுதி புதிய பஸ் தரிப்பிடத்திற்கு என முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கையகப்படுத்தப் பட்டுள்ள நிலையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க இதில் உள்ள காணி கையகப்படுத்தப்படும் நிலையில் சனநெரிசல் மிக்க இப்பகுதியில் சில பிரச்சனைகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இங்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க சாதகமாக இது நகரத்திற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ளதுடன், ஏ9 வீதியோரமாகவும் உள்ளது. பொருட்களை விற்பனை செய்வோருக்கும் வாங்குவோருக்கும் வசதியான இடம். புகையிரதம், பேரூந்து என இரு வழிப்போக்குவரத்து வசதிகள் காணப்படுவதுடன் பணபரிமாற்ற நடவடிக்கைகளுக்கான வங்கி வசதிகள் கூட அருகிலேயே அமைந்துள்ளன. மன்னார் – வவுனியா, யாழ்ப்பாணம்- வவுனியா, ஹொரவப்பொத்தானை – வவுனியா உள்ளிட்ட வீதிகளை இணைக்கும் சந்திக்கு அண்மையில் உள்ளது. நகரில் உள்ளவர்களுக்கு மேலும் சந்தை வாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதாகவும் அமையும்.

ஆனால் இங்கு அமைந்தால் இதை விட பாதிப்புக்களே அதிகம். ஏற்கனவே சனச் செறிவு மிக்கதாக காணப்படும் வவுனியா நகரின் பசுமை நிலை பாதிப்படையும். எதிர்கால தேவை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை விஸ்தரிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மாசடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளது. சனத்தொகை கூடிய பகுதியாக உள்ளத்தால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் இலகுவாக பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன், பொருளாதார வலயக் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். இப்பகுதி நகரசபை எல்லைக்குட்பட்டதக காணப்படும் நிலையில் ஏற்கனவே வவுனியா நகரின் கழிவகற்றல் சீராக இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இதன் கழிவுகள் சீராக அகற்றப்படுவதும் சந்தேகமே. பண்ணைக்காணி, வயல் காணி, விவசாயக் கல்லூரி காணி என்பவற்றில் உள்ள பயிர்களுக்கு விரைவாக நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், நகருக்கான குடிநீர் விநியோகக் கிணறுகளும் மாசடையும் அபாயமுள்ளது. சமூக சீர்கேடுகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதுடன் புகையிரத பாதையை அண்டி வாழும் மக்கள் மற்றும் அயலில் உள்ள குடியிருப்புக்களில் பாதிப்புக்கள் ஏற்படும். இதனை மேலும் விஸ்தரிக்க முற்படும் போது அவற்றுக்கு இடப்பற்றாக்குறையும் இங்கு உள்ளது. இப்பகுதியில் உள்ள புகையிரத பாதையோரமாக உள்ள குடிமனைகள் அரச விடுதிகள் என்பன அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான நிலையில் இருக்கும் ஒரு வளத்தை அழித்து புதிய அபிவிருத்தி என்ற பெயரில் எதனை சாதிக்கப் போகிறார்கள்.

பொருளாதார மத்திய நிலையம் என்பது நவீன வசதிகளைக் கொண்ட அங்காடி கடைத் தொகுதி அல்ல. இது தம்புள்ளை போன்ற உள்ளூர் உற்பத்தியாளருக்கான திறந்தை சந்தை வாய்பை ஏற்படுத்தும் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சந்தை தொகுதி. அது எப்படி இருக்கும். சந்தைப் பகுதியின் நிலமை எவருக்கும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. அவ்வாறான ஒரு சந்தை தொகுதியை கொண்ட பொருளாதார மத்திய நிலையம் குடிமனைகளுக்குள் அமைப்பது என்பது சரியானது தானா…? வடமத்திய மகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அதன் புறநகரான தப்புத்தேக்கமவிலும், மத்திய மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அதன் புறநகரான தம்புள்ளையிலும் இடவசியையும் வேறு இன்னொரன்ன அனுகூலங்களினை அடிப்படையாக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் நகருக்குள் அமைப்பது எவ்வகையில் நியாயமானது…? வரும் அபிவிருத்திகளும் அரசின் திட்டங்களும் நகருக்கு மட்டும் தான் சொந்தமானா…? ஓமந்தையை அண்டிய பகுதியில் பறிபோகும் எல்லைக் கிராமங்களை காப்பாற்ற மற்றும் அப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்த இதனை வாய்ப்பாக பயன்படுத்த முடியாதா…? .வை தொடர்பில் மாவட்ட நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும். அது மட்டுமல்ல இது வடக்கிற்கான ஒரு திட்டம் என்பதையும் எவரும் மறுத்து விட முடியாது.

வடமாகாண முதலமைச்சர் கடந்த 28 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் போது இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு கூட இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்த பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எங்கு அமைப்பது என்பது தொடர்பில் உள்ள குழப்பத்திற்கு மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு, வவுனியாவின் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிபர், வடமாகாண முதலமைச்சர், வடக்கு விவசாய அமைச்சர், உற்பத்தியாளர்கள் என அனைவரும் ஒன்று கூடி மாவட்ட நலனை நீண்டகால அடிப்படையில் சிந்தித்து தீர்க்கமான ஒரு முடிவினை முன்வைக்க வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பு.