“தாயகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு புலம் பெயர் தமிழரால் நன்றாக உதவ முடியும்” பேராசிரியர் ஏ . ஜே. சந்திரகாந்தன் அடிகள்
இ.கிருஷ்ணகுமார்
சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணத்தின் கருத்தரங்குத் தொடரின் ஒரு நிகழ்வாக ஏப்ரல் 29, 2016 அன்று “புலம் பெயர் தமிழர்: அன்றும் இன்றும்” என்ற பொருளில் பேராசிரியர் ஏ . ஜே. சந்திரகாந்தன் அடிகளின் உரையும் அதைத் தொடர்ந்து பயன் தரும் கருத்துரையாடலும் நடைபெற்றன.
நிகழ்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தலைமைவகித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான பேராசிரியர் ஏ.ஜே. சந்திரகாந்தன் அடிகள், நாட்டின் அரசியற் சூழல் காரணமாக 8௦ களில் கனடாவிற்கு புலம் பெயந்திருந்தார்.
பேராசிரியர் ஏ . ஜே. சந்திரகாந்தன் தனது உரையில் புலம் பெயர் தமிழர் தொடர்பாக பலவிடயங்களை குறிப்பிட்டார்.
“சுமார் பத்து இலட்சம் புலம் பெயர் தமிழர் உலகெங்கும் செறிந்து வாழ்கின்றனர். கனடாவில் மட்டும் சுமார் மூன்றரை இலட்சம் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கிறார்கள். வேறு எந்த புலம் பெயர் மக்கள் கூட்டதிற்கும் இல்லாத, சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம் ஒன்று தமிழர்கள் மத்தியில் உள்ளது. அதாவது எல்லோரும் எதோ ஒரு பொது அமைப்பை உருவாக்கி அதில் அங்கம் வகித்து சமுக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதே அதுவாகும். அவை பழைய மாணவர் சங்கங்கள், ஊர் அமைப்புக்கள், கலை இலக்கிய அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள் , தொழில்சார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள் என பல வகையாக தொடர்கின்றன. குழுக்களாக சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் தன்மை மற்றைய நாடுகளின் குடியேறிகளில் பெரிதும் காணப்படாத ஒன்று. இவ்வமைப்புகள் ஊடாக தான் வசிக்கும் நாட்டில் அடிக்கடி ஒருங்குகூடுவது உட்பட தமது தாய் நாடான இலங்கைக்கும் பல உதவிகளை செய்து வருகின்றார்கள். அனேகமான பழைய மாணவர் சங்கங்கள் தாம் கற்ற பாடசாலைகளுக்கு பெரிய அளவு நிதி உதவிகளை செய்து வருகின்றன. இது பெரும்பாலும் முதலாம் தலை முறையினரின் செயற்பாடுகளாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் தலைமுறையினர் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளில் அந்ததந்த நாட்டவர்களுக்கு இணையாக சமமாக வளர்ந்துள்ளனர். பல விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் , தொழில் முனைவோர் என பலர் எம்மிடையே உருவாகியுள்ளனர். எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவர்களால் உதவ முடியும். உதவும் நோக்கிலும் உள்ளனர். இவர்களை சரியாக இனம் கண்டு அதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது நன்மை பயக்கும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு தன்னால் உதவ முடியும் ” என்று பேராசிரியர் ஏ . ஜே. சந்திரகாந்தன் கூறினார்.
“எம்மால் உருவாக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் கனடிய தமிழர் பேரவையின் ஆண்டு நிகழ்வுகளிற்கு கனடிய அரசியல் தலைவர்களும் சிலவேளைகளில் கனடிய பிரதமரும் பங்கு பெறுவது வழக்கம். கனடிய அரசு தமிழர்களின் கடின உழைப்பையும் திறமையையும் மதிக்கின்றது பாராட்டுகின்றது. யாழ்ப்பாணப். பல்கலைக்கழகம் இவர்களிடமிருந்து நிபுணத்துவ சேவையை இலகுவாக இலவசமாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் “எமக்கு தெரியாதது எதுவுமேயில்லை” என்ற யாழ்ப்பாண (பல்கலைக்கழக) மனோபாவம் பல நல்ல விடயங்களுக்கு தடையாகவுள்ளது” என்றும் அவர் கூறினார்.
” முதல் தலைமுறையினர் பலர் நாடு திரும்ப ஆவலாய் உள்ளனர். அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். முதியோர் தற்கொலைகளும் நடக்கின்றன. எனவே நாடுதிரும்பும் போது ஏற்படும் கைதுகள் காணமற்போதலிலிருந்து விடுபட சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருகின்றனர்” என்றும் பேராசிரியர் ஏ . ஜே. சந்திரகாந்தன் தனது அவதானிப்புக்களை பகிர்ந்து கொண்டார்.
கலந்துரையாடலில் பங்குகொண்ட பாரளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் “ இந்த விடயதிற்கான தீர்வுகள் புதிய அரசியற் சீர்திருத்தத்தின்போது சரி செய்யப்படும் என்று கூறினார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
“நீண்டகால இடைவெளிகள் கொண்ட தாயகத்தினுடனான உறவு இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கும் தாயகத்திற்கும் இடையே உறவுகள் நலிவடைந்து போக சந்தர்ப்பம் அதிகம். மாறாக இந்தியர்கள் அடிக்கடி தாய்நாட்டிற்கு சென்று வருவதால் தம் தாய்நாட்டுடன் தலைமுறை தலைமுறையாக உறவை பாதுகாத்துவருகின்றனர். ஈழத்தமிழர் மத்தியில் நிலவும் ஆங்கில மோகம் , மற்றும் பிறமொழி மோகம் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரை தாயகத்துடன் தொடர்பற்றவர்களாக ஆக்கிவிடக்கூடும். பெற்றோர் வீட்டில் அனேகமாக தமிழில் மொழியில் சண்டை பிடிப்பதால் “தமிழ் ஒரு போர் மொழி “ யாக இளையோருக்கு தெரிவதாகவும் அடிகளார் நகைச்சுவையாக கூறினார்.
இரட்டை பிரஜாவுரிமை , புலம் பெயர்ந்தோர் வாக்குரிமை போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பேராசிரியர் இரா. சிவசந்திரனின் நன்றியுரையை தொடர்ந்து கலந்துரையாடல் நிறைவுபெற்றது.






