புதிய அரசின் மேல் ஏற்பட்ட மாற்றம் கீழ் மட்டம் வரை செல்லவில்லை: யாழ்ப்பாணத்தில் மனோ
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசிற்கு கால அவகாசம் வழங்கும் அதேநேரத்தில் காணி அபகரிப்பு மற்றும் ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கு எதிராக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தெற்கில் ஒற்றையாட்சி என்று கூறும்போது வடக்கில் சமஷ்டி என்று கோரும் உரிமை இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்தார். அங்குமேலும் உரையாற்றுகையில்,
“எதிர்காலத்தில் எத்தகைய இலக்கை அடையப்போகின்றோம் என்பதை கருத்திற்கொண்டு இன்றைய நிலையில் உள்ளவர்கள் கடந்தகால அனுபவங்களை கொண்டு முன்நகர வேண்டும். அந்த ஒற்றுமை தேவையாக உள்ளது. வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் தெற்கில் இனவாதம் கக்கப்பட்டு வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது வடக்கில் சமஷ்டி கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்றால் ஏன் முன் வைக்கப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் அர்த்தம் வடகிழக்கு மாகாணத்திற்கான சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக இல்லை. அந்த கோரிக்கையை பேச்சுவார்த்தையாக ஒரு கலந்துரையாடலாக சிந்திப்பதால்தான் மே தினத்தில் அவ்வாறு கூறியுள்ளார்.
சமஷ்டி கோரிக்கையை முன்வைப்பதற்கு முழுமையான உரிமை இருக்கிறது. இறைமையை ஆட்புல ஒருமைப்பாட்டை உடைத்து தனிமாநிலமாக அமைக்கப்போவதில்லை. ஐக்கியப்பட்ட ஒற்றுமைப்பட்ட நாட்டுக்குள்தான் நாங்கள் அதிபட்ச அதிகாரத்தை பகிரவுள்ளோம் என்பதைத்தான் தமிழ்தேசியக்கூட்டமைப்பு 2005 ஆம் ஆண்டு தேர்தலில் முன்வைத்துள்ளது. இந்த ஆணையை கூட்டமைப்பு மீறவும் இல்லை. தெற்கில் உள்ளவர்கள் ஒற்றையாட்சி என்று கூறுவார்களானால் அதே உரிமை வடக்கில் கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களுக்கு சமஷ்டி கோரிக்கை முன்வைக்கும் உரிமை உள்ளது.
அரசியல் அமைப்பு என்பது மக்களால் உருவாக்கப்படுவதாகும். அதற்கு உதாரணம் தற்போது பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ஒய சபையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்ககூடிய சூழல் உருவாகிவருகிறது. இதற்காக குழு செயல்படுகிறது. சமஸ்டி கோரிக்கை எடுபடாவிட்டால் ஏன் எடுபடவில்லை என்று கூறவேண்டும். முடியாது ஒன்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த கோரிக்கையை கேட்ககூடாது பேசக்கூடாது என்று சொல்வதற்கு எந்த கொம்பனுக்கும் தெற்கில் உள்ளவர்களுக்கும் உரிமை கிடையாது.
இராணுவ மயப்படுத்தல், காணி அபகரிப்பு என்பன எமது அரசாங்கத்தின் கொள்கை கிடையாது. மாறாக புதிய அரசின் மேல் ஏற்பட்ட மாற்றம் கீழ் மட்டம் வரை செல்லவில்லை. அந்த காரணத்தால் அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகள் வழிகாட்டல்கள் மீறி இராணுவம் பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக தான்தோன்றிதனமாக நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு மாற்று வழியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ்கட்சிகள் இத்தகைய செயற்பாட்டிற்கு எதிராக ஜனநாயக போராட்டத்தை முன்னெடுங்கள். இத்தகைய கையப்படுத்தல், அபகரிப்புகளை தொடர்பில் ஊடகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது சர்வதேச ரீதியில் எடுத்து செல்லவேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியகூட்டமைப்பு சிவில் அமைப்புகள் மாகாணசபை ஏனைய உள்ளூராட்சி மற்றும் உறுப்பினர்கள் பொது அமைப்புகள் சேர்ந்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதன்மூலமாகதான் தேசிய ரீதியில் சர்வதேச ரீதியில் கவரப்படும் அடிபட்ட அதிகார வர்கத்தை தடுக்கமுடியும்.
கடந்த வாரம் கூட்டமைப்பு தலைவர் பரவிபாஞ்சான் இராணுவமுகாமிற்கு சென்றார் என்று கோசமிட்டார்கள். இவர்கள் மீளவும் ஆட்சியல்அமர்வதற்காக இத்தகைய செயலை செய்கிறார்கள். ஆனால் இதற்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இத்தகைய பிரச்சனைகளை செய்ய வேண்டாம் என கண்டித்ததுடன் மக்களின் காணிகளை பார்வையிட்டாரே தவிர இராணுவமுகாமை உடைத்து போகவில்லை என்று கூறினார். தற்போது புலிகள் இல்லை. எறிகணை இல்லை என்றால் அதிஉயர் பாதுகாப்பு வலயம் தேவையில்லை. அந்த அடிப்படையில் மக்களிடம் அவர்கள் காணிகள் ஒப்படைக்க வேண்டும்.
எல்லாம் நடந்துவிட்டது. காணி கிடைத்துவிட்டது என்று சொல்ல நான் பொய்யனல்ல. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. ஒரு நகர்வு இருக்கிறது. அது மெதுவாக இருக்கிறது. வேகம் இல்லை என்று சொல்லலாம். தெற்கில் ஒற்றையாட்சி என்று கூறும்போது வடக்கில் சமஸ்டி என்று கோரும் உரிமை இருக்கிறது.
புதிய அரசியலமைப்பு உருவாகாவுள்ளது. அதில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையும் முன்வைப்பதாக நினைக்கின்றேன். இந்த இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பு, வடமாகாணசபையும் அழுத்தம் வழங்கவேண்டும்.
அதேவேளை அந்த செயற்பாட்டை செய்ய அவகாசத்தை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும். அதன் அர்த்தம் போராட்டத்தை ஊர்வலத்தை நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை. செயய்யுங்கள் அச்சம் பயம் வரும். இரண்டையும் சமாந்தரமாக செய்யுங்கள். கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் மறுபுறத்தில் ஜனநாயக போராட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் இரண்டுக்கும் முரண்பாடு வேண்டாம். வரலாறுகளை திரும்பி பார்க்கவேண்டும் அதன் மூலமே கடந்த தவறுகளை விடாது ஒற்றுமையுடன் செயல்படமுடியும் என்றார்.
R-06




