நாம் தமிழரென்று நெஞ்சிறுத்தி தன்மானத்துடன் வாக்களிக்க தயாராகுவோம்!
கொற்றவை
தமிழ்நாட்டு சட்டமன்றத்தேர்தல் தொடங்க இன்னமும் 6 நாட்கள் உள்ள நிலையில் தேர்தலுக்காக போட்டியிடுகின்ற ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெறுவதற்கான தம்மாலான முழுமுயற்சிகளையும் அனைத்து வழிமுறைகளையும் செய்துகொண்டிருகின்ற இறுதித் தருணங்களில் தேர்தல் பரபரப்பும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்புக்களும் அதனைத் தீர்மானிக்க சட்டப்படியாக உரிமையுள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தன்னிச்சையான தீர்மானமெடுத்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக இதுவரை ஆட்சியில் இருந்த இருபெரும் கட்சிகள் உபயோகித்துவந்த உத்திகளான பணம், சாதியப் பிரிவினைவாதங்கள், கட்சி சார்புடைய விசுவாசம் என்பவற்றுக்குப் பழக்கப்பட்டுப்போன ஒரு பெரும் மக்கள் சமுதாயத்தை தமது வரலாறு, தனித்துவம், தொன்மை, மறைந்து செல்கின்ற கலை பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வைக்கும் ஒரு மகத்தான பணியை இம்முறை முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியும் அதனை வழிநடத்துகின்ற சீமானும் செய்துவருகின்றார்கள்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=nzBmVbGpcOo” width=”500″ height=”300″]
அவர்களுடைய பரப்புரைக்கூட்டங்களில் சமூக மாற்றம் வேண்டும் என்பதைவிட சமூகப் புரட்சிவேண்டும் என்ற தொனிப்பொருளே மிகையாக நிற்பதைக் காண முடிகின்றது. அதாவது ஆண்டாண்டுகாலமாக அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வாக்குச் சேகரிக்கின்ற பணியையே சீமானும் அவரது கட்சியினரும் செய்து வருகின்றனர்.
வந்தோரை வாழவைத்த தமிழ்நாடு வாழ வந்தவர்கள் ஆளநினைத்த ஆசையால் வளங்கள் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி, வாழ்கை கொடுத்த மக்களின் வயிற்றில் அடித்த, அடிக்கின்ற நிலையை நடைபெற்ற நடந்துகொண்டிருகின்ற பல ஆதாரங்களை முன்வைத்து பாமரமக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தனது உறுதியான உண்மையான நேர்மையான அரசியல் கொள்கையுடன் தமிழன் என்ற உரிமையுடன் தமிழ்நாட்டு மக்களைக் கேட்கின்றார்.
தமிழக சட்டமன்ற தேர்த்தலில் போட்டியிடுகின்ற ஏனைய பெரும்கட்சிகளைப் போல் பணபலமோ ஆட்பலமோ ஏமாற்று வித்தைகளோ இவரிடமில்லை. கடந்த ஐம்பதாண்டு காலமாக ஆட்சியிலிருந்த கருணாநிதியை தலைமையாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ் மக்களை ஏமாற்றி ஆண்ட வரலாற்றை மாற்றி தமிழரே தமிழரை ஆள தன்மானத்துடன் வாக்களிக்கும் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பமாக இத்தேர்தலைக் கருதி தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டுகின்றார் .
அவருடைய அனல் பறக்கின்ற பேச்சுக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் அனலில் காய்ந்த இரும்பினை அடித்து அடித்து ஆயுதமாக்கும் சம்மட்டியாக விழுந்துகொண்டிருக்கின்றன.
அண்மையில் ஒரு தேர்தல் பரப்புரையில் தான் இதுவரை பேசிப்பேசி தொண்டைகட்டி அவஸ்தைப்படுவதையும் பொருட்படுத்தாது தனது மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசுவதாக கூறியிருந்தார். இதனை சீமான் சொன்ன வார்த்தையில் கூறுவதனால் “சத்தமாக பேசாத நீ செத்துபோயிடுவ என்கிறான் டாக்டரு. ஆனாலும் அதயும் மீறி நான் கத்துறன், நான் செத்தாலும் நீ வாழ்தால் போதுமென்று”.
[youtube url=” https://www.youtube.com/watch?v=SoCtrNIXB_Y” width=”500″ height=”300″]
ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக இந்த தமிழகத் தேர்தலை கருதி உலகெங்கும் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சீமானின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தமிழகமெங்கும் விழிப்புணர்வுடன் மக்களை வாக்களிக்கச் செய்வற்கு குறைந்தபட்சம் தமது சமுக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் சாதனங்களூடக இருக்கின்ற ஆறே ஆறு நாட்களில் மேற்கொள்ளும் தார்மிகப் பணியை சுமந்து நிற்கின்றனர்.
உலகம் முழுவதிலும் தமிழ் மக்கள் இன்று அகதிகளாகவும், அனாதைகளாகவும், ஏதிலிகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஈழத்திலே வெளிவந்த
“உயிர்த்தல்” எனும் சஞ்சிகையில் பின்னர் மாவீரரான ஒரு போராளி எழுதிய கவிதையின் சில வரிகளை நினைவுகூர்வது சாலப் பொருத்தமானது.
அடக்கு முறையும் ஒடுக்கு முறையும்
எம் அடுத்த தலைமுறைகள்
சந்திக்கக்கூடாத
சரித்திர வடுக்கள் !




