பாராளுமன்றத்தில் காட்டு தர்பார்
– தாயகன்-
நாட்டில் சட்டங்களை உருவாக்கும் உயர்சபையான பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை எம்.பி.க்கள் இடையே இடம்பெற்ற மோதல்களைப் பார்த்து முழு நாடுமே வெட்கித் தலைகுனிந்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக அரசாங்கம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகம் என்பன திகழ்கின்றன. இதில் பாராளுமன்றத்தின் பங்கு மிகப்பெரியது. பாராளுமன்றமே நாட்டின் சட்டவாக்க சபையாக அதாவது சட்டங்களை உருவாக்கும் உயர்சபையாக உள்ளது. அரசாங்கத்தின் உயர் சபையான பாராளுமன்றம் பொதுமக்களின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் மன்றமாகவும் உள்ளது.
பாராளுமன்றம் பொதுவாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 196 உறுப்பினர்களையும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படும் 29 உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
தற்போதைய 8 ஆவது பாராளுமன்றத்தில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் 106 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 95 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் தலா ஒரு உறுப்பினருமாக 225 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 225 உறுப்பினர்களில் 13 பேர் பெண்கள். 67 பேர் கடந்த ஆண்டே முதல் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய முகங்கள்.
பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் முறைகள், அவர்களுக்கு உரிய சிறப்பு சலுகைகள், நிலையியல் கட்டளைகள் அரசியல்அமைப்பு மற்றும் பாராளுமன்ற மரபுகள் தொடர்பில் செயலமர்வுகள் நடத்தப்படுவதுண்டு. ஏனெனில் பாராளுமன்றத்தின் கண்ணியத்தை ஒவ்வொரு உறுப்பினர்களும் காக்க வேண்டும் என்பதற்காவே அவர்களுக்கான செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் எத்தனை செயலமர்வுகளில் பங்கேற்றாலும் சபைக்குள் எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் முறை மக்களை முகம் சுழிக்கவே வைக்கிறது.
இதுவரை காலமும் பாராளுமன்றத்திற்குள் நடக்கும் காட்டுத ர்பார்கள், அசிங்கங்கள், அட்டகாசங்கள், அடிதடிகள், அருவருப்பான பேச்சுக்கள் வெளியே வருவதுமில்லை, தெரிவதுமில்லை. ஆனால் தற்போது பாராளுமன்ற அமர்வுகள் தொலைக்காட்சிகள் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இதனாலேயே கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கட்டிப்புரண்டு போட்ட சண்டைகளை பார்த்து மக்கள் அதிர்ந்து போயுள்ளதுடன் அருவருப்பும் அடைந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இவ்வாறு சண்டையிடுவது தமது மாகாணத்தினதோ பிரதேசத்தினதோ அல்லது தம்மை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்காகவோ அல்ல. பந்தம் பிடிப்புகளுக்காகவும் பந்தா காட்டுவதற்காகவும் தம்மை பாராளுமன்றத்தில் ஹீரோக்களாகக் காண்பிப்பதற்காகவுமே பல எம்.பி.க்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.
அதிலும் தற்போது புதிய முகங்களாக உள்ள 67 பேரில் பலர் இள வயதினராகவும் நகர சபை, மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்தவர்களுமாகவே உள்ளதனால் அந்த சபைகளில் எப்படி நடந்துகொண்டார்களோ அதுபோன்றதொரு சபை என்ற உணர்விலேயே நாட்டின் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்திலும் அநாகரிகமாக, அருவருப்பாக நடந்து கொள்கிறார்கள்.
எம்.பி.க்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு அவர்களின் கல்வித் தகைமையும் பிரதான காரணமாக உள்ளது. தற்போது ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் பண பலமும் ஆட்பலமும் இருந்தால் போதும். அவர் அரசியல்வாதியாகி விடலாம். அல்லது அவர் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மிக இலகுவாக அரசியல்வாதியாகிவிடலாம். அரசியல்வாதியாவதற்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை. அதிலும் முக்கியமாக கல்வித் தகைமை என்பது தேவையே இல்லை.
ஒருவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக வேண்டுமானால் அரசியலமைப்பின் 91 ஆம் அத்தியாயத்தின் படி ஐந்து தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் அந்த ஐந்திலும் கல்வித் தகுதி குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 225 பேரில் 94 க்கு மேற்பட்டோர் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கூட சித்தி பெறாதவர்களாக உள்ளனர். இன்னும் பல உறுப்பினர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்றாலும் பல்கலைக்கழகம் செல்லாதவர்களாக உள்ளனர். அரச துறையில் துப்புரவு தொழிலாளியாக இணைவதற்கு கூட க.பொ.த. சாதாரண தர கல்வித்தகைமை கேட்கப்படும் நிலையில், நாட்டை நிர்வகிக்கும் பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆவதற்கு எந்தவித கல்வி தகைமையும் கேட்கப்படாமை இந்த நாட்டின் சாபக்கேடென்றே சொல்லவேண்டும்.
பாராளுமன்றத்தில் இருப்போரில் பலர் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாகவும் போதைவஸ்து வியாபாரிகளாகவும் பாதாள கோஷ்டி தலைவர்களாகவும் எதனோல் வியாபாரிகளாகவும் ஊழல், மோசடி பெருச்சாளிகளாகவும் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களாகவுமே உள்ளனர்.
இவ்வாறான நிலையில் எப்படி அவர்களிடம் ஒழுக்கத்தையோ அல்லது பாராளுமன்ற மரபுகளை மதிக்கும் பண்புகளையோ எதிர்பார்க்கமுடியும்? இதனால்தான் பாராளுமன்றத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை அடிதடிகளுக்கும் அருவருப்புகளுக்கும் குறைவில்லாமல் உள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை எம்.பி.க்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்தான் முதல் மோதல் அல்ல. இதற்கு முன்னரும் பல மோதல்கள் இடம்பெற்று பலர் காயமடைந்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 1989 ஆம் ஆண்டு வாசுதேவ நாணயக்கார எம்.பி. சபையில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதுடன் பெண் எம்.பி. ஒருவரினால் செருப்பாலும் அடிக்கப்பட்டார். அதற்கு பின்னர் சபாநாயகர் தெரிவின் போது ஏற்பட்ட மோதல்களில் ஹெல உறுமயவை சேர்ந்த பிக்குகள் கூட அரச தரப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். பிரிட்டனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறி ஐ.தே.க. எம்.பி.யாக இருந்த டாக்டர் ஜயலத் ஜெயவர்தன கூட மகிந்த அரசின் அமைச்சர்களால் சபைக்குள் வைத்தே தாக்கப்பட்டார். கடந்த வருடம் கூட ஐ.தே.க. கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் சபைக்குள் வைத்து இதே மகிந்த ஆதரவு பொது எதிரணியினரால் தாக்கப்பட்டார். இவ்வாறு பல சம்பவங்களை எடுத்துக்கூற முடியும்.
ஆனால் அரசியல் ஆதாயங்கள் கருதி, இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. அதனாலேயே எம்.பி.க்களும் பயமின்றி பாராளுமன்றத்தில் காட்டுத்தர்பார் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல்களில் பலர் ஈடுபட்டிருந்தபோதிலும் கூட முதலில் தாக்கியவருக்கும் அவரை தாக்க தூண்டியவருக்கும் மட்டுமே பாராளுமன்ற அமர்வுகளில் ஒருவார காலத்திற்கு பங்கேற்க சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தடை கூட தவறானதென்பதே சம்பந்தப்பட்ட உறுப்பினர்களினதும் அவர்களினது கட்சிக்காரர்களினதும் வாதமாக உள்ளது. அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை பார்த்தால் எத்தனை பேர் தாக்குகிறார்கள் என்பதை தெளிவாக கண்டுகொள்ள முடியும். ஆனால் இருவருக்கு மட்டுமே மிகச் சிறயளவிலான தண்டனை கொடுக்கப்பட்டு விடயம் அத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவத்தைவிட வியாழக்கிழமை நடந்த சம்பவம் இன்னும் சற்று மோசமானதாகவே இருந்தது. அதாவது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை ஒன்று தொடர்பான வாக்கெடுப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தவறான முடிவை அறிவித்ததாக கூறி மகிந்த ஆதரவு பொது எதிரணி எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் சபா பீடத்தில் உள்ள இருக்கைக்கு சென்ற அவர்கள் அவரின் மேசைகளில் இருந்த ஆவணங்களை கிளறி எறிந்ததுடன் அவரின் கைகளில் இருந்த ஆவணங்களை மிக ஆவேசமாக பறித்தெடுத்தனர். அத்துடன் மிகவும் மோசமான தூஷணை வார்த்தைகளினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை தூற்றினர். இதன்போது உதவி பாராளுமன்ற செயலாளர் நாயகமான பெண்மணியும் அவ்விடத்தில் தலையை கவிழ்ந்தவாறு இருந்தார். அவருக்கு முன்பாகவே எம்.பி.க்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். அதுமட்டுமன்றி அதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அவரை மிரட்டி வீடியோ பதிவுகளை தாமே பரிசோதித்துள்ளனர். ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட எம்.பி.க்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை மிரட்டி கெட்டவார்த்தைகளால் பேசும் அளவிற்கு பாராளுமன்றத்தினதும் உறுப்பினர்களதும் தரம் மிகவும் தாழ்ந்துபோயுள்ளது.
பாராளுமன்றம் முன்னைய காலங்களில் படித்தவர்களினாலும் பண்பானவர்களினாலும் நிறைந்திருந்தது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும் அரசியல் அனுபவம் கொண்டவர்கள் பலர் இருந்ததால் பாராளுமன்றத்திற்கு ஒரு கௌரவம் இருந்தது. ஆனால் இன்று பாராளுமன்றம் வந்துவிட்டால் தாங்கள் தான் தலைவர்கள் என நினைப்போரும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாதென நினைப்போரும் பாராளுமன்றத்தின் கௌரவம், மரபுகள் தெரியாதோரும் ரவுடித்தனம் செய்வோரும் குற்றச் செயலுடன் தொடர்பு பட்டோரும் பெருமளவில் இருப்பதாலேயே இன்று பாராளுமன்றம் தன் கௌரவத்தை இழந்து கொண்டு வருகிறது.
இனிவரும் காலங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரப்போகின்றவர்கள் இதைவிட மோசமானவர்களாகவே இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது. எனவே, இவ்வாறான அடாவடித்தனங்களில், அருவருப்பான செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்காது விட்டால், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பாராளுமன்றம் சிதைவடைந்துவிடும். நாட்டில் சட்டங்களை உருவாக்கும் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் அச்சட்டங்களை உருவாக்கும், அங்கீகரிக்கும் கௌரவ பதவிகளை கொண்ட உறுப்பினர்கள் காடையர்கள் போல் நடந்து கொள்வதை இந்த நாட்டு மக்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது. இனிவரும் காலங்களிலாவது தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது அவர்களின் பின்புலங்களையும் கல்வித்தரங்களையும் அரசியல் அனுபவங்களையும் மக்கள் அலசிப்பார்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களின் பண பலத்தையும் அடியாள் பலத்தையும் பார்த்து புள்ளடி போடுவார்களாக இருந்தால், இந்த நாடு ஒருபோதும் உருப்படப்போவதில்லை.
அதுமட்டுமன்றி பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை , மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கல்வித் தகைமையை கட்டாயமாக்க வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் சேவை செய்ய கல்வித்தகைமை அவசியம் இல்லை என கூறியே இதுவரை காலமும் பலர் அரசியலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வாறானவர்களிடம் இருந்த பண்பு தற்போதைய கல்வியறிவு அற்ற உறுப்பினர்களிடம் இல்லாததனால் கல்வித்தகைமையை கட்டாயமாக்கியே தீரவேண்டும். கல்வித்தகுதி கட்டாயமாக்கப்பட்டால் மட்டுமே எமது நாட்டில் ஓரளவிற்கேனும் தரமான அரசியல்வாதிகளை மக்கள் தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும் அல்லாதுவிட்டால் நாட்டின் உயர் சபையான பாராளுமன்றமே குற்றவாளிகளினதும் சமூக விரோதிகளினதும் பாதாளக் குழுக்களினதும் கூடாரமாகிவிடும்.




