செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து பேசுவதை கைவிட்டுவிட்டோம்- சம்பந்தன்

த இந்து

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து சனிக்கிழமை பொதுநிகழ்வில் கலந்துகொள்ளவிருந்தனர். இந்த சந்திப்பு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்ற தினத்தில் இடம்பெறவிருந்தமை குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய ஓரு விடயம்.

40 வருடங்களிற்கு முன்னர் தமிழீழ கோரிக்கையை ஆதரித்தவர்களில் தற்போதைய இலங்கை எதிர்கட்சி தலைவரும் ஒருவர். அவர் அவ்வேளை தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர். அதேவேளை ஜனாதிபதி சிறிசேனா அவ்வேளை வலுவான பிரதமாராக காணப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டிருந்தார்.

தமிழ் ஈழத்திற்கான புனித போர்

வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் ஈழத்திற்கான புனித போராட்டம் குறித்து தெரிவித்திருந்தது. தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வந்த அமைதியின்மைக்கு மத்தியில் வடகிழக்கை உள்ளடக்கிய இறைமையுள்ள தேசத்திற்கு ஆதரவாகவே அவ்ட்டுக்கோட்டை தீர்மானம் புனிதப்போர் குறித்து குறிப்பிட்டது.

எஸ் ஜே செல்வநாயகத்தின் இலங்கை தமிழ் அரசுக்கட்சி, ஜிஜி பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,எஸ் தொண்டமானின் அகில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை அங்கம் வகித்திருந்த தழிழர் விடுதலைகூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது.

“எனினும் 1987 இல் இந்திய இலங்கை ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரசமைப்பிற்கான 13 வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நாங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து பேசுவதை கைவிட்டுவிட்டோம். நாங்கள் அந்த தீர்மானத்தின் நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டோம்” என இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இந்துவிற்கு தெரிவித்தார்.

குறிப்பிட்ட தீர்மானத்துடன் தொடர்புபட்டிருந்த பெரும்பான்மையான கட்சிகள் ஐக்கிய பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வை காண்பதற்கு இணங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய சம்பந்தன் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான தற்போதைய முயற்சிகள் தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவைகொண்டுவரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். தமிழ் மக்களிற்கு அதிகளவான அதிகாரபகிர்வும் அதிகளவு சுயாட்சியும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

சிங்கள பௌத்த தலைவர்களால் மிதவாதியாக கருதப்படும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே எனினும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும் சமீபத்தில் வடமாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கும் இடையில் ஓற்றுமையுள்ளதாக தெரிவிக்கின்றார். எனினும் சாதாரண மக்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்தே அதிககரிசனை கொண்டுள்ளனர் வேறு எந்த விடயம் குறித்தும் இல்லை என அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இடம்பெற்றுள்ள கடும்போக்குவாதிகளில் ஓருவர் என கருதப்படும் சிவாஜிலிங்கம் வட்டுக்கோட்டை தீர்மானம் தற்போதைய சூழலிற்கும் பொருத்தமானது என தெரிவித்தார்.

எனினும் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச அணியை பிரதிநிதித்துவம் செய்யும் உதய கம்மன்பில வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழ் அரசியல் அதிலிருந்து சிறிதளவு கூட விலகவில்லை என தெரிவித்தார்.