லண்டனில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு: பெருமளவில் மக்கள் பங்கெடுப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வை அனுஷ்டிக்கும் பொருட்டு பேரணி ஒன்றும் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றன. இந்த இரு நிகழ்வுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு தமது அஞ்சலிகளை செய்தனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்த பேரணி மாலை 3 மணி அளவில் லண்டன் வாட்டலூ பகுதியில் ஆரம்பமாகி மாலை 5 மணியளவில் ரிச்மொண்ட் தெரஸ் பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் பல்வேறு வடிவங்களிலுமான இனப்படுகொலைகளை கண்டிக்கும் வாகையிலும் பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகளை மக்கள் தாங்கி வந்ததுடன் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பிவந்தனர். தொடரும் இனப்படுகொலைகளை சித்திரிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்வுகளும் வீதிகளில் நடைபெற்றன.
பேரணியின் முடிவில் கூட்டம் நடைபெற்றது.
இதேவேளை, தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நினைவுகூரல் நிகழ்வு மாலை 5 மணிக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் வாசஸ்தலத்துக்கு முன்பாக நடைபெற்றது. ஏராளமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளை செய்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்களும் இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், தொடரும் இனப்படுகொலைகள் மற்றும் கொடூரங்களை கண்டிக்கும் வகையிலான பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர். இந்த ஒன்றுகூடலில் பல முக்கியஸ்தர்கள் உரையற்றியதுடன் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.






















