செய்திகள்

அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசு தயாராக இருந்திருக்கவில்லை: ஜே.வி.பி குற்றச்சாட்டு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் நிவாரணம் வழங்கக அரசாங்கம் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல் அரசாங்கம் துரித கதியில்  நஷ்ட ஈடு வழங்க முறையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்ததிப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை இயற்கை அனர்தங்கள் ஏற்படுவது இது ஒன்றும் முதல் தடவையல்ல. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோதும் மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்டபோதும் கடந்த அரசாங்கங்கள்  மீண்டும் இவ்வாறான பேரவலங்கள் நாட்டில் இடம்பெறாது என்றே தெரிவித்து வந்தன.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அனர்த்தம் குறித்து அரசாங்கம் எந்தவொரு தயார் நிலையிலும் இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.  இயற்கை அனர்த்தங்கள் என்பது உடனுக்குடன் இடம்பெறுபவை என்பதால் அரசாங்கம் எந்நேரத்திலும் தயார் நிலைமையில் இருப்பது அவசியமாகும். அதற்கான ஆயத்தங்களை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். எனினும், அரசாங்கம் அதனை செயத்தவறியுள்ளது.

அதேநேரம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மட்டுமே நிவாரணங்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதே ஒழிய பாதிக்கப்பட்ட ஏனையோருக்கு எந்தவொரு உதவியும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட படகுகளுக்கு எண்ணெய்  பற்றாக்குறை நிலவியதாகவும் கூறப்படுகின்றது. இவை மட்டுமன்றி அனார்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனியும்  இவ்வாறான செயற்பாடுகளை விடுத்து பாதிக்கப்பட்ட சகல தரப்பிற்கும் பாரபட்சம் பாராது நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
03