செய்திகள்

இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரமின்றி உள்ளபோது புரட்சி என்பது சாத்தியமல்ல! த.சித்தார்த்தன் எம்.பி

இலட்சக்கணக்கான எமது மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி உள்ளபோது புரட்சி என்பது சாத்தியமில்லை என யாழ் மாவட்ட பாராளுமன் உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

புளொட் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பு வவுனியாவில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் எல்லாம் தங்களுடைய கட்சிகளை பலப்படுத்தும் செயற்பாட்டை செய்து வருகின்ற போது அது தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒட்டுமொத்தமாக பலப்படுத்துமா என்ற பயம் மக்கள் மத்தியிலே இருக்கின்றது. இருந்தபோதிலும் மற்றைய கட்சிகள் தங்களுடைய கட்சியை பலப்படுத்தும் போது எங்களுக்கும் அந்த ஒரு தேவை இருக்கின்றது.

இந்த நேரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடைந்து விடாமல் நாங்கள் ஒவ்வொருவரும் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். சில கட்சிகள் தங்களுடைய கட்சிகளை பலப்படுத்துவது மாத்திரமல்ல மற்றைய கட்சிகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை செய்துவருகின்றமை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் பலன் அளிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டையும் எங்கள் கட்சி எடுத்துள்ளது.

கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இல்லாவிட்டால் அரச தரப்பினர் தீர்வில் இருந்து மிக இலகுவாக தப்பிக்கொள்வதற்கும் தமிழர்கள் அதனூடாக பாதிப்படைவதற்குமான நிலைமையை உருவாக்க கூடாது. எல்லோரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து அதனூடாக நகர்வதனூடாகவே நியாயமான அரசியல் தீர்வை நோக்கி நாம் சரியாக செல்ல முடியும் என நம்புகின்றோம். இந்த அரசோ அல்லது தெற்கு அரசியல் கட்சிகளோ தீர்வை தருவதற்கு தயாராக இருக்கின்றனர் என நான் நம்பவில்லை. அவர்கள் எமது பிரச்சனையில் பெரிய அக்கறையை காட்டுவதாகவும் நான் நம்பவில்லை. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் உள்ள வேறுபாடுகளை அவர்கள் சாட்டாக பாயன்படுத்த விடக்கூடாது.

எனவே அடிப்படையில் அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை பிரச்சனைகளாக பார்க்கக்கூடிய இராணுவ ஆக்கிரமிப்புகள், பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைத்தல், காணாமல்போனோர் விடயங்கள், சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் 130 பேர் மாத்திரமே இருந்தாலும் கூட அவர்களில் ஒருவர் கூட அங்கு இருக்ககூடாது என்கின்ற விடயங்கள் மற்றும் பல ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட முன்னாள் போராளிகள் எவ்வாறு தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வது என்று தெரியாது இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. எனவேதான் நாம் எமது மாநாட்டிற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகளை வரவழைத்து இந் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறியிருக்கின்றோம்.

ஏனெனில் புலம்பொயர் தமிழர்கள்தான் இந்த மக்களின் அடிப்படை தேவைகளை பொருளாதார ரீதியில் உயர்த்தக்கூடிய ரீதியில் உள்ளனர். ஏனெனில் அரசை பொருத்தமட்டில் பெரியளவில் எதனையும் செய்யவில்லை. ஆகவே நாம் இவர்களிடம் கோரிக்கை வைப்பதனூடாக அந்தந்த நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பிரச்சனைகளை கூறி எதாவது ஒரு வழியில் உதவகூடியதாக இருக்கும்.

அத்துடன் அரசியல் தீர்வு என்ற விடயத்திலும் ஒன்றுபட்ட வடக்கு கிழக்கில் சமஸ்டி தீர்வ என்ற எங்களை நாங்களே மத்திய அரசின் தலையீடு இன்றி பார்க்க கூடிய வகையில் அதிகாரபகிர்வு வரவேண்டும். அதற்கான அழுத்தத்தையும் புலம்பெயர் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு கொடுப்பதனூடாக அத்தலைவர்கள் இந்த நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து சாதகமான நிலையை உருவாக்க வேண்டும்.

வறுமைக்கோட்டினுள் வாழும் மக்கள் பெரும் தொகையாகவும் நசுக்கப்பட்டு அல்லது ஒடுக்கப்பட்ட மக்களாகவும் நீண்டகாலமாக எமது மக்கள் வாழும் நிலை காணப்படுவதனால் அவர்களை சமூக ரீதியாக முன்னேற்றப்படுத்த வேண்டிய கடமை எங்களிடம் நிறையவே இருக்கின்றது. இந்த நிலையில் நாம் முதலாளித்துவ சக்திகளுக்கு துணைபோகமாட்டோம். எனினும் இன்று தமிழ் மக்கள் இருக்கும் நிலையில் அவர்களது அடிப்படை அரசியல் உரிமையை பெற்றுக்கொடுக்கவேண்டிய கடமை நிச்சயமாக எங்களுக்கு இருக்கின்றது.

ஆரம்பகாலத்தில் போராட்டத்தின்போது நாம் மாக்சிஸ கொள்கையை நம்பியிருந்தோம். ஆனால் இன்று இருக்கும் நிலையில் எமது மக்களை பாதுகாக்கவேண்டும். அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவேண்டும். அடிப்படை அரசியல் உரிமைகளை எடுக்கவேண்டும். ஏனென்றால் இன்று இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது அவர்களை ஒரு புரட்சிக்கு தயார்ப்படுத்துவது என்பது நடக்கும் விடயமல்ல. வறிய மக்கள்தான் புரட்சிக்கு வருவார்கள் என்று கூறுவார்கள். ஆனால் நாங்கள் அனுபவப்பட்டு எமது மக்கள் மிக மிக அனுபவப்பட்டு அரசியலை விட வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளபோது அதனை கொடுக்கவேண்டியது எங்களது கடமை. அதனை கொடுப்பதும் ஒரு புரட்சிதான்.

இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா நேரடியான பங்களிப்பை ஆற்றியிருந்தது. 1987 இற்கும் இன்றைக்கும் பூகோளரீதியான பாரிய வேறுபாடு ஏற்பட்டிருக்கின்றது. அன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கொண்டு வந்தநிலைக்கும் இன்றைக்கும் பல நாடுகள் அதாவது அமெரிக்க உட்பட வேறு நாடுகளில் தலையிடுவற்கு விருப்பம் தெரிவிப்பதாக இல்லை. குறிப்பாக இந்தியாவை கேட்டால் அவர்கள் பட்டது போதும் காணும் என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். ஏனென்றால் அவர்களால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அழுல்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு இலங்கையில் ஏற்பட்ட பல மாற்றங்கள் காணரமாக அமைந்தது. குறிப்பாக மகிந்தவை மாற்றுவதற்கு மைத்திரியை ஆதரித்தமையும் மற்றும் முக்கிய காரணமாக எந்தவொரு நாடும் தன்னுடைய நலன் கருதாமல் அடுத்த நாட்டுப்பிரச்சனையில் தலையிடமாட்டார்கள். அவர்கள் தலையிட்டபோது நாங்கள் எங்களுக்காகவே தலையிடுவதாக நம்பியிருந்தோம். அவர்கள் தங்களுடைய நலனுடன் சேர்ந்ததே எங்களுடைய நலனை பார்த்தார்கள். தமிழ் நாட்டில் ஏற்றட்ட அழுத்தமும் அவர்கள் தலையிடுவதற்கான காரணமாகியிருந்தது. இன்று அந்த நிலைமைகளை எல்லாம் மாற்றப்பட்டு அவர்கள் எங்களுடைய பிரச்சனையில் உள்ள அக்கறையை குறைத்துள்ளது.

இந் நிலையில் 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் சார்ந்திருக்கின்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சொல்லியிருக்கின்றார். அவர் மத்தியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்துள்ளது. சர்வதேச நிலைமை சாதகமாக உள்ளது. எனவே தீர்வு கிடைக்கும் என கூறியிருக்கலாம். ஆனால் நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை. எனினும் நாங்களும் அவர் கூறும் கூற்றை அல்லது அவர் எடுக்கும் அந்த முயற்சியை குழப்பக்கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்கின்றோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.
N5