அயல்நாடுகள் எமது நாட்டில் பிரச்சனைகளை வளர்த்து விட்டன: மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்கா
அயல் நாடுகள் எமது நாட்டின் வளர்ச்சியைப் பொறுக்காது பிரச்சனைகரைள வளர்த்து விட்டார்கள். இதனால் யுத்தம் இடம்பெற்று பாதிக்கப்பட்டது நாமே என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்னும் சில காலங்களில் புனர்வாழ்வு அளிக்கும் இந்தப் பணி முடிவடைந்து விடும். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுடன் இணந்து யுத்தத்தில் ஈடுபட்ட 98 சதவீதமானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கபடபட்டுள்ளனர்.
எமது நாட்டில் கடந்த 30 வருட காலமாக யுத்தம் இடம்பெற்றது. அதனால் நாம் இன்று பொருளாதார ரீதியாக பின்னிற்கு நிற்கின்றோம். யுத்தம் இடம்பெற்றிருக்கா விட்டால் எமது நாடு இன்று சிங்கப்பூர் போல் மாறியிருக்கும். இன்று உலகில் பல நாடுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து தமது நாட்டை கட்டியெழுப்பியுள்ளனர். நெல்சன் மண்டேலா 20, 25 வருடங்கள் பிரித்தானியரால் துன்புறுத்தப்பட்டவர். ஆனால் அவர் பழிவாங்க நினைக்கவில்லை. கோபம், பகை அவரிடம் இருக்கவில்லை. இதனால் இன்று ஆபிரிக்கா ஒரு சிறந்த நாடாக மாறியுள்ளது.
1947, 1948 ஆம் ஆண்டுகளில் இரத்தம் சிந்தாது அகிம்சை வழியில் நாம் எமது உரிமைகளை பெற்றிருந்தோம். இந்தியா கூட ஒரு காலத்தில் எம்முடன் சமமாக நின்ற நாடு. இன்று பொருளாதாரத்தில் அந்த நாடு வளர்ச்சியடைந்து அதன் நாயணப் பெறுமதி எமது நாட்டு நாணயப் பெறுமதியை விட உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து எமது நாட்டிற்கு மோட்டர் வாகனம்இ கார் என பல உற்பத்திப் பொருட்கள் வருகின்றது. அதையே நாம் இன்று வாங்கிப் பயன்படுதுகின்றோம். இந்தியா பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு வேறு வேறு மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களின் ஒருமைப்பாடு, கூட்டாக செயற்படும் திறன், சாந்தி, சமாதானமே இந்த வளர்ச்சிக்கு காரணம்.
ஆனால் எமது நாடு ஒரு சிறிய நாடு. சனத்தொகை குறைவு, 9 மாகாணாங்கள் தான் இருக்கிறது. பரந்த பிரதேசங்கள் இருந்த போதும் முள்ளியவாய்காலில் 3 இலட்சம் மக்கள் தான் இருந்தார்கள். ஆகவே நிலப்பரப்பு அதிகமாகவுள்ளது. மக்கள் தொகை குறைவு. எமது நாட்டில் பல இடங்களில் வளங்களும் இருக்கின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற ஐரோப்பியர்கள் இங்கு வந்தமைக்கு எமது பிராந்திய நிலையமே காரணம். நாம் ஏனைய நாடுகளுக்கு ஒரு முக்கியமான இடத்தில் இருக்கின்றோம். ஒவ்வொரு நாடுகளும் தங்கள் தங்கள் நடவடிக்கைக்கு எம்மை பயன்படுத்துகிறார்கள். வெளிநாடுகளின் தவறான நடத்தைகளால் எமது நாட்டில் யுத்தம் நடந்து இன்று கல்விஇ பொருளாதாரம் என பல துறைகளும் சிரழிந்த நிலையில் உள்ளது.
யுத்த அழிவுகள் முள்ளியவாய்கால் வரை ஏற்பட்டது. இதற்கு காரணம் என்ன? அயல்நாடுகள் எமது நாட்டின் வளர்ச்சியைப் பொறுக்காது பிரச்சனைகளை வளர்த்து விட்டார்கள். இதனால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம். அரபு நாடுகளில் வளம் இருந்தாலும் அவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஐஎஸ் போன்ற பல தீவிரவாத அமைப்புக்கள் இருக்கின்றது. ஆனால் எமது நாட்டில அவ்வாறான நிலமை இல்லை. எனவே 2009 மே மாத்திற்கு பின் இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல அபிவிருத்திகள் ஏற்பட்டு வருகிறது. புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் பொருளாதார ரீதியாக உயரக் கூடிய வகையில் பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு பொருளாதார ரீதியாக எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
N5




