இந்து கோவில்கள் ஒரு கட்டுக் கோப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: வடக்கு முதலமைச்சர்
இந்துக் கோவில்கள் ஒரு கட்டுக் கோப்பின் கீழ் கொண்டு வரப்படப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவும் ‘இந்து ஒளி’ வைர விழா சிறப்பு மலர் வெளியீடும் நிகழ்வும் நல்லூர் ஆதீனம் கலா மண்டபம் இன்று இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
1955ல் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை இந்து மாமன்றம் பல அறிவாளிகளினதும் சமயப் பற்றாளர்களினதும் இடைவிடா முயற்சிகளின் காரணமாக பலவித இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் மத்தியில் அரிய பல சாதனைகளைப் புரிந்து இன்று 60வது வருட நிறைவு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிடப்பட இருக்கும் ‘இந்து ஒளி’ வைரவிழா சிறப்பு மலர் வெளியீட்டில் உங்கள் முன் உரையாற்றுவதில் பெரு மகிழ்வடைகின்றேன். இந்து மாமன்ற கூட்டங்கள் பலவற்றில் பங்கு பற்றியிருக்கின்றேன். ஆனால் இன்றைய பேச்சோ பல்வித வேலைப்பளுக்களின் மத்தியில் நடந்தேறுகின்றது. சுதந்திரமாய் சுற்றித்திரிந்த என்னை சுமைதாங்க வைத்துவிட்டார்கள் எம்மவர்கள். எனினும் உங்களுடன் சேர்ந்து இந் நிகழ்வில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
எங்கள் சமயப் பயணத்தில் ஒரு மைல்க் கல்லாக விளங்கக் கூடிய இந்து மாமன்றம் சாதித்தவைகள் எவை என யாழ்ப்பாணத்தில் இருக்கும் எம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். எங்கள் சமயிகள் வாழும் இடங்களில் எல்லாம் புதிய புதிய இந்து தொண்டு நிறுவனங்கள், இந்து தர்ம இல்லங்கள் ஆகியவற்றைப் பார்வையிடுகின்றோம். ஆனால் இவை யாரால் ஸ்தாபிக்கப்பட்டது? எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது? போன்ற விடயங்களை பொதுவாக நாம் ஆராய்வதில்லை.
இன்று இலங்கையின் பல பாகங்களிலும் பொதுவாக தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் பல்வித தொண்டு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பற்றி இந்து மாமன்றத்தின் தலையீடுகளோ, அல்லது சுய விளம்பரங்களோ இருப்பதாக நான் அவதானிக்கவில்லை. மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வாறு எவ்வித சலனமும் இன்றி உதவி புரிகின்றதோ அதே போன்று இந்து மாமன்றமும் இந்துக்களின் வாழ்வில் இரண்டறக்கலந்து இன்னோரன்ன உதவிகளை எமக்கு ஆற்றிவருகின்றமை போற்றுதற்குரியது.
இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள், கா.பொ.த உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்து சமயம், இந்து நாகரீகம் ஆகிய இந்து சமயம் தொடர்பான சிறப்புப் பாடநெறிகளை முதன்மைப் பாடங்களாகத் தேர்வு செய்து அக் கற்கை நெறிகளில் சிறப்புத் தேர்வுகளையும் பெற்று வெளியேறுகின்றார்கள் என்றால் அதற்கு 1964, 1965ம் ஆண்டுகளில் இந்து மாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளே காரணமாகும் என்பதை மறப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதான குறிக்கோள்களாக இந்து தர்ம அறிவினையும் சாதனையையும் விருத்தி செய்தல், இந்து கலாசாரத்தையும் கல்வியையும் விருத்தி செய்தல், இந்து சமய ஸ்தாபனங்கள்- ஆலயங்கள்- சமய முக்கியத்துவம் வாய்ந்த புராதன நிலையங்கள் முதலியவற்றை அமைத்தல்- பேணுதல்- காத்தல்- புதுப்பித்தல், இந்து ஸ்தாபனங்களை வலுவடையச் செய்வதோடு அவற்றுக்கிடையே அன்னியோன்யத்தையும் ஐக்கியத்தையும் வளரச் செய்தல், இந்து சமய அர்ச்சகர்களுக்கு வேதாகம தத்துவசாஸ்திர அறிவும் பயிற்சியும் அளிக்கும் பொருட்டு சமயசாத்திரக் கல்லூரி நிறுவுதல், இந்து சமூகத்தினரின் நலன்களைப் பாதுகாத்தலும் பொதுவில் காலத்திற்கு காலம் அறிவுரை வழங்குதலும், போன்ற இன்னோரன்ன கடமைகளை வகுத்துக் கொண்டு அவற்றின் அடிப்படையில் இந்து மாமன்றம் இயங்கி வருவது பாராட்டப்பட வேண்டியது.
இந்த நாட்டில் பயிற்சி பெற்ற இந்துக் குருமார்களின் தேவையை உணர்ந்த இந்து மாமன்றம் சிவானந்த குருகுலம் ஒன்றை நிறுவி இந்துக் குருமார்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு திருக்கேதீச்சர திருத்தலத்தில் முயற்சிகளை மேற்கொண்ட போதும் நாட்டில் நிலவிய துரதிஷ;ட நிலை காரணமாக இப்பணியைத் தொடர முடியவில்லை.
கொழும்பில் இந்து இளைஞர்களுக்கான பாடசாலை ஒன்றின் தேவை பற்றி நன்கு உணர்ந்த இந்து மாமன்றம் இரத்மலானையில் உள்ள கொழும்பு இந்துக் கல்லூரியை மீண்டும் இயங்க வைத்தது மட்டுமல்லாமல் அங்கு மாணவர்களுக்கான விடுதியையும் அமைத்து தூர இட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டமை குறிப்பிட்டுக் கூறக் கூடியதொன்றாகும்.
கொழும்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு ஒரு கட்டடம் தேவை என்பதை நன்கு அறிந்த நிர்வாகத்தினர் கொழும்பு 2ல் அமைந்துள்ள சேர் சிற்றம்பலம் எஸ் கார்டினர் மாவத்தையில் 37 பேர்ச் அளவிலான காணியில் ஐந்து அடுக்கு கட்டடம் ஒன்றை அமைத்தது மட்டுமல்லாமல் அதன் ஐந்தாவது மாடியில் தியான வழிபாட்டு மண்டபத்தையும் உருவாக்கி ஏனைய நான்கு மாடிகளையும் குத்தகைக்கு வழங்கியுள்ளார்கள். இதில் பெறப்படும் குத்தகை வருமானத்தின் மூலமும் வேறு வருமானங்களின் மூலமும் பல சமயப் பணிகள் முன்னெடுக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றுள் சிலநல்லூர் கோவில் வீதியில் 2.7 பரப்பளவு காணியில் இந்து ஆராய்ச்சி மையமும் நூலகமும் இணைந்த ஒரு கட்டடத்தை அமைத்தமை, யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதிக்குச் செல்லுகின்ற அடியார்களுக்கெல்லாம் வயிறார உணவு கொடுத்து வாழ்த்தி அனுப்புகின்ற சிவபூமி மண்டபம் அமைத்தமை,
வவுனியாவில் அமைந்துள்ள சிந்தாமணிப் பிள்ளையார் மடத்திற்கான கட்டடச் செலவின் ஒரு பகுதியை ஏற்றமை, மட்டக்களப்பு லு.ஆ.ர்.யு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதியோர் இல்லத்திற்கான மற்றும் அதன் நூலகத்திற்கான கொடுப்பனவின் ஒரு பகுதியை ஏற்றமை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலையடி வேம்பு இந்து மாமன்ற அமைப்பின் பகுதிச் செலவை ஏற்றமை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள சங்கமன்கண்டி முருகன் ஆலய கட்டடப் பணிகளில் ஒரு பகுதியை ஏற்றமை, திருக்கேதீச்சர ஆலய யாத்திரிகர் மண்டப திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளமை, மன்னார் ஞான வைரவர் ஆலய ராஜ கோபுரத்திற்கான நிதி போன்ற மேலும் பல திருப்பணிகளுக்கு இந்து மாமன்றத்தின் வருமானங்கள் மூலமே நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே வேளையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாரிய இடம் பெயர்வு காரணமாக அல்லலுற்ற எம் மக்களுக்கு இந்து மாமன்றமும் மனித நேய அமைப்பும் ஒன்றிணைந்து 7 கட்டங்களாக உலர் உணவு உதவிகளை சுமார் 8½ இலட்சம் ரூபா செலவில் எம் ஊடாக வழங்கி உதவியமையை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
மேலும் சிறுவர் இல்லங்களிலும் வயோதிபர் இல்லங்களிலும் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றையும் திறம்பட நடாத்திவருகின்றது இந்து மாமன்றம்.
இந்துமாமன்றத்தின் சிறப்புக்களைப் பற்றி ஆராய்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்குரிய பாரிய கடப்பாடு ஒன்று இருப்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். இந்துக்களைப் பொறுத்தவரையில் ஆலயம் அமைத்தல், நித்திய பூஜைகள், நைமித்தியங்கள், வருடாந்த மகோற்சவங்கள், விசேட திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகள் ஒரு வரையறையின்றி தாம் தாம் நினைத்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவது வருத்தத்திற்குரியதொன்றாகும். சில நேரங்களில் தடல்புடலாக ஆலயங்களை அமைத்து விட்டு உரியவாறு பூஜைகள் செய்யாது விடப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்துக் கோவில்கள் அனைத்தும் ஒரு கட்டுக்கோப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு அதிக பணச்செலவு அற்ற வகையில் பூஜைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சாதாரண பாமர மக்கள் நடுத்தர வகுப்பினர் என அனைவரும் ஆலயவழிபாடுகளில் சமத்துவமான முறையில் பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ளப்பட வழி வகுக்கப்பட வேண்டும்.
இன்று இந்துக் கோயில்கள் அகந்தையின் பிறப்பிடங்களாக, தனிச்செல்வாக்கின் தங்குமிடங்களாக, குழு ஆதிக்கத்தின் குத்தகை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சுவாமி தங்களுடையது என்று தரமற்றுப் பேசும் அளவுக்கு அவர்கள் அறிவிலிகளாக வாழத் தலைப்பட்டுள்ளார்கள். யாவர்க்கும் பொதுவானவன் இறைவன். அவன் எங்கும் நீக்கமற நிலைத்து நிற்பவன். அவ்வாறான பரம்பொருளை எங்கு தொட்டாலும் அவன் அங்கும் இருப்பான் என்றதால்த்தான் நாங்கள் மந்திரங்கள் கொண்டு அவனை அங்கு விசேடமாக நிலை நிறுத்தி பூஜைகள் செய்து வழிபடுகின்றோம். அவ்வாறு செய்வதால் எங்கும் நீக்கமற நிலைத்து நிற்கும் இறைவன் எங்களுக்கு மட்டும் உரியவனாகி விடமாட்டான். எங்களுக்கும் உரியவனாகத்தான் நாங்கள் இறைவனைப் பார்க்க வேண்டும். அன்புக்குப் பதிலாக ஆணவம் கோயில்களில் தலை தூக்கினால் அங்கு இறைவன் தங்கி நிற்கமாட்டான். வெறும் கற்சிலைகள் தான் தங்குவன. இதனை நாங்கள் யாவரும் உணர வேண்டும்.
அன்பும் நம்பிக்கையுந் தான் இறைவனை ஒரு கோயிலில் நிலைத்து நிற்கச் செய்கின்றது. பூஜைகள் அன்புடன் நடத்தப்பட வேண்டும். கும்பிடுபவர்கள் நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். அவ்வாறில்லையென்றால் அங்கு வெறுஞ் சிலையும் சில்லறைத் தனமுந்தான் மிஞ்சும். சிவன் அங்கு இருக்க மாட்டான். சிவம் அங்கு தங்கமாட்டாது. இதனைப் புரிய வைக்க வேண்டியது உங்கள் கடப்பாடுகளில் ஒன்றாகும். இதுபற்றி இந்துமாமன்றம் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஆலயப் பிணக்குகள் நீதிமன்றப் படிகளுக்குச் செல்லாமல் இருக்க உங்கள் மாமன்றம் நடுத்தீர்ப்பு மையத்தை நிறுவியது. அதனை அறிமுகஞ் செய்து வைத்ததே நான்தான். ஆனால் பிணக்குகள் ஏற்படும் போது ஆலயங்களைச் சார்ந்தவர்கள் நடுத்தீர்ப்புக்கு வர மறுக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றேன். இதற்குக் காரணம் எமது சுயநலந்தான். ஆலயங்களை வைத்துப் பணஞ் சம்பாதிக்க முனைகின்றார்கள் சிலர். கோயில் பணத்தைக் கொள்ளையடிக்கக் கூடத் தயங்கமாட்டார்கள் அவர்கள். இந்நிலை மாற வேண்டுமானால் பொது மக்களின் மனோநிலை மாற வேண்டும். பிழைகள் நடப்பதைக் கண்டும் காணாத மாதிரிஇ கேட்டும் கேட்காத மாதிரி நடந்து கொள்வதை நாம் நிறுத்த வேண்டும். கிராம மட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டால் தனி நபர்களின் தகாத நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.
நடுத்தீர்ப்பு மையத்தை நாடாத மக்கள் மீது கிராமிய மட்டத்தில் நெருக்குதல்கள் தரப்பட வேண்டும். இதற்கு கோயில் வழிபடுவோர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு கோயில் நிர்வாகங்களில் சிரத்தை காட்டலாம். ஊர் மக்களின் கோபத்தைச் சம்பாதிக்காமல் இருக்க அவர்களை நடுத்தீர்ப்பு மையங்களை நாடச் செய்யலாம். இதற்குக் கிராம மட்டத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இவ்வாறான காரணங்களின் பொருட்டில்த்தான் சிவ தொண்டர் அணிகளை நிறுவ முன் வந்தீர்கள். பாடசாலைகளில் மட்டுமின்றி கிராம மட்டத்திலும் சிவதொண்டர் அணிகள் உருவாக வேண்டும். கொள்கை ரீதியாக, மதரீதியாக, மனிதாபிமான ரீதியாக இளைஞர் யுவதிகள் கிராம மட்டத்தில் பயிற்சிகள் பெற உதவி செய்ய வேண்டும். இந்தியாவில் பல இந்து நிறுவனங்கள் இவ்வாறான இளைஞர் மட்ட மறுமலர்ச்சியை ஏற்படுத்தச் சிறந்த வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து பயிற்சிப் பட்டறைகள் நடத்தி எமது கிராம இளைஞர்கள் மத்தியில் சமூக உணர்ச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஆன்மீக எழுச்சியையும் உருவாக்க வேண்டும். இங்கு வணக்கத்திகுரிய மருதாசல அடிகளார் இருக்கின்றார். பேரூர் பெரிய ஆதீன முதல்வரை நான் பல வருடங்களுக்கு முன்னர் சந்தித்திருகின்றேன். இளைஞர்கள் யுவதிகள் மட்டத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தக் கூடியவர் வணக்கத்திற்குரிய மருதாசல அடிகளார் என்று கேள்விப்பட்டுள்ளேன். மற்றுமொருவர்தான் எமது அன்பிற்குரிய ரிஷp தொண்டுநாதன் சுவாமி அவர்கள். இதுவரையிலான இளைய சமுதாய மறுமலர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு மகத்தானது.
இன்று நாடளாவிய ரீதியில் ஒழுக்கமற்ற காடைத்தன ஆயுதக் கலாச்சாரம் ஒன்று கட்டவிழ்த்து விடப்படுள்ளது. இது யாழ்ப்பாணத்தில் மிகவும் கூடுதலாக நடைபெறுவது எம் அனைவரதும் உள்ளத்தைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. இந்த வன்முறைக் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சட்டம் அதன் பொறுப்புக்களைச் செவ்வையுடன் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில் குடும்பங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பாடசாலைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். சிறுவர்கள் சிறுவயதில் இருந்தே ஒழுக்க சீலர்களாக தூய சிந்தனையுடையவராக கல்வியில் மேம்பட்டவர்களாக வாழ்ந்து வர வழி வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவி புரிய வேண்டும். அறநெறிப் பாடசாலைகளை நாடு முழுவதும் உருவாக்கி விடுமுறை தினங்களில், ஞாயிற்று கிழமைகளில் அறநெறி வகுப்புக்களை சமய நிலையங்களில், கோவில்களில் நடாத்தி வருவது மட்டும் போதாது. சகல உயிர்களையும் ஊர்வன பறப்பன முதலியவற்றையும் தம்மைப் போல் நேசிக்க வேண்டும் என்ற சமய தத்துவங்களைப் போதித்தலும் அவசியமாகும். யுத்தமானது எமது மனங்களைக் கல்லாக்கி விட்டது. கரடுமுரடாக்கி விட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திரும்ப வைக்க எமது சமயமானது உறுதுணையாக இருக்க வேண்டும்.
நேற்றைய தினந்தான் நான் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னைய தலைமை ஆசிரியரும்இ பாராளுமன்ற உறுப்பினரும்இ கூட்டுறவாளருமான காலஞ்சென்ற விஸ்வலிங்கம் வீரசிங்கம் ஞாபகார்த்தமாக அஞ்சல்த்தலை ஒன்றை வெளியிட்டு வைத்தேன். அவர் அதிபராக இருந்த காலத்தில் அவர் மிகத் திறமையாகக் கல்லூரி அதிபராகக் கடமையாற்றினார். ஆனால் மாணவர்களை அவர் அன்பால் வென்றார். பிரம்பாலும் அதட்டலாலும் அல்ல. அவர் அதிபர் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு நாள் பாரதூரமான மன்னிக்க முடியாத குற்றச் செயல் ஒன்றைப் புரிந்த மாணவனைக் கூட்ட மேடைக்கு அழைத்தார். சகல மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு இருந்தார்கள். பெரிய ஒரு பிரம்பை வரவழைத்தார். அதனை எடுத்து திடீரென்று அம்மாணவனுக்குச் சவுக்கடி கொடுப்பதற்குப் பதிலாக தன்னைத் தானே சவுக்கடிக்கு உட்படுத்தினார். அந்த மாணவன் உட்பட எல்லோரும் சேர்ந்து அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்ட பின்பே தன்னைத் தான் தாக்குவதை நிறுத்தினார். அதாவது மாணவன் பிழை செய்தமைக்குத் தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டார் என்றும் கூறலாம். மாணவனின் மனம் மாறத் தன்னை ஒறுத்துக் கொண்டார் என்றுங் கூறலாம்.
எவ்வாறு காந்திஜி அந்தக் காலகட்டத்தில் தம்மை வருத்தி ஆங்கிலேயர்களை வசப்படுத்தினாரோ அதே போல் குற்றம் செய்த ஒருவரைத் தன்னைத் தான் தாக்கியதன் மூலம் திருந்த வழி வகுத்தார். அன்பு எம் மனதில் இருந்தால் இவ்வாறாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும். எம் மனங்களிலே அன்பு மேலோங்கினால் சமுதாயந் தானாகவே மறுமலர்ச்சி பெறும் என்பதை நாம் மறத்தலாகாது.
எமது சமூகத்தினிடையே இன்று உடலை வருத்தி உழைத்து முன்னேற வேண்டும் என்ற அந்த உணர்வு பூரணமாக அற்றுப்போய் எந்த நேரமும் .எவரேனும் உதவிகளை வழங்கிய வண்ணம் இருக்க வேண்டும்இ தாம் அவர்களின் உதவியுடன் நன்றாக உணவருந்தி உடை உடுத்தி ஊர் சுற்ற வேண்டும் என்ற புதிய கலாச்சாரம் ஒன்று பிறந்திருக்கின்றது. இதனால்த்தான் நல்ல குடும்பங்களில் பிறந்த மாணவர்கள் கூட உயர் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. என்னிடம் வேலை கேட்டு வரும் இளைஞர்கள் பலரின் குறிக்கோள் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதே. வெளிநாடுகளில் சென்று அவர்களைப் போன்றவர்கள் இங்கு கனவிலும் நினைக்காத தொழில்களை எல்லாம் அங்கு செய்து பணம் அனுப்புகின்றார்கள். இங்குள்ள இளைஞர்கள் அதை வைத்து ஊர் சுற்றுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இங்கே ஒரு வேளை சோற்றுக்கு கூட அல்லற்படுகின்ற எத்தனயோ குழந்தைகள் உணவுக்காக ஏங்கி வாடுகின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் அவர்களின் சுயநலம் அவ்வாறான கொடைகளில் ஈடுபட இடமளிக்காது.
எமது மாணவச் சமுதாயம் உருப்பட வேண்டுமானால் ஒன்றைச் செய்யலாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது பணத்தைத் தம் உற்றார், உறவினர், தம்பி, தங்கைகள் தமது பணத்தைப் பெற வேண்டுமானால் அவர்கள் தமது கல்வியில், நடத்தையில் முன்னேற்றங் காட்ட வேண்டும் என்ற நிபந்தைனையை விதிக்கலாம். ‘நான் படிக்கவில்லை என்றாலும் வெளிநாடு வந்து வேலை செய்து என் வேதனத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு அனுப்புகின்றேன். என்னுடைய உழைப்பு வீண்போகக் கூடாது. இம்முறை வருடப் பரீட்சையில் தம்பி அல்லது தங்கை அல்லது உற்றார், உறவினர் நல்லவாறாக பரீட்சையில் சித்தி அடைந்தால்த்தான் பணம் அனுப்புவேன்’ என்ற நிபந்தனைகளை விதித்து மாணவ மாணவியரை கல்வியில் சிறந்து விளங்கச் செய்யலாம். விளையாட்டில் சிறந்து விளங்கச் செய்யலாம். முன்னேற்றம் காட்டினால்த்தான் முதல் கிடைக்கும் என்ற நிலை வந்தால் மாணவர்கள் ஒரு வேளை தம்மைத் தாமே திருத்தி வாழத் தலைப்படுவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. இப்பொழுது வெளிநாட்டுப் பணம் எம் இளைஞர் யுவதிகளை சோம்பேறிகள் ஆக்குகின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
உழைப்பின் உயர்ச்சியை நாம் உணர வேண்டும். சும்மா கிடைக்கும் பணம் சும்மாவே விரக்தியாகும். சுற்றிப் பார்த்தால் இது புரியும். மாணவ சமுதாயத்திற்கு இந்த உண்மையை நாங்கள் எடுத்துக் கூற வேண்டும். பல சட்டத்தரணிகளை நான் எனது 77 வயது வாழ்க்கையில் பார்த்திருக்கின்றேன். வழக்கு நடைபெற்றால் என்ன நடைபெறாது இருந்தால் என்ன தமது முழு ஊதியத்தையும் வலிந்து வேண்டிக் கொள்வார்கள். குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் அவர்களின் அந்திம காலம், அவர்கள் குடும்பத்தாரின் வாழ்க்கை ஆகியன பரிதாபத்திற்கு இலக்காவதை நான் என் கண்முன்னிலையில்ப் பார்த்திருகின்றேன். உழையாது சேர்க்கும் பணம் உயயோகமற்றுப் போய்விடும்.
எங்கும் எதிலும் நல்லதைக் கண்டு நல்லதைச் செய்து நல்ல காரியங்களுக்கு வரவேற்பளிக்க முனைகின்ற இந்துமாமன்றத்தினரின் வைர விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு ‘இந்து ஒளி’ நூல் வெளியீட்டிலும் பங்குபற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து இத்துடன் என் பேச்சை நிறைவு செய்கின்றேன்.
N5




