தமிழர்கள் நீதியைப் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பேன்: ‘விக்கி’க்கு ஜெயலலிதா உறுதி
“தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன். இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன்” என தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதியளித்திருக்கின்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்திலேயே ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திப்பதற்கான விருப்பத்தையும் இதன்போது ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன். இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னை சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம்என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நல்வாழ்த்துகளுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு ஜெயலலிதா தன்னுடைய கடிதத்தில் கூறியுள்ளார்.
R-06




