செய்திகள்
தென்கொரியாவில் ரொட்டரி கழக மாநாட்டில் ரணில் விசேட உரை
இலங்கையில் போலியோவை முற்றாக ஒழிக்க ரொட்டரி கழகம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவில் நடைபெறும் ரொட்டரி கழகத்தின் 27வது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு உரையாற்றும் போது தெரிவித்தமை வருமாறு,
இலங்கையில் எமக்கு போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை. இரண்டு தசாப்தத்திற்கு அதிக காலமாக எமது நாட்டிலிருந்து போலியோ நோயாளிகள் கண்டறியப்படவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் கடுமையாக மூழ்கியிருந்த சந்தர்ப்பத்திலேயே நாம் போலியோ நோயையும் நாட்டிலிருந்து இல்லாதொழித்தோம்.
ரொட்டரி கழகத்தின் பங்களிப்பு காரணமாகவே அந்த அலுவலை சிறப்பான வகையில் மேற்கொள்ள முடியுமாகியது. விசேடமாக அப்போதைய இலங்கையின் ரொட்டரி கழக அங்கத்தவர்கள் ஆற்றிய பணியே காரணமாகும். ரொட்டரி கழகத்தின் தலைவர் ரவீந்திரனிடமிருந்து அதற்காக பாரியளவிலான அனுசரணை கிடைக்கப்பெற்றது.
1995 ஆம் ஆண்டில் யுனிசெப் அமைப்புடன் இணைந்து ரொட்டரி கழக அங்கத்தவர்கள் சிலர் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.
தேசிய நோய்த்தடுப்பு தினமொன்றை ஏற்பாடு செய்வதே அவர்களின் தேவையாக இருந்தது. அப்பணிக்காக ஒன்றரை மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். ஒரே தடவையில் முழு நாட்டிற்கும் போலியோ தடுப்பு மருந்தை வழங்குவதற்காக, மீதிச் செலவை அரசாங்கத்தினால் மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அக்கருத்து சிறந்ததாக இருந்ததனால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். ஆனாலும் வடக்கு, கிழக்கில் மோதல் நிலவும் பகுதிகள் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் காணப்படாமையினால் அப்பிரதேசங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது நடைமுறைச்சாத்தியமற்ற விடயமென அந்த அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள். அதனால் மோதல் நிலவும் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் பிள்ளைகளுக்கு இந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்க முடியுமென அவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் ரொட்டரி கழக அங்கத்தவர்கள் அதற்கு இணக்கத்தை தெரிவிக்கவில்லை. இந்தச் செயற் திட்டத்திற்காக ரொட்டரிக் கழகத்தின் நிதி செலவு செய்யப்படுவதனால் அதனை நாட்டின் ஒரு பகுதிக்கு மாத்திரம் பயன்படுத்துவது பொருத்தமில்லையென அவர்கள் தெரிவித்தனர்.
ரொட்டரி கழக அங்கத்தவர்களின் தலை குழம்பி விட்டதாக அமைச்சின் அதிகாரிகள் உணர்ந்தார்கள். “இந்த நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறுவது உங்களுக்குத் தெரியாதா, எமக்கு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆட்சியதிகாரம் இல்லை. எனவே நீங்கள் எமக்கு என்ன செய்யுமாறு கூறுகிறீர்கள்?” என்று வினவினர்.
அப்போது ரொட்டரி கழகத்தின் தலைவர் ரவீந்திரன், “அது குறித்து கவலைப்பட வேண்டாம், நாம் யுத்தம் குறித்து பார்த்துக் கொள்கிறோம்” என்று பதிலளித்தார்.
இறுதியில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அவர்களுக்கு இணக்கம் தெரிவித்தனர். “உங்களால் யுத்தத்தை நிறுத்த முடியுமாயின் எம்மால் முழு நாட்டுக்கும் தடுப்பு மருந்தை வழங்க முடியும்” என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்பு, ரொட்டரி கழகத்தின் தலைவர் ரவீந்திரன் தனது அலுவலகத்திற்கும், யுனிசெப் அலுவலகத்திற்கும் கிடைத்த கடிதமொன்றை எடுத்துக் கொண்டு வந்தார். அது வடக்கு எல் ரீ ரீ ஈ யினர் அனுப்பிய கடிதமாகும். அதில் “தேசிய நோய்த்தடுப்பு தினமன்று உங்களது அரசாங்கம் ஆயுதங்களைக் கீழே வைப்பதற்கு தயாரானால் நாமும் ஆயுதங்களைக் கீழே வைத்து போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதற்குத் தயார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி போர்நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட்டது.
அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தனர். நாமும் எமது ஆயுதங்களைக் கீழே வைத்தோம். ரொட்டரி உறுப்பினர்கள், யுனிசெப், செஞ்சிலுவை மற்றும் ஏனைய சுகாதார செயற்பாட்டாளர்கள் ஜீப் வண்டிகளில் வெள்ளை கொடியைப் பறக்க விட்ட நிலையில் அது வரைக்கும் வடக்கு கிழக்கில் எவரும் செல்வதற்கு அஞ்சிய பிரதேசங்களுக்குச் சென்றனர்.
அந்த மோதல்கள் நிறுத்தப்பட்ட காலத்தின் பெறுபேறாக எமக்கு போலியோ அற்ற இலங்கையொன்று கிடைக்கப் பெற்றது. அந்த பதற்றமற்ற சில நாட்கள் மற்றும் தேசிய நோய்த்தடுப்பு தினம் என்பன அதனை விடவும் அதிகமான ஏதோ ஒன்றை எமக்கு உணர்த்தியது.
எமக்கு எதிர்பார்ப்பொன்றைத் தந்தது. அது என்னவெனில், நாம் ஒருவருக்கொருவர் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் செயற்படும்போதுகூட எமது பிள்ளைகள் மீது அன்பு வைத்துள்ளோம் என்பதாகும்.
உங்களது தலைவர் ரவீந்திரன் இல்லாவிடின் இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்காது. மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்காக போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்த அவர் சிறப்பான பணியை ஆற்றினார். அவர் எதிர்பார்ப்புகளைக் கைவிடவில்லை.
உளப்பூர்வமான நேர்மைத்தன்மையை வெளிப்படுத்தி போலியோ தடுப்பு மருந்து வழங்கும் செயற்றிட்டத்திற்கு நடவடிக்கை எடுத்தார். அவ்வாறான நபர்களை இந்த சமூகத்தில் அரிதாகவே கண்டுகொள்ள முடியும்.
இலங்கை மோதல்கள் மற்றும் அனர்த்தங்களுக்கு உட்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கை ரொட்டரி கழகம் எமது மக்களுக்கு ஈடிணையற்ற சேவையை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. 2004 சுனாமி அனர்த்தத்தின் பின்பு 25 பாடசாலைகளையும், தாய்சேய் மருத்துவமனை ஒன்றையும் நிர்மாணிப்பதற்கு ரொட்டரி கழகம் உதவி புரிந்தது.
தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின்போதும் ரொட்டரி கழகம் மக்களுக்கு உதவி, ஒத்தாசைகள் புரிய முன்வந்துள்ளது.
ரொட்டரி கழகத்தினைக் கொண்ட சமூகம் மற்றும் ரொட்டரி கழகத்தினைக் கொண்ட நாடு அவ்வாறான ஒன்றைக் கொண்டிராத நாடொன்றினை விட எல்லாவகையிலும் சிறந்தது என்பதை நாம் அனுபவம் ஊடாக அறிந்துள்ளோம். எனவே எமது நாட்டில் ரொட்டரி கழகம் செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
n10




