பொலிஸ் வலையில் முன்னால் டி.ஐ.ஜி.! அடுத்து இலக்கு வைக்கப்படுவது யார்?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராகக் கருதப்படும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரா சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருப்பது, வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்திருக்கும் அதேவேளையில், ‘முக்கிய தலை’ ஒன்று அடுத்ததாக இலக்கு வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது. அனுரா சேனநாயக்கவின் கைதுடன், பல முக்கிய விஷயங்கள் கசியும் என்பதால்தாதன் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது.
இரண்டு தடவைகள் சீ.ஐ.டி.யினரால் அழைக்கப்பட்டு கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட அனுர சேனநாயக்க, இறுதியாக அழைக்கப்பட்டபோது தான் கைது செய்யப்படலாம் என்பதை உணர்ந்தேயிருந்தார். அதனால், விசாரணைக்குச் செல்வதையும் அவர் தாமதப்படுத்தியதாகச் சொல்லப்படுகின்றது. இருந்த போதிலும், மேலும் தாமதப்படுத்த முடியாமல், விசாரணைக்குச் சென்ற அவர், விசாரணையின் போது கைது செய்யப்பட்டார்.
அனுரா மீதான விசாரணை பொலிஸ் அத்தியட்சகர் சானி அபயசேகராவின் மேற்பார்வையிலேயே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் டி.ஐ.ஜி. வாஸ் குணவர்த்தன உட்பட பல முக்கிய வழக்ககள் இவரது மேற்பார்வையிலேயே அண்மைக்காலமாக விசாரணைக்குள்ளாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவராக சானி அபயசேகரா உள்ளார்.
பிரபல ரக்பி வீரர் தாஜூதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது பொலிஸ் அதிகாரி அனுர என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் நாரேஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் சிந்திக பெரேரா கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான விசாரணையையடுத்தே இப்போது டி.ஐ.டி. அனுர சேனாநாயக்க கைதாகியிருக்கின்றார்.
தாஜூதீன் ‘மரணம்’ குறித்த விசாரணைகள் ஆரம்பத்தில் சிந்திக பெரேராவினாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாராஹென்பிட்டி பொலிஸ் பகுதிக்குள் தாஜுதீனின் மரணம் இடம்பெற்றிருந்தமையால், குறிப்பிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்ற முறையில் சிந்திக பெரேரா இது குறித்த விசாரணையை முன்னெடுத்திருந்தார். இந்த விசாரணையில் காணப்பட்ட பல குறைபாடுகளையடுத்தே அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆனால், தான் சுயமாகச் செயற்படவில்லை என்பதையும், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்ற முறையில், அனுர சேனாநாயக்கவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே தான் செயற்பட்டதாகவும் விசாரணைகளின் போது சிந்திக பெரேரா தெரிவித்திருக்கின்றார். அதனையடுத்தே அனுரா சேனாநாயக்க இப்போது கைதாகி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.
தாஜூதீன் மரணம் குறித்த விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லையா என்பதும், அவ்வாறாயின் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிவதும்தான் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணையின் இலக்காகவுள்ளது.
தாஜூதீனின் மரணம் ‘விபத்து’ என்றே முன்னர் தீர்பளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவரது ‘மரணம்’ தொடர்பில் தெரிவிக்கப்பட்ட சந்தேகங்களையடுத்து மீள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரது சடலம் தோண்டியயெடுக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணை மற்றும், ஆதாரங்களின் அடிப்படையில் அவரது மரணத்துக்குக் காரணம் வித்து அல்ல. இது திட்டமிட்ட படுகொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நீதிமன்றமும் இது கொலையாக இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டு, இதன் பின்னணியைக் கண்டறிவதற்கான உத்தரவை வழங்கியிருக்கின்றது.
அதன் தொடர்ச்சியாகவே இப்போது அனுரா சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவரை பிணையில் விடுதலை செய்வதற்கும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சி.ஐ.டி.யினரின் விசாரணையின் போது தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அனுரா மறுத்திருக்கின்றார். சாட்சிகளை மறைத்தது, தாஜூதீனின் மரணத்தை ‘விபத்தாக’ ஜோடித்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
நாரேஹென்பிட்டி, சாளிகா மைதானத்துக்கு அருகாமையில் தாஜூதீனின் வாகனம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு அதிகாலை 2.45 மணியளவில் (2012 மே 18) அனுரா சேனாநாயக்க சிவில் உடையில் வந்திருந்தார் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்திருக்கின்றன. அனுராவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, சாணி அபயசேகரா இது தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அனுரா சேனநாயக்க அந்த இடத்துக்கு வந்திருந்தமையை நேரில் கண்டவர் அது குறித்து தன்னுடைய சட்டத்தரணிக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார். விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் குழுவினருக்கு இது குறித்து சட்டத்தரணி தெரியப்படுத்தியிருக்கின்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் சுயாதீனமான விசாரணை ஒன்றை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
அனுரா கைதாயிருக்கும் பின்னணியில் மேலும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விரைவில் கைதாகும் சாத்தியம் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாஜூதீனைக் கொல்லவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது யார்? அந்தக்கொலையை விபத்தாகக் காட்டுவதற்கான திட்டத்தை வகுத்தது யார் என்பவற்றைக் கண்டறிவதை இலக்காகக் கொண்டதாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஓருவகையில் இந்தக் கேள்விகளுக்கான பதில் பொலிஸாருக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்கான ஆதாரங்கள் தேவை என்பதால்தான் அடுக்கடுக்கான கைதுகள் இடம்பெறுவதாகவும் இருக்கலாம்.
அடுத்ததாகக் கைதாகப்போகும் ‘தலை’ யார்?
– சபரி




