செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாண மக்களின் கருத்து பெற்றே மாகாண இணைப்பு தொடர்பில் பரிசீலிக்க வேண்டும்! கே.கே.மஸ்தான் எம்.பி

நேர்காணல்

-கே.வசந்தரூபன்-

30 வருடகால கொடிய யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னியின் தற்போதைய நிலமைகள் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.கே.மஸ்தான் அவர்கள் வழங்கிய விசேட பேட்டியே இது…

கேள்வி: ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போது வன்னியின் நிலமை எப்படி இருக்கிறது?

பதில்: ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஜனநாயக முறையில் சில நல்ல விடயங்கள் நடைபெறுகிறது. இந்த ஜனநாயக முறை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் முறையாக முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும். அந்தவகையில் தற்போது மாற்றத்திற்கு பின்னர் அதிகாராங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு எல்லா பாராளுமன்ற பிரதிநிதிகளின் கருத்துக்களும் பெறப்பட்டு சில இடங்களில் வேலைகள் இடம்பெறுகின்றது. சில இடங்களில் அதற்கு மாறாகவே சில அதிகாரிகள் இருக்கிறார்கள். அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த இன்னும் கொஞ்சக் காலம் செல்லும். அதன்பின் தான் நல்லாட்சிக்குரிய நிலமைகளை முழுமையாக பெற முடியும்.

கேள்வி: ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கூட வன்னியில் குடியேற்றங்கள், பௌதமயமாக்கல் இடம்பெறுவதுடன், காணி விடுவிப்பு கூட இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?

பதில்: ஆட்சி மாற்றத்தின் பின்னர் வன்னியிலும் சில இடங்களில் இருந்து இராணுவம் வெளியேறி காணிகளை விடுவித்து வருகிறது. பல வருடங்களாக விசேட அதிரடிப்படையினர் வசமிருந்த வவுனியா நெற்களஞ்சியசாலை ஒன்று தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி படிப்படியாக விடுவிப்பு இடம்பெறும். அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியாயமான மக்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றார். அதனால் மக்களின் இடங்களை இராணுவம் வைத்திருப்பதை அவர் விரும்பாது விடுதலை செய்வார். இராணுவ பாதுகாப்பு அவசியம் என கருதும் இடங்களை தவிர, ஏனையவை விடுவிக்கப்படும். இவை உடனடியாக செய்ய கூடிய விடயமில்லை. தற்போது யாழில், சம்பூரில் விடுவிக்கப்பட்டது போன்று இங்கும் கட்டம் கட்டமாக இடம்பெறும்.

கேள்வி: முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர். எதிர்கட்சி தலைவர் கூட அதனை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதை விடுவிக்க வாய்ப்புக்கள் உள்ளதா?

பதில்: மக்கள் சந்திப்புக்காக கிராமங்கள் தோறும் செல்லும் போது கேப்பாபுலவு மக்களை நானும் சென்று சந்தித்திருந்தேன். உண்மையில் அந்த மக்களின் கோரிக்கை ஒரு நியாயமான கோரிக்கை தான். அவர்களுக்கு மாற்றிடத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கூட பொருத்தமில்லாது தான். அது தற்காலிக வீடு மாதிரியே உள்ளது. அவர்களது பிரச்சனை தொடர்பாக நாங்களும் உரியவர்களுக்கு அறிவித்திருக்கின்றோம். அவர்களுடைய சொந்த இடங்கள் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா கூறியது போன்று கட்டம் கட்டமாக கட்டாயம் விடுவிக்கப்படும். ஏனெனில் 30 வருடம் யுத்தம் நடைபெற்றது. உடனடியாக இராணுவத்தை வெளியேற்றி காணிகளை விடுவிக்கும் போது தென்பகுதியில் பேரினவாதிகள் அதை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள். மக்களுக்குரியவை அவர்களை சென்றடைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார். அதனால் அக் காணிகள் கட்டம் கட்டமாக நிச்சயமாக விடுவிக்கப்படும்.

கேள்வி: வன்னியின் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராகவும் உள்ளீர்கள். இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்படுகின்றதா?

பதில்: நான் நினைக்கின்றேன் இதில் சில பாரிய பிரச்சனைகள் இருக்கிறது. எடுக்கப்படும் தீர்மானங்களில் அநேகமானவை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிலதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கிறது. அதற்காகவே மூன்று மதாதத்திற்கு ஒரு தடவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சனையாக இருக்கிறது. இது சம்மந்தமாக எனது கட்சி அமைச்சர்களுடன் பேசி இருக்கின்றேன். ஜனாதிபதியுடனும் இது தொடர்பில் பேசவுள்ளேன். சில பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை கூட்ட முடியாமல் இருப்பதற்கு காரணம் நேரப்பிரச்சனை. வேலைப்பளு காரணமாக ஏனைய மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளிடம் நேரம் எடுக்க முடியாதுள்ளது. அது தான் பெரிய பிரச்சனை. நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை ஒழுங்காக கூடும் போது எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலகுவாக இருக்கும். கூட்டங்கள் ஒழுங்காக நடைபெறாமையால் சில பிரச்சனைகள் இருக்கத் தான் செய்கிறது.

கேள்வி: உங்களது இணைத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

பதில்: சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் காணப்பட்ட பிரச்சனையை தீர்க்க மீள்குடியேற்ற அமைச்சருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நியாயமான முறையில் வீட்டுதிட்டத்தை வழங்க விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தாங்கள் தெரிவு செய்யப்பட்டதாக கூறப்படுமாம். பின்னர் திடீர் என வேறு பெயர் பட்டியல் வந்து வீட்டுதிட்டம் வழங்கப்படுமாம். இது எப்படி நடந்தது என்று தெரியாது என மக்கள் கூறினார்கள். இது தொடர்பில் பேசி எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முறையாக வீட்டுதிட்ட பதிவுகள் இடம்பெறுகின்றன. இதேபோல் வவுனியா மாவட்ட நெற்சந்தைப்படுத்தல் கட்டடம் எமத அபிவிருத்திக் குழு தீர்மானத்திற்கு அமைவாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சாரம், கல்வித் துறை சார்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தற்போது பல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். இதனால் தீர்மானம் எடுப்பது இலகுவாக உள்ளது. ஆனால், கூட்டம் நடத்துவதற்கு அமைச்சர்களிடம் இருந்து நேரம் எடுப்பது தான் கஸ்ரமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் வைத்தால் கூட நான் செல்லத் தயாராகவே உள்ளேன்.

கேள்வி: உங்களது வன்னிப் பிரதேசத்தில் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளே அதிகம். நீங்கள் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர். இந்நிலையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடிகின்றதா?

பதில்: என்னுடைய அரசியல் பிரவேசம் என்பது திடீரென வந்தது. நான் அரசியலுக்கு வர முன்னரே அனைத்து இன மக்களுனும் நல்ல ஒற்றுமையாகவும், உறவுகளைப் பேணியும் வந்துள்ளேன். அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் கூட சுமூகமான உறவைப் பேணியிருக்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் எமது அரசியலுக்காக இன, மத, மொழி ரீதியாக செயற்பட்டது இல்லை. அந்த அடிப்படையில் கூட்டமைப்பினருடன் சேர்ந்து பணியாற்ற முடிகிறது. பாராளுமன்றத்தில் கூட நான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன் என்ற போதும் எதிர்கட்சியில் உள்ள கூட்டமைப்பினருடன் பேசி நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றேன். இதனால் இணைந்து செயற்படக் கூடிய வகையில் புரிந்துணர்வுடன் கூடியதாக எமது அரசியல் செயற்பாடு இருக்கிறது.

கேள்வி: வன்னியின் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் என்பன தற்போது எவ்வாறான கட்டத்தில் உள்ளது?

பதில்: மீள்குடியேற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. அவர்களுடடைய அடிப்படை தேவைகள், வாழ்வாதர பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்பட வில்லை. மக்களை கொண்டு சென்று குடியமர்த்துவது மாத்திரம் மீள்குடியேற்றம் அல்ல. வெறுங்கையுடன் மீள்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்க வேண்டியள்ளது. அது கட்டம் கட்டமாகவே இடம்பெற்று வருகிறது. ஐரோப்பானினுடைய 65,000 வீட்டுத்திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதில் ஆரம்பத்திலேயே சில பிரச்சனைகள் வந்துள்ளது. 21 இலட்சத்திற்கு வீடு கொடுப்பதை விட தற்போது உள்ள மாதிரி 8 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வழங்கினால் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வீடுகள் வழங்க முடியும் என்ற நிலையும், இந்த வீடு இந்த பகுதியில் உள்ள வெப்ப சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்ற கருத்தும் உள்ளது. அதே கருத்து தான் இப்பகுதி மக்களிடமும் உள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கூட பேசப்பட்டுள்ளது. அவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். மன்னார் மாவட்டத்தில் நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த வீடுகளை தமிழ் மக்களுக்கு கொடுங்கள். எமக்கு வேறு நாடுகளுடன் கதை;து வீட்டுத் திட்டத்தை பெற்றுத் தருமாறு ஒரு சமூகம் கூறியது. ஏனெனில் இந்த வீட்டுத்திட்ட புள்ளி வழங்கல் நடைமுறையில் ஒரு சமூகம் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்குள்ள மக்கள் புள்ளி அடிப்படையில் கிடைக்கும் வீடுகளைப் பெறுவதற்கு இணங்கியுள்ள அதேவேளை தேவையான மேலதிக வீடுகளை பெற்றுத்தர வேறு நாடுகளடன் பேசி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். அந்த வகையில் இலங்கை தேசம் என்ற அடிப்படையில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடின்றி மக்களுக்கு நியாயமான முறையில் வீட்டுத்திட்டம் தற்போது வழங்கப்படுகிறது. அரசியல் தலையீடு இன்றி அவை இடம்பெறுகின்றது.

கேள்வி: வன்னிப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றதம் திருப்தி தரக் கூடிய வகையில் அமைந்துள்ளதா?

பதில்: மக்கள் மத்தியில் போகின்ற போது பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவே கருத்து இருக்கிறது. ஆனால் சென்றதைப் பற்றி கதைப்பதை விட இனி வருவதைப் பற்றி யோசிப்பதே சிறந்தது. இனி நடைமுறைப்படுத்தப்படும் போது கட்சி, இனம், மதம் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்யப்பட வேண்டும். இதற்கு கட்டாயம் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதும் கூட சில அதிகாரிகள் சில அரசியல்வாதிகள் சொல்வதை மட்டும் செய்கின்ற தன்மை இருக்கிறது. எதிர்காலத்தில் அந்த அதிகாரிகளும் பிழையான தகவல்களைக் கொடுக்கின்ற அரசியல்வாதிகளும் மக்களினுடைய நலன் கருதி நடக்கும் போது மக்களின் மீள்குடியேற்றம் மிகவும் நல்ல முறையில் நடக்கும். ஆகவே, மீள்குடியேற்றம் தொடர்பில் சில பிரச்சனைகள் இருக்கிறது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இன, மத பேதமின்றி அனைவரும் மீளள்குடியேற்றம் செய்பட்டு அடுத்த 4அரை வருடத்திற்கு பிறகு வருகின்ற அரசாங்கத்திற்கு மீள்குடியேற்றத்திற்கு இடம் வைக்காத அளவுக்கு இதை முடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் சுவாமிநாதன் கூட கவனமாகவுள்ளார்.

கேள்வி: இந்தியாவில் இருந்து வந்த மக்களை அண்மையில் சந்தித்துள்ளீர்கள். அவர்கள் பிரச்சனைகள் தொடர்பில் ஏதாவது அமைச்சு மட்டத்திற்கு கொண்டு சென்றீர்களா?

பதில்: அவர்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன். அது தொடர்பில் மகஜர்களையும் கோரியுள்ளேன். அவர்கள் பிரஜாவுரிமையைப் பெறுவது தொடக்கம் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். பாதிக்கப்பட்டு அகதியாக வருபவர் பிரஜாவுரிமையைப் பெற 25,000 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. அவர் அதனை எப்படி செலுத்த முடியும் என்ற கேள்வி அவர்களிடத்தில் உள்ளது. இது தொடர்பில் சட்டம் ஒன்று உள்ளது. இருப்பினும் இதனை பொதுவான ரீதியில் இலகுவாக பெற்றுக் கொடுக்க அமைச்சுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கபினட்டுக்கு போட்டு அமைச்சரவை அனுமதி பெற்று சில விடயங்களை செய்ய அமைச்சருடன் பேசியுள்ளேன். தற்போது மக்களிடம் விபரங்களை தருமாறு கோரியுள்ளேன். அதனை அமைச்சரிடம் கொடுத்து நடமாடும் சேவை ஊடாக தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரம்இ வீட்டுதிட்ட பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளேன்.

கேள்வி: நீங்கள் அரச பிரதிநிதி என்ற வகையில் மக்கள் பிரச்சனைகளை உங்களது அமைச்சர்களுடன் பேசி தீர்க்கக் கூடியதாகவுள்ளதா?

பதில்: சில பிரச்சனைகளை பேசித் தீர்க்க முடிகிறது. அவர்கள் எமது அழைப்பை ஏற்று நேரடியாக கூட வந்திருக்கிறார்கள். அண்மையில் மீன்பிடி அமைச்சர் மஹிந்த அபயவீர அவர்களை மன்னார், முல்லைத்தீவு பகுதிக்கு அழைத்துச் சென்று மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அவர் தெரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தேன். அதேபோல் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரிஸ், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்த்தன ஆகியோரும் அழைப்பை ஏற்று வந்திருந்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் மூலம் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானங்கள், பொது மக்களின் மைதானங்களுக்கும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் அவர்களுடன் பேசி வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்ட குழப்ப நிலையை ஆராய்ந்து வருவதுடன் இந்த திட்டத்தை வவுனியாவில் இருந்து வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லாது தடுக்குமாறும், கால அவகாசத்தையும் கோரியிருக்கின்றேன். அதை விட வவுனியா மாவட்டத்தில் 3000 மெற்றிக் தொன் நெல்லினை மட்டுமே கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் தொலைபேசியில் பேசி அதனை 4000 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதுடன் அதனை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வுத் திட்டத்தை கூட்டமைப்பு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியப்படுமா? இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையை சொல்லுவதாக இருந்தால் பிரச்சனைகளின் ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை தான் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்கள் இருக்கிறது. இதை அந்த மாகாண மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களிடம் கருத்துக் கணிப்புக்கள் நடத்தி முடிவைச் சொல்லலாம். ஏன் எனில் இது ஒரு தேசிய பிரச்சனை. நான் தற்போது தான் பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு, கிழக்கில் உள்ள அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பேசி சுமுகமாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். அது போக இணைந்திருந்த வடக்கு, கிழக்கு நீதிமன்றம் ஊடாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் பேசித் தீர்மானிப்பதுடன் இரு மாகாண மக்கள் கருத்துக்கள் பெறப்படுவது அவசியம். இந்த பிரச்சனை தீர்க்கப்படும் அதேவேளை, தேசிய இனப்பிரச்சனை கூட இந்த அரசாங்கத்தின் காலத்தில் தீர்க்கப்படும் என்பதே எனது நம்பிக்கை எனத் தெரிவித்தார்.

N5