வட மாகாண சுகாதார அமைச்சருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது
வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியதாக சந்தேக நபரொருவரை வவுனியா பொலிஸார் இன்று (3.6) கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த 20.5.2016 ஆம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் 12 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் நிமிர்த்தம் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு குழுக்களை நியமித்திருந்தார்.
இக் குழுக்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோவின் மேற்பார்வையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதன்போது வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பத்திகாரி எஸ்.பி.சி.எஸ்.கே செனரத் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் (23298) சிசில், கான்ஸ்டபிள் (36508) ஜெயபிரகாஸ், (50955) அபயரத்தின, (30183) ஜானக, (37437) திலகரத்தின, (84963) நிஜாம் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி இரத்தினபுரத்தை பிறப்பிடமாகவும் தற்போது வவனியா புதுக்குளத்தில் வசித்து வரும் மாடசாமி சுதாகரன் என்ற 38 வயதுடைய நபரொருவரை இன்று சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய நிலையில் எதிர்வரும் 17.6.2016 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் இச் சந்தேகநபர் தன்னை இராணுவ புலனாய்வாளர் எனவும் தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்திருப்பதாகவும் தெரிவித்து பலரிடம் கப்பம் பெறும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்காரணமாக கடந்த சில நாட்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொது நிகழ்வுகளை புறக்கணித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
N5




