செய்திகள்
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்ய வேண்டும் சம்பந்தன்
வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தியாகராசா, இந்திரராசா, நடராசா ஆகியோரின் 2016ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் பிரமாண அடிப்படையிலான மூன்று கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமசந்திரன் ஆற்றிய உரை.
தற்போது உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இன்றைய அரசியல் சாசனம் வழிவிடமாட்டாது. ஏனென்றால் இன்றைய அரசியல் சாசனம் என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அரசியல் சாசனம். ஒற்றையாட்சி என்பதன் கருத்தென்ன? இலங்கையில் ஒரேயொரு ஆட்சி மட்டும் தான் இருக்கலாம். ஒரேயொரு ஆட்சி என்றால் என்ன? இலங்கையில் இருக்கக்கூடிய பாராளுமன்றம். அந்த பாராளுமன்றத்தில் சட்டமாக்கும் உரிமை இருக்கின்றது. நிர்வாக உரிமை இருக்கின்றது. நீதித்துறை அதிகாரம் இருக்கின்றது. ஆகவே அதுமட்டும் தான் ஒரு அரசாங்கம்.
ஆனால் ஒன்பது மாகாணசபைகள் இருக்கின்றன. இந்த மாகாணசபைகளை மாகாண அரசுகளாக ஏற்றுக்கொள்ளக்கூட முதலாவதாக இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. ஏனென்றால் ஒற்றையாட்சி என்றால் அது மத்தியில் இருக்கக்கூடிய பாராளுமன்ற ஆட்சி மட்டும் தான். மாகாணசபை ஆட்சி என்று கூற அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒற்றையாட்சிக்கு முரணானது என்று அவர்கள் கருதுகின்றார்கள். ஆகவே மாகாண ஆட்சி என்று சொல்வதை விட மாகாணசபை என்று தான் அதனை அழைக்க அவர்கள் விரும்புகின்றார்கள்.
இதில் மிகமிக கேலிக்குரிய விடயம் என்னவென்றால், உள்ளுராட்சி அரசுகளை ‘லோக்கல் கவர்மெண்ட்’ என்று சொல்பவர்கள் மாகாண அரசு என்று சொல்வதற்கு தயங்குவதற்கு இரண்டு காரணம். ஒன்று அதற்கான அரசியல் சாசன ரீதியான உத்தரவுகள் இல்லை என்பதும். அவ்வாறு அழைக்க சிங்கள பெருந்தேசியவாதம் விரும்பவில்லை என்பதும். வடக்குக்கு ஒரு மாகாண அரசு கிழக்குக்கு ஒரு மாகாண அரசு ஏனைய மாகாண அரசுகள் உண்டு என்று சொல்லவே அவர்கள் விரும்பவில்லை என்ற சூழல் இருக்கின்றது. ஆகவே மாகாணசபைகள் தமக்கான மிக மிக குறைந்தளவு அதிகாரங்களை கொண்டவையாகவே இருக்கின்றன.
இந்த அதிகாரங்கள் கூட உங்களுக்கு எப்போது கிடைத்தது என்றால் மிகப்பெரிய போராட்டத்துக்கு பின்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட அந்த 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் குறித்தொதுக்கப்பட்டன. ஆகவே இதுபோதாது என்பதனால் தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பின்னரும் யுத்தம் நீடித்தது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் எங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் ராஜபக்ஸ அரசாங்கத்திடமும் இருக்கவில்லை. இன்றைய நல்லாட்சி அரசாங்கம் என்று கூறக்கூடிய அரசாங்கத்திடம் அந்த நோக்கம் இல்லை என்பதே மிகவும் கவலையான விடயம். தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தை கடந்த தேர்தலின் போது மிகத்தெளிவாக சொல்லிவிட்டோம். இது ஒற்றையாட்சி உடைய நாடாக இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு பல இனங்கள் இருக்கின்றன. சிங்கள இனம், தமிழ் இனம், முஸ்லிம்கள். இவ்வாறு பல மதங்கள் இருக்கின்றன. பல மொழிகளை பேசுகின்றார்கள். ஆகவே நாங்கள் ஒருமித்த ஒரே ஆட்கள் அல்ல. எங்களுக்குள் பல்வேறுபட்ட சமய மத மொழி வேறுபாடுகள், இனவேறுபாடுகள் இருக்கின்றன.
ஆகவே இந்த நிலையில் இந்த நாட்டில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஒற்றையாட்சி என்பது சாத்தியப்படாது என்பது பிரதான விடயம். இது தந்தை செல்வா காலத்திலிருந்து சொல்லப்பட்டுவரும் விடயம். இந்தியாவை உதாரணமாக கொண்டால் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் இப்படி பல நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. 28 மாநிலங்கள் இருக்கின்றன. அங்கு மொழிவாரி மாநிலங்கள் உண்டு.
நேரு அவர்கள் இந்திய சுதந்திரத்துக்கு பிற்பாடு அதை ஏற்படுத்தினார். தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமானது. கேரளா மலையாளிகளுக்குரியது. ஆந்திரா தெலுங்கர்களுக்குரியது. கர்நாடகா கன்னடர்களுக்குரியது. எனவே இந்தியா கூட ஒற்றையாட்சி அல்லாத பல ஆட்சிகளை கொண்ட ஒரு ஆட்சிமுறையாக இருக்கின்றது. இதைப்போல மிகச்சிறிய நாடான சிவிட்சர்லாந்தும் இருக்கின்றது. இலங்கையை விடவும் மிகச்சிறிய நாடு அது. ஆனால் உலகத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.
ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் அவ்வாறானதொரு ஆட்சிமுறையை கொண்டுவர எந்தவொரு அரசாங்கங்களும் விரும்பவில்லை என்பதே இன்றுள்ள நிலைமை.
இதனால் தான் கடந்த எமது பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பினர் எமது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டோம். தமிழ் மக்கள் அல்லது தமிழ் மொழிபேசும் மக்கள் வடக்கு கிழக்கில் செறிந்து வாழுகின்றார்கள். ஆகையால் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாகவோ மாநிலமாகவோ மீண்டும் இருக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு தங்களது தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளுகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. 18 வருட காலமாக அது இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருந்தது. இணைக்கப்பட்ட மாகாணத்துக்கான நிர்வாக நிலமாக திருகோணமலை விளங்கியது. ஆனால் 2006ம் ஆண்டு ராஜபக்ஸ அரசின் முயற்சிகள் காரணமாக ஜேவிபியின் தூண்டுதல்கள் காரணமாக அது பிரிக்கப்பட்டது.
ஏன் பிரிக்கப்பட்டது? இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக ஒன்றாக வாழுகின்ற நிலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை அதை விரும்பவில்லை என்பதனாலாகும். இலங்கையில் சிங்கள மக்களுக்கு முன்பாகவே அதாவது இங்கு விஜயன் என்பவன் வருவதற்கு முன்பாக பல ஈஸ்வரர்கள் இருந்தனர் என்ற உண்மையை நான் அடிக்கடி கூறுவதுண்டு. கோணேஸ்வரம் இருந்தது. முன்னேஸ்வரம் இருந்தது. திருக்கேதீஸ்வரம் இருந்தது. காலியில் தொல்லீஸ்வரம் இருந்தது. நகுலேஸ்வரம் இருந்தது. விஜயன் வருவதற்கு முன்னர் இலங்கையில் ஐந்து ஈஸ்வரங்கள் இருந்ததாக சிங்கள வரலாற்று ஆசிரியர்களே கூறுகின்றார்கள். அவ்வாறாயின் ஈஸ்வரனை அதாவது சிவனை வழிபடுபவர்கள் யார்? நிச்சயமாக சைவ சமயத்தவர்கள். அப்படியென்றால் சைவ சமயத்தவர்கள் யார் என்றால் அது தமிழர்கள்.
இந்த நாட்டிற்கு வெள்ளையர்கள் படையெடுப்புக்கு முன்பாக பல இராட்சியங்கள் இருந்தன. யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் அரசோஞ்சினான். வன்னி பெரு நிலப்பரப்பில் பண்டாரவன்னியன் கோலோச்சினான். இது எமது வீரவரலாறுகள். எங்களது அந்த இறையாண்மையை பறித்தது யார்? படையெடுத்து வந்த வெள்ளையர்கள். அவர்கள் இந்த நாட்டை விட்டுப்போகும் போது எங்களுடைய இறையாண்மையை இலங்கை அரசாங்கத்திடம் அல்லது சிங்கள பெருந்தேசியத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். எனவே எங்களுடைய இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அந்த இறையாண்மையின் அடிப்படையில் வடகிழக்குக்கான ஒரு சுயாட்சி, முழுமையான அதிகாரங்களை கொண்ட ஒரு சுயாட்சி எமக்கு தேவை.
நாங்கள் இந்த அரசாங்கத்துடன் வாழ முடியாது. இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றோம். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றோம். எமது காணிகள் பறிக்கப்படுகின்றன. மொழி கலை கலாசார தனித்துவங்கள் பறிக்கப்படுகின்றன. தந்தை செல்வா கூட சொன்னார். இலங்கை அரசாங்கத்துடன் இவற்றையெல்லாம் பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்தேன். எல்லாமே தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன. ஆகவே இழந்த எமது நாட்டை மீளப்பெற்றுக்கொள்வதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியெதுவுமில்லை என்று சொன்னார்.
ஆனால் அவர் கூறிய தனிநாட்டு விடயத்தை சரிவர முன்னெடுத்து செல்ல தவறியதால் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டியேற்ப்பட்டது. எனவே நீண்ட நெடிய போராட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உயிர்களை ஆகுதியாக்கினார்கள். இளைஞர்கள் உச்சபட்ச அர்ப்பணிப்போடு தற்கொடைப்படையணியாக கூட மாறினார்கள். உலகத்துக்கு சொல்லக்கூடிய வரலாற்று புகழ்பூத்த போராட்டமாக தமிழர்களின் போராட்டம் அமைந்தது. ஆனாலும் பல்வேறுபட்ட வல்லரசு நாடுகளுடன் இணைந்து எமது போராட்டமும் ஒடுக்கப்பட்டது.
ஆனால் என்ன காரணத்துக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த பிரச்சினைகள் இன்றும் கூட தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சொல்கின்றார்கள்? ஒற்றையாட்சியை விட்டுக்கொடுக்க மாட்டோம். வடக்கு கிழக்கை மீளவும் இணைக்க மாட்டோம். சமஸ்டி ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதுதான் இலங்கை அரசின் நிலைப்பாடாக இருக்குமென்றால் இந்த விடையத்தை திரு.சம்பந்தன் அவர்கள் எவ்வாறு கையாளப்போகின்றார்?
எமது பிரச்சினை இப்போது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளமையால், முன்னரை விடவும் இப்போது தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. எமது பிரச்சினைகள் தொடர்பாக கனேடிய அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கம் உள்ளிட்ட பல அரசாங்கங்கள் பேசுகின்றன. தமிழர்களுக்கு இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது என்பதை பல வெளிநாடுகளினதும் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழர்களுக்கு நியாயமான கௌரவமான ஒர தீர்வினை கொடுக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இந்தநிலையில் இப்போதுள்ள இலங்கை பாராளுமன்றம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாசன சபைக்கு 21 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்கள். இந்த 21 பேரும் தான் அரசியல் சாசனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து சபைக்கு சமர்ப்பிக்கப்போகின்றார்கள். இந்த 21 பேரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக திரு.சம்பந்தனும், திரு.சுமந்திரனும் இருக்கின்றார்கள்.
இந்த குழுவில் வடகிழக்கு இணைப்பை பற்றி பேச முடியுமா? சமஸ்டியை பற்றி பேச முடியுமா? ஏனெனில் இந்த குழுவில் கடைந்தெடுத்த இனவாதிகளும் இருக்கின்றார்கள். ஓரிரு தமிழர்களை தவிர மற்றைய எல்லோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். இவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டுமாகவிருந்தால் எவ்வாறு இவர்கள் இந்த விடயத்தை கையாளப்போகின்றார்கள்?
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பொறுத்தவரையில் திரு.சம்பந்தன் அவர்களிடம் நேரடியாக எமது நிலைப்பாட்டை கூறிவிட்டோம். தற்போதைய இலங்கை அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக சிறீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவரும், பிரதமராக ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவரும் இருப்பதால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் தீர்க்கமான சில முடிவுகளை நாங்கள் எட்ட வேண்டும்.
வடக்கு கிழக்கை இணைக்க முடியுமா இல்லையா? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக எற்றுக்கொண்டு அவர்களது மரபு வழித்தாயகத்துக்கு சமஸ்டி அதிகாரம் வழங்கப்படுமா இல்லையா? மக்களுடைய காணிகளை விடுவிக்க முடியுமா இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறப்படுமா இல்லையா? யுத்தக்குற்றங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படுமா இல்லையா? இப்படி சில விடயங்களுக்கு பேச்சுவார்த்தை ஊடாக அவர்களின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள முடியும். எனவே இனவாதிகளான தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச இவர்கள் போன்ற எல்லோரையும் வைத்துக்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.
ஆகவே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இதில் சில முடிவுகள் எட்டப்பட்டால் தான் அந்த முடிவுகள் அரசியல் சாசனசபைக்கு அறிவிக்கப்படும். இருதரப்பு பேச்சுவார்த்தையில் அரசாங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சில முடிவுகளை எடுத்துள்ளன. இந்த முடிவுகளை சிறீலங்கா சுதந்திரக்கட்சியோ, ஐக்கிய தேசியக்கட்சியோ எதிர்க்க கூடாது என்று அவர்கள் அறிவுறுத்த முடியும். இவ்வாறான நிலைமை உருவாகாவிட்டால் நாங்கள் அமெரிக்காவிடமோ, இந்தியாவிடமோ, ஐக்கிய நாடுகள் சபையிடமோ சொல்ல முடியும்.
இந்த குறைந்தபட்ச அதிகாரங்களையே இலங்கை அரசாங்கம் தர முடியாது என்றால், நாங்கள் எங்களுக்குரிய தீர்வினை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் அவர்களை நோக்கியே கேள்வி கேட்க முடியும். எனவே இவ்வாறான சர்வதே அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்காவிட்டால் அரசாங்கம் எவ்வாறு காலம் கடத்தலாம் என்று தான் சிந்திக்கும்.
உலகத்துக்கு இலங்கை பிரச்சினை மட்டும் ஒரு பிரச்சினையல்ல. சிரியாவில் உள்நாட்டு யுத்தம். ஈராக்கில் யுத்தம். ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் கிளர்ச்சிகள், அகதிகள் பிரச்சினை, ஐஎஸ்எஸ் தலையிடி என்று உலகம் பலதரப்பட்ட பிரச்சினைகளில் மூழ்கி இருக்கின்றது. எனவே உலக கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை பிரச்சினையை மட்டும் தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் யோசிக்கக்கூடாது. எனவே உலகத்துக்கு ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. அந்த ஆயிரம் பிரச்சினைகளில் எங்களுடைய பிரச்சினையை முதன்மை பிரச்சினையாக பேச வைக்க வேண்டும். இன்னும் சில வருடங்கள் காலம் கடத்தினால் எங்களுடைய பிரச்சினை தரப்படுத்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும். அதன் பின்னர் யாரும் எமக்கென்று குரல் கொடுக்க செவி சாய்க்க இருக்க மாட்டார்கள். இதனை தான் இலங்கை அரசாங்கமும் விரும்புகின்றது.
ஆகவே அவ்வாறனதொரு சூழல் ஏற்பட முன்னர் எமது அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச சமுகத்திடம் விடாப்பிடியாக நின்று தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் முழுமையாக அணிதிரண்டு அதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தவறுகளை இழைக்காமல் அதற்கான நிலைமைகளை நாங்கள் உருவாக்க வேண்டும். இது ஒன்றும் ஒளிவு மறைவான விடையம் அல்ல. இரகசியமாக வைத்திருக்க வேண்டிய விடைமும் அல்ல.
தமிழ் மக்கள் எல்லோருக்குமான தீர்வை பற்றி விடையம். எங்களுடைய வாழ்வு. எங்களுடைய எதிர்காலம் இவற்றுடன் தொடர்புடைய விடையம். எல்லோருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இந்த தீர்வை எட்டுவதற்கான வழிமுறைகளை எவ்வாறு கையாளப்போகின்றோம்? என்பதே எங்கள் முன்பாக இப்போது பெரும் கேள்வியாக உள்ளது. என்று தனது உரையில் தெரிவித்தார்.


n10




