செய்திகள்

கண்டியில் பள்ளி வாசலில் கோபுரம் நிர்மாணிக்க பௌத்த கடும் போக்காளர்கள் எதிர்ப்பு

இலங்கையில் கண்டி நகரிலுள்ள பள்ளி வாசலில் கோபுரம் (மினராத்) நிர்மாணிப்பதற்கு அங்குள்ள பௌத்த கடும் போக்காளர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபுர நிர்மாணப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி பள்ளிவாசலுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆர்பாட்டமொன்றும் நடைபெற்றது

பௌத்த பிக்குமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு சில மணி நேரம் பதட்ட நிலை காணப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து கோபுர நிர்மாண பணிகளுக்கு மாநகர சபை ஆணையாளரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தின் மையப்பகுதியான கண்டியிலே பௌத்தர்களின் முக்கிய புனித தலங்களின் ஓன்றான தலதா மாளிகை அமைந்துள்ளது. பள்ளிவாசல் முன்பாக அமைக்கப்படும் இந்த கோபுரம் தலதா மாளிகையை மறைப்பதாக அமையும் என ஆர்ப்பாட்டகாரர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

கோபுர நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படும் என எழுத்து மூலமாக தகுதி வாயந்த அதிகாரியொருவரின் உறுதி மொழி கிடைக்கும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகளினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

சுமார் 3 – 4 மணித்தியாலங்கள் வரை ஆர்ப்பாட்டம் நீடித்த நிலையில் கண்டி மாநகர சபை ஆணையாரால் அதனை நிறுத்துமாறு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

மாநகர ஆணையாளரின் எழுத்து மூல உத்தரவின் பிரதி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களிடம் மாநகர சபை அதிகாரியொருவரால் வாசிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.

பள்ளி வாசல் கோபுரம்’ மாநகர சபையின் அனுமதி இன்றி நிர்மாணிக்கப்படுவதாக குறிப்பிட்டு ஆணையாரால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் கூறுகின்றது. தாங்கள் அனுமதி பெற்றே நிர்மாணப் பணிகளை மேற் கொண்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றது.
R-06