செய்திகள்

பல மணி நேர போராட்டத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள்: வீதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன

அவிசாவளை சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரிய தீ பல மணி நேரப் போராட்டத்தின் பின்னர் இன்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், ஆபத்து நீங்கிவிடவில்லை என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், இராணுவ முகாம் வெடிச் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளிலுள்ள வீதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலையும் இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளில் புகைமூட்டம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார். சுவாசக்கோளாறுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் ஈரத்துனியால் முகத்தை மறைத்து சுவாசிப்பதே சிறந்தது என பிரதீப் கொடிப்பிலி மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

வீதிகள் மூடப்பட்டுள்ளதால் இயலுமானவரை வாகன சாரதிகள் மாற்று வழிகளையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் 117 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார்.
R-06