ஐ.நா சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: ஆனந்தன்
ஐ.நா சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் எட்டு மாதங்கள் கடந்த நிலையில் கூட இன்னும் நிறைவேற்றவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வவுனியா, புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 16வது ஆண்டு விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
எமது மக்களின் சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, கல்வி விடயம் என்பவற்றிலும் இந்த விளையாட்டுக் கழகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு அப்பால் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை நாம் கொண்டு வந்திருந்தாலும் கூட எமது பிரதேசங்களில் பலர் இன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகவே இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் கைகொடுப்பதாக இருந்தால் இளைஞர்களுடைய பங்கு எதிர்காலத்தில் மிக அவசியம். எமது எதிர்காலம் இளைஞர்களுடைய கையில் தான் உள்ளது. நொந்து போயுள்ள சமூகத்தை கைகொடுத்து எழுப்பி விட வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட எமது மக்களுக்கான அபிவிருத்திகள், ஒரு நிரந்தர தீர்வு என்பவற்றை பெற்றுக் கொடுக்க நாம் இன்னும் பல மைல் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனை அடைவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவைகள் இருக்கின்றது. குறிப்பாக இந்த அரசாங்கம் ஐ.நா சபைக்கு வழங்கிய வாக்குறுதியை கூட இன்றைக்கு எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் நிறைவேற்றவில்லை. அதேபோல் உள்நாட்டில் அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதும் அதில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள், கருத்துக்களுக்கு மாறான அறிக்கையைத் தான் இன்று சமர்ப்பித்துள்ளார்கள். ஆகவே, அரசியல், பொருளாதார ரீதியாக நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலமை தான் தொடர்ந்து இருக்கிறது. இந்த நிலமைகளை மாற்றியமைப்பதாக இருந்தால் எங்களுக்கு என்று நிரந்தரமான ஒரு தீர்வு வர வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
N5




