செய்திகள்

ஆயுதக்களஞ்சிய வெடிப்பு குறித்து முழுமையான விசாரணை தேவை: சுமந்திரன்

சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு குறித்து முழுமையான விசாரணை அவசியமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரித்தானியவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக உயர் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஊடகவிலாளர் ஒருவரின் கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளாரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சித்தலைவர் நேற்று காலையிலேயே யாழிலிருந்து தலைநகருக்கு திருப்பியிருந்தார். அதனைத்தொடர்ந்து பிரித்தானிய குழுவினருடனான சந்திப்பு ஆரம்பமாகிவிட்டது. எனினும் சலாவ இராணுவ முகாமில் காணப்பட்ட ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் கவனம் செலுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அவ்வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் தற்போதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் முழுமையான விசாணையொன்று முன்னெடுக்கப்படவேண்டும்.

தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு விடயம் என்பதால் முழுமையான விசாரணையின் பின்னர் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் எமது நிலைப்பாடுகளை தெளிவாக முன்வைப்போம்” என்றார்.
R-06