செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுகின்றதா…?

-நரேன்-

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் ரீதியாக இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இராஜதந்திர தொடர்பு மட்டங்களிலும் அவை தாக்கம் செலுத்தியிருந்தன. இதன்விளைவே சர்வதேச இராஜதந்திரிகள் இலங்கை மீது படையெடுப்பதற்கும், பொருளாதார வேலைத்திட்டங்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கும் முன்வந்துள்ளமை. இந்நிலையில் மிகவும் பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வரும் விடயம் புதிய அரசிலமைப்பு. இவ் அரசியல் அமைப்பு மூலம் கடந்த 60 வருடமாக இந்ந நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சனை தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை கானல் நீராக மாறுமா என்ற ஏக்கம் கூட தற்போது ஏற்பட்டுள்ளது. அதகைய தன்மையையே நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களைப் பெறும் முகமாக அரசாங்கத்தால் மக்கள் கருத்தறியும் குழுவொன்று சட்டத்தரணி லால் விஜேநாயக்கா தலைமையில் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. இதில் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், ஒரு அரசியல்வாதி என 20 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். கடந்த ஜனவரி 4 ஆம் திகதி முதல் மூன்று மாதகாலமாக மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள் மாவட்டங்கள் தோறும் நடைபெற்று தற்போது அதன் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகரும், அரசியலமைப்பு சபையின் தலைவருமான கருஜெயசூரியவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதுடன் 7 ஆம் திகதி ஜனாதிபதியிடமும் கையளிக்கப்படவுள்ளது. இவ் மக்கள் கருத்தறியும் குழுவின் முன் சுமார் இரண்டு கோடி மக்கள் வாழும் நிலையில் ஐயாயிரம் பேர் வரையிலேயே தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளதுடன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மிகவும் குறைவானோரே பிரசன்னமும் ஆகியுள்ளனர். இதனால் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இந்த குழுவிடம் பெரியளவில் பதிவாகியிருக்கவில்லை. மக்களை கருத்துக்களை பதிவு செய்வதற்கு கூட தமிழ் தலைமைகள் வழிநடத்தியிருக்கவில்லை. இது தவிர, தமிழ் அரசியல்வாதிகள் கூட தமது கருத்துக்களை இக் குழுவிடம் பதிவு செய்ததாகவும் இல்லை.

இந்நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ் அறிக்கையில் மக்கள் ஒற்றையாட்சி முறையினை விரும்புவதாகும், வடக்கு- கிழக்கு இணைப்பையோ அல்லது மொழி ரீதியான மாகாண பிரிப்பையோ மக்கள் விரும்பவில்லை எனவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சார்பாக வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன தீர்வுத் திட்ட யோசனை ஒன்றை கையளித்துள்ளது. அதில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை எதிர்பார்பதாகவும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தும் உள்ளது. ஆனால் இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ன அறிக்கையில் அவ்விரு விடயங்களும் புறக்கணிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறைமை மற்றும் வடக்கு- கிழக்கு தனியான மாகாணம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவே மக்களின் விரும்பம் என்ற மாயை கூட ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மறுக்கப்பட்டுள்ளது. இதன்பின் வரும் புதிய அரசிலமைப்பு சபையில் கூட இவ்வாறான நிலமை தான் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. ஏனெனில் அதில் அங்கத்துவம் வகிப்பவர்களில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் சமஸ்டி முறைமையையும், வடக்கு- கிழக்கு இணைப்பையும் எதிர்ப்பவர்கள். ஆகவே, புதிய அரசிலமைப்பு மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்பது சாத்தியமாக கூடிய நிலமைகள் தற்போது இல்லை என்றே தோன்றுகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கு சலுகைகள் சிலதை இவ்வரசியலமைப்பு மூலம் வழங்க முற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த இடத்தில் தமிழ் பேசும் மக்கள் தாம் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையாக காணப்பட்டாலும் அவர்களும் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. தேசிய இனமாக கருதுமிடத்து பெரும்பான்மையாகவுள்ள சிங்கள மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும், வரப்பிரசாதங்களும் தமிழ் பேசும் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது காலம் காலமாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட நிலையில் தான் தமிழ் மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. 30 வருட அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் அதில் ஏமாற்றப்பட்ட நிலையில், அதன் மேல் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் மாக்சிய சித்தாந்த அடிப்படையில் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டனர். ஆயுதப் போராட்ட காலத்தில் மிதவாத மேட்டுக்குடிகள் மாக்சிய சிந்தனை கொண்ட தமிழ் இளைஞர்கள் பின் தம்மை இணைத்துக் கொண்டும், மறைத்துக் கொண்டும் அரசியல் செய்தனர். ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை.

மாக்சிச கொள்கையுடன் நடைபெற்ற ஆயுதவழிப் போராட்டங்கள் முழுமையாக அடக்கப்பட்ட பின்னர் இன்று ஆயுதமேந்தியவர்கள் மிதவாத மேட்டுக்குடிகளின் பின்னால் தம்மை மறைத்து அவர்கள் பின்னால் செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் முடிவெடுக்கும் தரப்பாக மேட்டுக்குடி அரசியல் தலைமைகளே உள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவே தமிழ் மக்களின் 60 வருட போராட்டத்திற்கான தீர்வாக அமையப் போகிறது. ஒரு தேசிய இனம் சம்த்துவம் பற்றி பேசுவதை விடுத்து சலுகையைப் பற்றி பேசுவதும் அதனை வழங்க முயல்வதும் மீண்டும் ஒரு அவலநிலைக்கு செல்லக் கூடிய சூழலையே உருவாக்கலாம். குறிப்பாக 30 வருடம் பல அழிவுகளுடன் இந்த மண்ணில் நடந்த போராட்டம் கூட ஒரு தேசிய விடுதலைக்கான போராட்டமே. அது சலுகைக்கான போராட்டம் அல்ல. இதனை தற்போதைய தமிழ் மக்களின் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தான் தேசிய இனமான தமிழ் மக்கள் சமஸ்டி கோரி நிற்கின்றனர்.

1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூட இந்த நாட்டில் நடைபெறுவது ஒரு சாதாரண பயங்கரவாத போராட்டம் அல்ல. இது ஒரு மாக்சிய பயங்கரவாதப் போராட்டம் எனக் கூறியிருந்ததுடன், மேற்குலகத்தையும் தனது பக்கம் இழுத்துக் கொண்டார். ஆகவே தமிழ் மக்கள் தேசிய இனமாகவே கடந்த காலங்களில் விடுதலைக்காக போராடியவர்கள் என்பதை தற்போதைய கூட்டமைப்பின் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். போராடியவர்களும், போராட்ட தலைவர்கள் சிலரும் அத் தலைமைகளுக்கு பின் நிற்பதால் மாக்சிசம் மரணித்து விட்டதாக கருதவும் முடியாது. ஏனெனில் அதற்காக நாம் கொடுத்த விலைகள் அதிகம்.

இந்த நிலையில் மௌன அரசியல் செய்து அரசாங்கம் கொடுப்பதை பெறுவோம் என கருவது எமது தேசிய இனம் என்ற அடையாளத்தையே அழித்து விடும். தற்போதைய சர்வதேச அரசியல் சூழல் கூட தமிழ் மக்களுக்கு இருந்த சாதக தன்மைகளை குறைத்தே வருகிறது. மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது தமிழர் மக்களுக்கு சார்பான சர்வதேச அரசியல் சூழல் இருந்தது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துணையுடன் சர்வதேச அழுத்தத்தை குறைத்த புதிய அரசாங்கம் சர்வதேசத்தின் நண்பர்களாகவே மாறிவிட்டனர். அதன் ஒரு விளைவே சர்வதேச நீதிபதிகளை விசாரணைக்கு அழைக்க முடியாது என பிரதமர் அண்மையில் கூறிய விடயம். இந்த விடயத்தில் கூட சர்வதேசம் தமிழர் தரப்பு சார்பாக அழுத்தம் கொடுக்க கூடிய நிலையில் தற்போது இல்லை. அதேபோல தான் இந்தியாசின் நிலைப்பாடு கூட. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி தீர்வை வலியுறுத்திய இந்திய இன்று மௌனமாக இருக்கிறது. அரசாங்கம் 13 ஐ கூட வழங்க மறுத்து அதில் இருக்கும் அதிகாரங்களை கூட குறைத்து வருகிறது. ஆகவே, தமிழ் மக்களுக்கு சாதாகமாக இருந்த சர்வதேச அரசியல் சூழ்நிலை தற்போது அரசு பக்கம் மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் காரணம் என்பதை மறுதலிக்க முடியாது.

இந்த நிலையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் போன்று தமிழ் மக்களுக்கான நியாயமான சமஸ்டி தீர்வை வலியுறுத்த வேண்டிய தேவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு இருக்கிறது. ஏனெனில் 2009 மே மாத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பேயே நம்பி வாக்களித்து வருகின்றனர். இதனால் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டி பொறுப்பில் இருந்து அவர்கள் விலகிவிட முடியாது. அவ்வாறு இல்லாது தமிழ் தலைமைகள் தவறு இழைக்கும் பட்சத்தில் எந்தவொரு தேசிய இன விடுதலைப் போராட்டமும் மாக்சிச சித்தாந்த அடிப்படையில் தான் வெற்றியடைய முடியும் என்ற லெனின் கூற்று சரியானது தான் என்று இயல்பாகவே எமது மக்கள் எண்ணத் தோன்றுவது தவிர்க்க முடியாததே.

N5