‘பேரறிவாளன் ஏன் விடுதலையாகக் கூடாது?’
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்கான கோரிக்கைப் பேரணி வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து தொடங்க இருக்கிறது.
வேலூரில் இருந்து சென்னை, கோட்டையை நோக்கி நடக்கப் போகும் பேரணியில் பங்கேற்க இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், ” தமிழகத்தின் பெரும் துயரமாக நான் கருதுவது, பேரறிவாளன் இன்னும் விடுதலையாகாமல் இருப்பதுதான். இதைப் பற்றிக் கவலையோடு யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 25 ஆண்டுகால சிறை வாழ்க்கை என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம் அம்மாள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். இதை ஓர் அரசியலாக நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மனிதநேயத்தின் பக்கம் நின்று இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும். ஏன் இவர் விடுதலையாகக் கூடாது என ஏங்கித் தவிக்கிறோம். அவர் விரைவில் விடுதலையாக வேண்டும். இதற்காக வேலூரில் இருந்து பேரணி கிளம்ப இருக்கிறது. பேரறிவாளனின் விடுதலை என்பது தமிழ்ச் சமூகத்தின் தேவையாக இருக்கிறது. இந்தப் பேரணியில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். தனிமனித சுதந்திரம் என்பது அந்த விடுதலையை ஒட்டித்தான் இருக்கிறது. இதற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஜூன் 11, அன்று நமது ஒற்றுமையை வெளிக்காட்டக் கூடிய அந்தப் பேரணியில் நானும் பங்கேற்கிறேன். மனிதநேயத்தை வலியுறுத்தும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என உருக்கமாகப் பேசியிருக்கிறார். 
’25 ஆண்டு வலியை உணர முடிகிறது!’ -கலங்கும் கலையரசன்
” பள்ளிக்குப் போகும் காலங்களில் பேரறிவாளன் அண்ணன் பற்றி நிறைய செய்திகளைப் படித்திருக்கிறேன். திரும்பிப் பார்ப்பதற்குள் 25 ஆண்டுகள் கடந்து போய்விட்டன. இதைப் பற்றி நினைத்தாலே மனம் வேதனைப்படுகிறது. செய்யாத குற்றத்திற்காக 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார் அண்ணன் பேரறிவாளன். 25 ஆண்டுகள் தனிமைச் சிறை என்பது மிகப் பெரிய வலி. இதற்கு என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமலேயே இருந்துவிட்டோம். அற்புதம் அம்மாள் தலைமையில் நடக்கும் மோட்டார் வாகனப் பேரணியில் என்னோடு நீங்களும் வந்து பங்கேற்க வேண்டும். இவர்களின் விடுதலைக்காக அரசாங்கமும் முயற்சி எடுத்து வருகிறது. நமது ஒற்றுமையைக் காட்டும்விதமாக பேரணி அமையட்டும்”.
‘ எப்போது நீதி கிடைக்கும்?’ -‘மூடர்கூடம்’ நவீன்
” ஒரு மனிதனின் வாழ்க்கையில் 25 ஆண்டுகள் என்பது மிக முக்கியமான காலகட்டம். தன்னுடைய சொந்த பந்தங்களை இழந்து தனிமைச் சிறையில் தவிக்கும் கொடுமை வேறு யாருக்கும் வரக் கூடாது. அவர் சிறையில் இருக்கக் காரணமான வாக்குமூலத்தை எழுதிய அதிகாரி, ‘ தான் எழுதியது தவறு’ என உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வாக்குமூலத்தை அவர் எழுதாமல் இருந்திருந்தால், பேரறிவாளன் சிறையில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். அவருக்கு இன்னும் நீதி கிடைத்தபாடில்லை. மனிதநேயம் கொண்ட அனைத்து உள்ளங்களும் பேரணியில் பங்கேற்க வேண்டும்”.
வாகனப் பேரணிக்கு வலு சேர்க்கும் வகையில், நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன் என திரையுலகினர் ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். ‘ ஏழு பேர் விடுதலை விரைவில் சாத்தியமாகும்’ என்ற நம்பிக்கையோடு பேரணி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் அற்புதம் அம்மாள்.
n10




