செய்திகள்

சுமந்திரன் அமெரிக்கா பயணம்: நிஷா பிஸ்வால் உட்பட முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பார்

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது அதிகளவு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவை வலியுறுத்தவுள்ளது.

இன்று அதிகாலை அமெரிக்கா புறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான  இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உட்பட அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தின்படி உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சர்வதேச நீதிபதிகளை ஏற்க இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் அமெரிக்கா எடுக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காகவே சுமந்திரன் அமெரிக்கா புறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நாளை ஜெனீவாவில் ஆமம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கமும், தமிழர் தரப்புக்களும் இது தொடர்பிலான காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளன. ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இக்­கூட்டத்தொடரில் இலங்கை நிலை­வரம் தொடர்­பான வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­மையின் கார­ண­மாக இலங்­கைக்கு மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்க கூட்டத்தொட­ராக காணப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­க­ததின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ. சுமந்­திரன் தலை­மை­யி­லான குழு­வினர் ஜெனிவா நோக்கி பய­ண­மா­க­வுள்­ளனர். எதிர்­வரும் 29 ஆம் திக­தியே இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், சுமந்திரனும் ஆணையாளரைத் தனித் தனியாகச் சந்தித்து தமது கருத்துக்களை அவருக்குத் தெரியப்படுத்தவுள்ளனர்.

ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கு­வதா இல்­லையா என்ற விடயம் முக்­கியம் இடம்­பி­டிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அவ்விவகாரம் தொடர்பில் ஆணையாளரின் கருத்து எவ்வாறானதாக இருக்கும் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவதற்காகவே சுமந்திரன் அமெரிக்கா செல்கின்றார். குறிப்பாக, ஜெனீவாவில் அமெரிக்கா எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக தமது கருத்துக்களை அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவிருப்பதாக ‘ஞாயிறு தினக்குரல்’ சார்பில் தொடர்புகொண்ட போது சுமந்திரன் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணை உட்பட பல்வேறு விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அங்கு தெரியப்படுத்தப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார். பல விடயங்கள் நடைபெறவில்லை. மேலும் பல விடயங்களில் காலதாமதம் காணப்படுகின்றது எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், ஜெனீவாவில் அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாக அமெரிக்கா இருப்பதால், இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சுதந்திரன் சந்திக்கவுள்ளார்.

இதேவேளையில், அமெரிக்க காங்கிரஸின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலும் சுமந்திரன் உரையாற்றவுள்ளார். நாளை மறுதினம் 14 ஆம் திகதி அவரது இந்த உரை இடம்பெறும். ஜெனீவா பிரேரணை நடைமுறை, அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை,உள்ளடக்குதல், மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் இந்த உரை இடம்பெறவிருக்கின்றது.

இதனைவிட அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவாசமும் இதே கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார். அவர் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதையிட்டு தனது உரையில் விளக்குவார். முக்கியமான இராஜதந்திரிகளும், காங்கிரஸ் பிரமுகர்களும் கலந்துகொள்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தரங்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
R-06