செய்திகள்
வடக்கில் காணிகள் இல்லாத மக்களை குடியேற்ற சீமெந்து கூட்டுத்தாபான காணியை அரசுடைமையாக்க தீர்மானம்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2016 மார்ச் இறுதி வரையில் 251,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
இக்குடும்பங்களில் 11,000 குடும்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இருக்கின்றார்கள். தற்போது யாழ் மாவட்டத்தில் 1,109 குடும்பங்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இவ் 1,109 குடும்பங்களில் 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக அறிக்கையிடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களினூடாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணியினை அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த இடத்தில் யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் காணப்படுகின்ற 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியும். எனவே குறித்த காணியினை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
n10




