தனியார் காணிகளிலுள்ள முகாம்களை அகற்றுவதற்கு உடனடி நவடிக்கை: ஜனாதிபதி உறுதி
யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகளில் உள்ள முப்படையினரின் முகாம்கள் தொடர்பான விபரங்களை உடனடியாகத் திரட்டித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
படையினரை அங்கிருந்து வெளியேற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தத் தகவல்கள் தனக்குத் தேவையாக இருப்பதாகவும், அடுத்த ஒரு இரு தினங்களுக்குள் இந்த விபரங்களைத் தனக்குப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
தனியார் காணிகளிலுள்ள இராணுவ வெளியேற்றம் தாமதமடைவதால், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது குறித்து விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே, இது குறித்து ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
புனரமைப்புச் செய்யப்பட்ட யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறப்பதற்காக நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் தனியார் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றமை தொடர்பான விடயத்தை விஜயகலா மகேஸ்வரன் கவனத்தில் கொண்டு வந்தார்.
அதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்த தொடர்பில் தான் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறித்த விபரங்களை தன்னிடத்தில் கையளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தன்னிடம் ஏற்கனவே விபரங்கள் உள்ளதாகவும், மேலும் சில விபரங்களே தேவையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“தனியாருக்கு சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றனர். இதனால் பெருமளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. மீள்குடியேற்றமும் தாமதடைகின்றது. இவ்விறான நிலையில் தற்போதைய புதிய ஆட்சியில் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்” என பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளையில், இம்மாத இறுதிக்குள் இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
R-06




