வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட இராணுவம் அனுமதி மறுப்பு
யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு இராணுவம் அனுமதி மறுத்திருந்தது.
வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களது காணிகளில் மூன்றாம் கட்டமாக 201.3ஏக்கர் காணியானது நேற்றைய தினம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதன்படி வல்லை தெல்லிப்பழை அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிர நிலையத்திற்கு அண்மித்த 63 ஏக்கர் காணிகளும், தெல்லிப்பழை 18ஆவது சிங்கரேஜின படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 201.3 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கையளிக்கப்பட்ட காணிகளை காணிகளுக்கு உரித்தான மக்கள் சென்று தமது காணிகளை பார்வையிடுவதற்கு இராணுவ தரப்பானது நேற்றைய தினம் அனுமதி மறுத்திருந்தது. அத்துடன் வடமாராச்சியையும் தெல்லிப்பளையையும் இணைக்கின்ற தெல்லிப்பளை அச்சுவேலி வீதியும் மீள கையளிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த நிலையிலும் நேற்றைய தினம் அப் பாதை சீமெந்து தூண்களால் முட்கம்பியினால் அடைத்த நிலையிலேயே காணப்பட்டிருந்தது.
இராணுவத்தினுடைய இத்தகைய செயலினால், காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் தமது காணிகளை தம்மால் பார்க்க முடியவில்லையென மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இதேவேளை நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட காணிகளில் முன்னரை போன்று காணிகளை ஊடறுத்த நிலையில் இராணுவத்தின் முட்கம்பி காவலரன்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ முகாம்களும் அகற்றப்படாது உள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.
R-06




