செய்திகள்

25 வருடமாக செயற்பட்ட சிதம்பரபுர முகாம் மூடல்: 193 குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கி வைப்பு

கடந்த 25 வருடமாக வவுனியா, சிதம்பரபுரம் முகாம் பகுதியில் வசித்து வந்த 193 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்கள் வாழ்ந்த முகாம் பகுதி சிதம்பரநகர் எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இன்று சிதம்பரபுரம் முகாம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் காணி உறுதிப் பத்திரங்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மத்திய மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்ததுடன் கிராமத்திற்கான புதிய பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்தும், தென்பகுதியில் ஏற்பட்ட கலவரங்களினாலும், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களையும் தற்காலிகமாக தங்க வைப்பதற்காக 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிதம்பரபுரம் நலன்புரிநிலையம் கடந்த 25 வருடங்களாக தற்காலிக கொட்டகைகளுடன் முகாமாக செயற்பட்டு வந்திருந்தது. இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இங்கிருந்த பலர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் மீள்குடியேறுவதற்கு காணிகள் அற்ற 193 குடும்பங்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி அரச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இம் முகாமிலேயே அவலவாழ்வு வாழ்ந்தனர். இவர்கள் தமக்கு அப்பகுதி காணிகளையே வழங்கி மீள்குடியேற்றம் செய்யுமாறு பல வருடங்களாக கோரி வந்த நிலையில் தற்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பரப்பு காணி வீதம் வழங்கப்பட்டுள்ளது. அக் காணிகளுக்கான உறுதிப்ப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

முகாமாக செயற்பட்டு வந்த இப்பகுதி ‘சிதம்பரநகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று முதல் புதிய கிராமமாகவும் மாற்றியமைக்கப்டபட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமரா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறிnலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

IMG_6290 copy IMG_6299 copy IMG_6329 copy

N5