வடக்கின் பொருளாதார மத்திய நிலையமும் தமிழ் தலைமைகளும்
-நரேன்-
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. அதன் அடிப்படையில் வடமாகாணத்திற்கு என பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைப்பது எனவும் முடிவாகியது. ஆனால் இன்று 6 மாதங்கள் கடந்த நிலையில் கூட பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவு தொடர்பில் குழப்பான நிலை இருக்கின்றது. யுத்தத்தால் வெகுவாக பாதிப்படைந்து மீளத் துடிக்கும் எமது விவசாயிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையம் வர்த்தகர்களுக்கு சிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. இவ்வாறான நிலையில் இந்த பொருளாதார மத்திய நிலைய விவகாரம் இன்று உற்பத்தியாளர்களான விவசாயிகளையும், வியாபாரிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்குமளவுக்குச் சென்றுள்ளது. இது தமிழ் அரசியல் தலைமைகளின் கையாளாகாத ஆளுமையற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருக்கின்றது.
இன்று மாறி வரும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தி வரும் நிலையில் வடக்கில் ஒரு மாவட்டத்தின் அபிவிருத்தியை கூட திட்டமிடக் கூடிய ஆற்றல் தமிழ் தலைமைகளிடம் இல்லையா என்ற ஏக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது. இந்த பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என்கின்ற இரண்டு தரப்பும் உடனடி சாதக பாதக நிலமைகள் தொடர்பாகவும் தமது இலாபத்தையுமே சிந்திப்பர். அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் வடக்கில் பொறுப்பு வாய்ந்த சபையாகிய மாகாண சபை இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து தீர்க்கமான ஒரு முடிவை சாதக பாதாக தன்மைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முடிவெடுத்திருக்க வேண்டும். அதனை சம்மந்தப்பட்ட மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த வேலையை வடமாகாணசபை செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. அதன் விளைவே ஏட்டிக்கு போட்டியான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களால் ஊர் இரண்டுபட காரணமாகியுள்ளது. இதைகூட சில அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக கையாள முயல்கிறார்கள்.
ஆரம்ப கட்டத்தில் 200 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் காலப்போக்கில் மேலும் விஸ்தரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். அந்த விஸ்தரிப்புக்கு ஏற்ற உட்கட்டுமானங்களை அது கொண்டிருக்க வேண்டும். அங்கு வந்து செல்ல உள்ள நூற்றுக்கணக்கான வாகனங்களை தரித்து நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடிய நிலவசதி கூட தேவை. அதற்கேற்பவே இடத்தெரிவு இடம்பெறவேண்டும். நகரப்பகுதியில் அவ்வாறான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே உள்ளது. தாண்டிக்குளம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதி. அப்பகுதியில் இவற்றால் மேலும் நெரிசல்கள் ஏற்படவாய்ப்புண்டு. பொருளாதார மத்திய நிலையத்துடன் அப்பகுதியில் ஏற்படவுள்ள நெரிசல் மற்றும் இரவு நேர செயற்பாடுகள் காரணமாக சமூகசீரழிவுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படும். அருகில் இருக்கும் விவசாய கல்லூரி, பண்ணைக்கு மட்டுமல்ல குடிநீரைக் கூட மாசுபடுத்தக் கூடிய சூழலையும் இது உருவாக்கும். அந்த நிலையில் தாண்டிக்குளத்தைக் காட்டிலும் சனநெரிசல் அற்ற ஓமந்தை, மாணிக்கவளவு பொருத்தமானது என வடக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். நிபுணர் குழுவின் அறிக்கை கூட அதைவே வலியுறுத்துகிறது.
பொருளாதார மத்திய நிலைய இடஅமைவு குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனவரி 29 இல் நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை ஒன்றும் எழுதப்பட்டது. ஆனால் அந்த நிபுணர் குழுவின் அறிக்கையை வைத்து தீர்மானங்களை நிறைவேற்றாது சாட்டுப் போக்குகள் கூறி வேறு இடத்தை தெரிவு செய்ய முயற்சித்தமை அரசியல் தலைமைகளினதும், அரச அதிகாரிகளினம் நிர்வாகத் திறன் அற்ற தன்மைகளையே வெளிப்படுத்தி நிற்கின்றது. நிபுணர் குழுவின் அறிக்கை பெரிதாக கணக்கில் எடுக்கபடவில்லை. இதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட காரணம். இதனால் மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று ஓடுகின்றதா என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தியுமுள்ளது. வடமாகாண சபையில் தாண்டிக்குளம் காணியை வழங்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் கூட முதலமைச்சர் ஓமந்தை, நொச்சிமோட்டை, மூன்று முறிப்பு காணிகளை பற்றியே பேசி வந்தார். இந்த நிலையில் வடமாகாண சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகளால் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இது முதலமைச்சருக்கு எதிராக இல்லை. வடமாகாண சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவே எனவும் கூறப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தை மாற்ற முயன்றது வடக்கு முதலமைச்சரே. அவர் அவ்வாறு ஒரு முடிவு எடுத்ததற்கு காரணமும் உண்டு. அந்த தீர்மானம் என்பது வடமாகாண சபையின் சுய விரும்பின் அடிப்படையிலான முடிவும் அல்ல.
பொருளாதார மத்திய நிலைய இடத்தெரிவு தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் வடக்கு முதல்வர் பேசிக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக முடிவு எடுக்கப்படா விட்டால் இந்த மையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் அவர்களிடம் இருந்து வடக்கு அமைச்சர் ஒருவருக்கு சபை அமர்வு நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்ததாக மாகாணசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் எதிரொலியாகவே அவசர அவசரமாக ஒரு இடத்தை உடனடியாக வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருந்தது. அந்த விடயம் மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு ஓமந்தையே தமது தெரிவு எனவும், அது ஏற்றுக் கொள்ளதாவிடத்து திட்டம் வேறு மாவட்டத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் தாண்டிக்குளத்தை வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆக இங்கு தாண்டிக்குளம் என்பது மாகாணசபையில் ஏகோபித்த முடிவு அல்ல. அங்கு அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம். சபைக்கு விருப்பமான இடம் ஏற்கனவே ஒமந்தை என கூறப்பட்டுள்ளது. இதனால் அது பற்றி மத்திய அரசுடன் பேச வேண்டிய பொறுப்பு சபைக்கு இருக்கிறது. அதனால் வடக்கின் முதல்வர் அதையே செய்தார். அவரது அந்த செயற்பாடு சரியானதும் தேவையானதும் கூட. ஆனால், அது எவ்வாறு மாகாண சபை தீர்மானத்தை குழப்புவதாக அமையும் என்று புரியவில்லை. அழுத்தம் கொடுத்து வடக்கின் அபிவிருத்தியை மத்திய அரசாங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. இதனை வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில் தான் மத்திய அமைச்சுக்கும், மாகாண சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒரு கயிறு இழுத்தலில் வந்து விழுந்திருக்கின்றார்கள் வியபாரிகளும் விவசாயிகளும். மறுபக்கம், வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த உடனயே அது குறித்து சிந்தித்து மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிகளுடன் கலந்துரையாடி இடத்தை தீர்மானித்து இருக்க வேண்டியவர் வடக்கு முதலமைச்சரே. அதை அவர் மாகாண சபையிலும் தெளிவுபடுத்தி, வவுனியா மாவட்ட மக்களுக்கும் அதன் சாதக பாதகம் தொடர்பில் தெளிவுபடுத்தி பொதுவான எல்லோரது ஏகோபித்த தெரிவாக அந்த இடத்தை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். மத்திய அமைச்சரை கூட வடக்கிற்கு அழைத்து இங்குள்ள பிரதிநிதிகளுடன் இணைந்து அது பற்றி பேசி முடிவெடுத்திருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்யத் தவறியுள்ளார். வடக்கு முதல்வர் இந்த விடயத்தில் நிர்வாக ரீதியாக சரியாக ஆரம்பத்தில் அணுகத் தவறியமையும் இந்த குழப்பத்தை வலுப்படுத்தியுள்ளது.
வடக்குக்கான அபிவிருத்தி குறித்து வடக்கு மக்கள் ஒற்றுமையாக இருந்து அதனை பெற வேண்டிய நிலையில் தமக்குள் முரண்பாடுவது உசிதமானதல்ல. இந்த முரண்பாடு தலைமைகளின் பொறுப்பற்ற தன்மைகளால் ஏற்பட்டதே. திட்டங்கள் என்பது வெறும் திட்டமிடல்கள் அல்ல. அவை மக்களுக்கானதே என்பதை மத்திய அரசாங்கமும், மாகாண சபையும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான ஒரு இணக்கத்தை இருவரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு முதலமைச்சர், வடக்கின் அமைச்சர்கள் கலந்துரையாடி ஒரு இடத்தை தெரிவு செய்து அதனை அரசுக்கு தெரியப்படுத்தவுள்ளனர். மக்களுக்குள் குழப்பங்களும் முரண்பாடுகளும் ஏற்படுவதற்கு முன்னரே இது குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் சற்று தாமதித்திருந்தாலும் இது வரவேற்கப்பட வேண்டியதொன்று. இந்த விடயத்தில் எடுக்கப்படும் முடிவினை மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துமிடத்து அதனை ஏற்றுக் கொண்டு நல்லிணக்கத்திற்கான ஒரு குறைந்தபட்ச ஒத்துழைப்பாக இதனை மத்திய அரசாங்கம் மாகாண சபையுடன் இணைந்து செய்ய வேண்டும். அதுவே எதிர்கால நல்லிணக்க முயற்சிகளை பலப்படுத்துவதாக அமையும் என்றே கருதத் தோன்றுகின்றது.
N5




