ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம்: குழப்புபவர்கள் பாரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்!
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல்வாதிகள் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க ஓமந்தையை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதிக விவசாயிகள் கொண்ட வன்னி மாவட்டத்தில் அவர்கள் பாரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத் தலைவர் எஸ்.சிவபாதம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலைய இழுபறி நிலை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடம் தொடர்பில் ஆராய்கிறார்கள். அதில் தாண்டிக்குளம், ஓமந்தை, மாங்குளம் என பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கு 99 வீதமான விவசாய அமைப்புக்கள், விவசாய மக்கள் ஓமந்தை என்ற இடத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனை அரச அதிகாரிகளுக்கும், எமது அரசியல் தலைமைகளிடமும் மக்கள் முன்வைத்து வருகிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் இதனை தனிநபர் முரண்பாடு காரணமாக செயற்படுகிறார்கள். விக்கினேஸ்வரன் ஐயா இவ்வாறு கூறுகிறார். அதனால் அவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக தெரிகிறது. இது தமிழினத்திற்கு பாராதூரமான ஒரு விளைவைத் தரும்.
தாண்டிக்குளம் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கு விவசாய பண்ணை, விதை உற்பத்தி பண்ணை, விவசாய கல்லூரி என்பன இருக்கிறது. இந்த விவசாய கல்லூரி பல ஆண்டுகளாக பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் அவ்விடத்திற்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் தெற்கு பகுதியில் உள்ள விவசாய கல்லூரிகள் சென்று தான் எமது வடபகுதி மாணவர்கள் கற்றல் மற்றும் விவசாய ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தார்கள். அதனால் ஒரு கட்டத்தில் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென்பகுதியில் சென்று கல்வி கற்காத, அங்கு போகாத நிலை இருந்தது. இதனால் முன்னைய அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் கடும் போராட்டம் நடத்தியதன் விளைவாக தான் வவுனியாவில் விவசாய கல்லூரியை அரசாங்கம் அமைத்தது. அந்த விவசாய கல்லூரிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது எந்தவகையிலும் பொருந்தாது.
அந்த பகுதியில் உள்ள சத்தியலிங்கம் ஐயா, சிவமோகன் ஐயா அவர்களும் தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என கோருகிறார்கள். உண்மையில் தாண்டிக்குளம் பொருத்தமில்லை. ஆனால், ஓமந்தையில் அமைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அங்கு போதியளவு காணி இருக்கிறது. வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் வரை வருகிறது. தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இருந்து கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கிறது. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை. இதனை செய்பவர்களது அரசியல் வாழ்க்கை கூட கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை பெறாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விருப்பத்தை பெற்று அதனை அமைக்கவுள்ளதாக சம்மந்தன் ஐயா தெரிவித்திருக்கிறார். ஆனால் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். அதற்கேற்ப தான் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அதைவிடுத்து ஒரு தனிநபர் போராட்டம் நடத்துவது மாதிரி தெரிகிறது. ஒரு சிலர் மீது கோபத்தை வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் இடத்தில் அமைக்க கூடாது என அவர்கள் கூறுவது போல் தான் போய் கொண்டு இருக்கிறது. ஆனால், எங்களுடைய அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். விவசாயிகளுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும். அதற்காக எமது அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு ஓமந்தைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என விவசாய அமைப்புக்கள், விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதிக விவசாயிகளைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் அவர்கள் பாரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களிடமும் விவசாய அமைப்புக்கள் பல ஓமந்தையை தெரிவு செய்யுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
N5




