செய்திகள்

இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்புக்கள் சாத்தியப்படுமா?

-நரேன்-

இந்த நாட்டில் 30 வருடமாக புரையோடிப் போயிருந்த யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டது. நல்லிணக்கம், நல்லாட்சி, புதிய அரசியலமைப்பு என்பன தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் யத்தத்தால் பாதிப்படைந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றும் பல மக்களது காணிகள் விடுவிக்கப்படாத நிலை காணப்படுகின்து. போர் முடிந்த பின் கூட வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவக் குறைப்பு செய்யப்படவில்லை. மாறாக யுத்த காலத்தில் இருந்தது போன்றே அவர்கள் நிலை கொண்டுள்ளார்கள். இது தவிர இராணுவத் தேவைகளுக்கு என பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சுவீகரிப்பதற்கு தற்போதும் நடவடிக்கைகள் இடம்பெற்றும் வருகின்றன. கடந்த வருடம் யாழ் வந்திருந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கடந்த ஜீன் 30 ஆம் திகதிக்குள் இராணுவம் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கபடும் என அறிவித்திருந்தார். இலங்கையின் அதி உச்ச பதவி நிலையில் உள்ள ஒருவரும், காணி தொடர்பான முழு அதிகாரமும் உடையவராக காணப்படும் ஜனாதிபதியின் இந்த கருத்தானது வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் 2018 ஆம் ஆண்டுக்குள் தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என் ஐ.நாவில் தெரிவித்துள்ளது. இது சாத்தியப்படுமா…? நடைமுறைக்கு வருமா என்று பல சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தை சமரசம் செய்யும் ஒரு முயற்சியாக கூட இருக்கலாம்.

யுத்த்திற்கு பின்னர் 7வது வருடமாக ஐ.நாவில் கருத்து தெரிவித்த இலங்கை இம்முறை ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளது. இதுவரை காலமும் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு வாக்குறுதியும் வழங்காத அரசாங்கம் இம்முறை இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பாக வெளிப்படுத்தியும் இருக்கின்றது. ஆனால் மறுபுறம் தனியார் காணிகள் தற்போதும் கூட இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்து இராணுவ ஆக்கிரப்பு என்பது தமிழ் மக்களுக்கு பழகிப் போனவிடயமாகி விட்டது. கடந்;த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அதிகளவிலான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இதற்கான மாவட்ட செயலகத்தில் காணி சுவீகரிப்பு கிளை ஒன்றும் நிறுவப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களால் பல காணி சுவீகப்பு சட்டத்தின் மூலம் பொது தேவைக்கு என கூறி இராணவத்திற்கான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டிருந்ததுடன் சில இடங்களில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் இணைந்து தடுத்தும் இருந்தனர். தற்போதும் இதே நிலை தொடரவே செய்கிறது.

வலிவடக்கில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரண்டு கட்டங்களாக ஒரு தொகுதி காணிவிடுவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா அமர்வு ஆரம்பமாக இருந்த நிலையில் கூட அண்மையில் 210 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. இந்த அரசாங்கம் காணிகளை விடுவித்து வருவதாக சர்வதேசத்திற்கு காண்பிக்கும் ஒரு முயற்சியாகவே இதனை செய்திருந்தது. ஆனால் இன்று பல காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்தும் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் கண்டு கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் இராணுவம் சுவீகரித்த நிலங்களில் முகாம்களை அமைந்துள்ளதுடன், தொழில் நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வலிவடக்கு, பரவிப்பஞ்சான், கேப்பாபுலவு, இந்துபுரம் ஆகிய பகுதிகளில் பெருமளவு காணிகள் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் சிறிய அளவு தனியார் நிலங்களுக்கும் அனைத்து மாவட்டங்களிலும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் ஓமந்தை சோதனை சாவடி அமைந்திருந்த நிலம், பேயாடி கூழாங்குளம், குடியிருப்பு இராணுவ முகாம், செட்டிகுளம் பெரியகட்டு, கிளிநொச்சியில் பூநகரி பிரதான படைத்தளம் அமைந்துள்ள காணி என அவை நீண்டே செல்கின்றது. இவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகனள் இடம்பெறவில்லை. இராணுவ தேவைக்கு அப்பால் சம்பூரில் கூட அனல்மின்நிலையம் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதியில் பரவலாக அரச காணிகள் பல இருந்தும், பொது தேவைக்களுக்கு என தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள சுவீகரிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் காடுகளை அழித்து புதிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டும் உள்ளன. குடியேற்றத்திற்காக புதிய நிலங்களை உருவாக்கும் அரசாங்கம், இராணுவத் தேவைக்கும் அரச காணிகளை பயன்படுத்தி விட்டு சுவீகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க முடியும். ஆனால் அதை செய்வதாக தெரியவில்லை. இந்த அரசாங்கம் கூட பழைய அரசாங்கத்தில் நிலைப்பாட்டில் இருந்து இராணுவம் தொடர்பான நிலைப்பாட்டில் பெரியளவில் மாறியதாக தெரியவில்லை. அதற்கு காரணமும் இருக்கு. முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் இராணுவத்தினர் பலர் கோத்தபாயவுடன் நெருக்கமானவர்களாகவும், விசுவாசிகளாகவும் இருந்தனர். இதனால் இராணுவத் தரப்புக்கு அழுத்தம் கொடுத்தால் குழப்பம் வருமா என்ற அச்சநிலையில் இருப்பதாகவே கருத இடமுண்டு. ஏனெனில் இதன்வெளிப்பாடாகத் தான் இராணுவப் புரட்சி தொடர்பாக அரசாங்கம் மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் கூட அண்மையில் நினைவுபடுத்தியிருக்கிறார். இது சாத்தியமாகுமா என்பது ஒருபுறமிருக்க இராணுவம் தொடர்பான அச்சநிலை காணப்படுவதையே இது வெளிப்புடுத்துகின்றது.

இன்னொரு பக்கம், இராணுவத்தை வெளியேற்றதுல். காணி விடுவிப்பு என்பன தொடர்பாக தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு கொடுத்து வரும் அழுத்தம் என்பது தற்போது குறைந்து போயுள்ளது. ஐ.நா விசாரணை தேவை என கடுமையாக அழுத்தம் கொடுத்து வந்த தமிழர் தரப்புக்கள் தற்போது அதில் ஒரு மென்போக்கு அரசியலை கடைப்பிடிப்பதை அவதானிக்கலாம். அதேபோல் தான் இராணுவ விடயத்தில் தமிழர்தரப்பு தீவிர போக்கை கடைப்பிடிக்கும் எனத் தெரியவில்லை. அதனால் 2018 ஆம் ஆண்டுக்குள் காணி விடுவிப்பு என்பது வெறும் கண்துடைப்பாக அமைய வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அதை வலியுறுத்தும் தரப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கக்கூடிய நிலமை இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகின்றது. ஏனெனில் தமிழர் அரசியல் இணக்க அரசியலுடன் கூடிய மென்போக்கு நிலைக்குச் சென்றுள்ளது.

N5