செய்திகள்

பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சராகும் முன்னாள் ஊடகவியலாளர்

கமரூனின் ராஜினாமாவை அடுத்து பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு பின்னர் வாபஸ் பெற்றவரும், லண்டனின் முன்னாள் மேயரும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியற வேண்டும் என்று பிரசாரம் செய்தவருமான போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமர் தெரேசா மே யின் அமைச்சரவையில் வெளிநாட்டு அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

தன்னிச்சையாக செயற்படுவார் என்றும் வித்தியாசமான போக்கு உடையவர் என்றும் கருதப்படும் போரிஸ் ஜோன்சனின் இந்த நியமனம் பிரித்தனானியாவுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று சர்வதேச ஊடகங்கள் கருத்துக்களை முன்வைக்க தொடங்கியுள்ளன.

போரிஸ் ஜோன்சனுக்கு இப்போதைய வயது 52.

2001 ஆம் ஆண்டு முதல் 2008 வரை ஹென்லி பகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் அக்ஸ்பிரிஜ் மற்றும் சௌத் ரைசிலிப் பகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார்.

ஒஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த போரிஸ் ஜோன்சன் பிரித்தனியாவின் டைம்ஸ் பத்திரிகையில் பத்திரிகையாளராக பயிற்சி பெற்றார். ஆனால் செய்தி ஒன்றில் இடம்பெற்ற ‘ மேற்கோள்’ தொடர்பில் அப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் டெலிகிராப் பத்திரிகையில் இணைந்த அவர் 1989 இல் அப்பத்திரிகையின் பிரசல்ஸ் நிருபராக பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையின் ஆசிரியராக பொறுப்பேற்ற போரிஸ் ஜோன்சன் 2001 ஹென்லியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பழமைவாத கட்சியின் உப தலைவராகவும் நிழல் அமைச்சராகவும் பணி ஆற்றியுள்ளார். அத்துடன் லண்டன் மேயராகவும் அவர் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.

கட்சியில் செல்வாக்கும் வாக்கு வங்கியும் உள்ள போரிஸ் ஜோன்சனை தனது அமைச்சரவையில் வைத்திருப்பது சாதகமானது என்பதும் அவரை வெளிநாட்டு அமைச்சராக தெரேசா நியமித்தமைக்கு காரணங்களில் ஒரு என்று கூறப்படுகிறது.