சுல்தான் – 12 நாளில் 500 கோடி வசூல்
‘பாகுபலி’ படத்தின் வசூலை ‘கபாலி’ படம் எட்டிப் பிடிக்கும் என்ற குரல் கோலிவுட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கையில் அதற்கு முன்னதாக பாலிவுட்டிலிருந்து ‘சுல்தான்’ படம் 500 கோடி ரூபாயை வசூலித்துவிட்டது என்ற குரல் வெளிவந்துவிட்டது. ரம்ஜானை முன்னிட்டு 12 நாட்களுக்கு முன்னதாக ஜுலை 6ம் தேதி வெளியான ‘சுல்தான்’ படம் உலக அளவில் 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ஹிந்தித் திரையுலகில் யாரும் செய்யாத சாதனையாக 10 படங்களுக்கும் மேல் 100 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்த சல்மான் கான் தற்போது 500 கோடி ரூபாயைக் கடந்து மேலும் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார். பாலிவுட் வரலாற்றில் ஆமீர்கான் நடித்த ‘பிகே’ படம் 700 கோடிகளைக் கடந்து உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற ஹிந்தித் திரைப்படம் என்ற முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து சல்மான் கான் நடித்த ‘பஜ்ரங்கி பைஜான்’ படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 500 கோடிக்கும் மேல் வசூலித்து ஆமீர்கான், அபிஷேக் பச்சன் நடித்த ‘தூம் 3’ மூன்றாவது இடத்தில் உள்ளது.
தற்போது ‘சுல்தான்’ படம் 500 கோடியைக் கடந்துள்ளது. ஆமீர் கானுக்கு அடுத்து இரண்டு 500 கோடி கிளப்பில் தற்போது சல்மானும் சேர்ந்திருக்கிறார். ஆனாலும், 100 கோடி கிளப்பில் 10 படங்களுடன் சல்மான் தான் முதலிடத்தில் இருக்கிறார்.
N5




