செய்திகள்

ஜனாதிபதியை, பிரதமரை நம்ப முடியாவிட்டால் எதையும் நாங்கள் அடைய முடியாது: சம்பந்தன்

தமிழினத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான காலஞ்சென்ற  மு.சிவசிதம்பரத்தின் 93 ஆவது ஜனன தினம் இன்றாகும். காலஞ்சென்ற மு.சிவசிதம்பரத்தின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழ். வடமராட்சி – நெல்லியடியில் நேற்று மாலை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது,

“நாங்கள் காரசாரமாக, தீவிரமாக செயற்பட வேண்டிய அவசியமில்லை. நீதியின் அடிப்படையில் நியாயத்தின் அடிப்படையில் பக்குவமாக, நிதானமாக, ஒழுங்காக நாங்கள் செயற்பட வேண்டும். இன்றைக்கு எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேசம் இன்றைக்கு எமது பிரச்சினையில் உள்ள நீதி, நியாயத்தை உணர்கின்றது, ஏற்றுக்கொள்கின்றது.

அதுவொரு பெரும் முன்னேற்றம். அந்த முன்னேற்றம் இன்று நேற்று ஏற்படவில்லை. 83 ஆம் ஆண்டு நடைபெற்ற பல கருமங்களின் நிமித்தம், படிப்படியாக உருவாகி இன்றைக்கு அந்த நிலைமைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். தோல்வி மனப்பான்மையுடன் நாங்கள் இதை எதிர்நோக்கக் கூடாது. நாங்கள் நம்பத் தயாராக இருக்க வேண்டும்.

ஜனாதிபதியை, பிரதமரை நம்ப முடியாவிட்டால் எதையும் நாங்கள் அடைய முடியாது. நம்புவது என்றால் நாங்கள் மோட்டுத்தனமாக நம்ப வேண்டியது இல்லை. ஆனால், அவரை நாங்கள் நம்புகின்றோம். எங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயற்பட வேண்டும் என்று அவர்களை செயற்பட வைக்க வேண்டியது எமது பொறுப்பு.”

R-06