செய்திகள்

தங்கத்திற்கு மேல் தங்கங்களை வாங்கி குவிக்கும் 92 வயது தாத்தா!

-கே.வாசு-

ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னும் சில வரலாறுகள் இருக்கிறது. சிலர் தமது முயற்சியால் வரலாற்றில் தமக்கான ஒரு இடத்தை பெறுகிறார்கள். இன்னும் சிலர் முயற்சியற்றவராக ஏதோ வாழ்ந்தோம், இறந்தோம் என்றாகிவிடுகிறார்கள். இந்த நிலையில் இன்று பல இளைஞர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக தள்ளாடும் வயதிலும் திடகாத்திரமாக தன்னால் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை. தற்போது பல தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.

கிழக்கின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தின் உவர்மலையைச் சேர்ந்தவர் அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை. தற்போது இவருக்கு 92 வயது. 05.09.1924ஆம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் பிறந்தார். அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை தனது பாடசாலை கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார்.

ms5கல்வி கற்றுக் கெனாண்டிருந்த போது தனது 13 வயதில் திறந்த வயதுப் பிரிவுக்கான விளையாட்டு போட்டிகளில் ஒன்றான மரதன் ஓட்டத்தில் பங்கு கொண்டு தனது விளையாட்டு வெற்றியினை ஆரம்பித்தார். பாடசாலை மட்டத்திலும், பாடசாலைக்கு வெளியிலும் பொதுவாக நடத்தப்படும் மரதன் ஓட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வெற்றிகளை தனதாக்கி கொண்டார். 24 வயதில் அரச சேவையில் இணைந்து கொண்ட இவர் கண்டி, பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாவட்ட செயலங்களில் இலிகிதராக பணியாற்றினார்.

1964ஆம் திருகோணமலை கடற்படைத்தளத்தில் சிவில் அலுவலகத்தில் கணக்கு பரிசோதகராக பணி உயர்வு பெற்று சேவையாற்றி 1974ஆம் வருடம் ஓய்வு பெற்றுக் கொண்டார். 6 ஆண் பிள்ளைகளின் தந்தையாகிய இவர் தொடரந்து விளையாட்டு துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். 2014ஆம் ஆண்டு நுவரெலியாவில் நடைபெற்ற போட்டியிலும் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர், நீளம் பாய்தல் போட்டிகளில் பங்கு கொண்டு தங்கப்பதக்கத்தை பெற்றிருந்தார்.

ms32015ஆம் ஆண்டு தனது சுகயீனம் காரணமாக வேக நடை போட்டியில் மாத்திரம் பங்கு கொண்டு முதலிடம் பெற்றிருந்தார். 5 ஆண் சகோதரர்களுடனும், 3 பெண் சகோதரிகளுடனும் பிறந்த இவர் குடும்பத்தில் மூத்த பிள்ளையாவார். இவரது சகோதரர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டி அவர்களையும் சிறந்த இடத்திற்கு செல்ல ஒரு பொறுப்புள்ள தந்தையாகவும் வழிகாட்டியுள்ளார். மூத்த மகன் வைத்தியனாகவும், நான்கு பிள்ளைகளை பொறியியலாளராகவும் மற்றுமோர் மகனை மாலுமியாகவும் பயிற்றுவித்துள்ளார்.

கடந்த 16, 17 ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்ற 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் 4 தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் மற்றும் மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கம் என்பன இணைந்து நடத்திய 9வது வருடாந்த போட்டியிலேயே இத் தங்கத்தைப் பெற்றுள்ளார். இதில் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர், ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கு கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார். தொடர்ந்தும் உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்களில் பங்கு பற்றுவதற்காக விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர் அடுத்த வருடம் பங்குனி மாதம் கொழும்பில் நடைபெற உள்ள போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இப்போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல முதியவர்களை அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் அல்பிரட் நொயல் செல்லப்பிள்ளை வருங்கால சமுதாயம் விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்தி மாவட்டத்திற்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது ஆதங்கம் என்கிறார்.

ms2 ms4 ms6 ms7

N5