செய்திகள்

பல்துருவ நிலை நோக்கி மாறிவரும் உலக ஒழுங்கும் தமிழ்தேசிய பேராட்டமும்

லோ. விஜயநாதன்

அமெரிக்க நலனை முன்னிறுத்தி திரைமறைவில் ஒழுங்கமைக்கப்பட்டு அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்களை அரபு வசந்தம் எனும் பெயரில் அழைக்கின்றனர். இந்த அரபு வசந்தமானது 18.12.2010ல் துனிசியாவில் (Tunisia) அப்போதைய அதிபர் பென் அலி (Zine El Abidine Ben Ali) அவர்களை துனிசியப் புரட்சி (Tunisia Revolution) என்ற பெயரில் ஆட்சி கவிழ்ப்பு செய்வதன் மூலம் தொடக்கி வைக்கப்பட்டது. இது பின்னர் எகிப்தில் அதிபர் கொஸ்னி முபாரக் (Hosni Mubarak), லிபியாவில் தலைவர் முகமர் கடாபி (Muammar Gaddafi), யேமனில் அதிபர் அலி அப்துல்லா சாலேஸ் (Ali Abdullah Saleh), சிரியாவில் அதிபர் பசர் அல் அசாட் (Bushar al-Assad ) ஆகியோரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கும் மற்றும் பகரேன், குவைத், லெபனான், ஒமான், மொரோகோ, ஜோடான் போன்றவற்றில் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வழிவகுத்தது.

ஆனால் எதிர்பார்த்ததைப் போன்றல்லாது 15.03.2013ல் சிரிய அதிபரை பதவியிலிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியானது தோல்வியில் முடிந்ததுடன் இன்று அது உள்நாட்டு யுத்தமாக மாறி அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் இஸ்லாமிய தேசம் (IS) எனும் பெயரில் திரும்பித் தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக சோவியத் ஒன்றியம் (USSR) என்னும் பெயரில் 1990 வரை அமெரிக்காவுக்கு இணையான வல்லரசாக இருந்து மீண்டும் அதேநிலையை தக்கவைக்க நினைக்கும் இன்றைய ரஸ்சியாவையும் சிரியப் போரில் அதிபர் அசாத்துக்கு ஆதரவாக நேரடியாக தலையிட வழிவகுத்துவிட்டது.

இச் சிரியப் போரிலிருந்து ரஸ்சியாவின் கவனத்தைக் குறைக்குமுகமாக அமெரிக்காவால் மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான இன்றைய உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது மேலும் சிக்கல் நிலைக்கு வித்திட்டது. பெப்ரவரி 2014 இறுதிப் பகுதியில் ரஸ்சிய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களால் உக்ரேன் அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வெடித்தது. அதேநேரம் யாரும் எதிர்பாராத வகையில் உக்ரேனின் ஒருபகுதியான கிரிமியாவை (Crimea) ரஸ்யப் படைகள்ஆக்கிரமிக்க 18.03.2014 ல் தனது நாட்டின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக ரஸ்யா இணைத்துக்கொண்டது.

pro_russia_protesters_rtr_img_2

                                                                               கிரீமியாவில் நடைபெற்ற ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டம்

சிரிய, உக்ரேன் போரின் பக்க விளைவாக வெளிக்கிளம்பிய கட்டுக்கடங்காத அகதிகள் வருகை, பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் நாடுகளுக்கிடையேயான முரண்நிலையானது ஐரோப்பிய ஒன்றியத்தை நிலை குலைய வைத்துள்ளதுடன் உலக ஒழுங்கமைப்பைபிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . இப்போர்களானது உலக ஒழுங்கமைப்பில் ஒரு துருவ நிலையில் இருந்து பல்துருவ (Multi-polar) நிலை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ் பல்துருவ நகர்வை மேலும் வலுப்படுத்துமுகமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தான பிரித்தானியாவின் வெளியேற்றமானது காணப்படுகின்றது. பிரித்தானியாவில் 23.06.16ல் நடத்தப்பட்ட மக்கள் கருத்தரியும் வாக்கெடுப்பில் 52% மாணவர்கள் வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இது நாடுகளின் கூட்டமைப்பாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கிடைத்த பாரிய பின்னடைவாகவும் அவ்வமைப்பின் நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுத்துள்ளது. இதை பல்துருவம் நோக்கிய மாறிவரும் உலக ஒழுங்கமைப்பின் ஒரு செயற்பாட்டின் அங்கமாகவே பார்க்கக்கூடியதாகவுள்ளது.

இன்னோர் முனையில் தென்சீனக்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பும் அதற்கெதிராக அதைச் சுற்றியுள்ள நாடுகளின் எதிர்ப்பும் இவ் பல்துருவ நகர்வின் பரிமாணத்தின் வீச்செல்லையை கூட்டியுள்ளது. சீனாவில் கடல் ஆக்கிரமிப்புக்கெதிராக பிலிப்பைன்சால் சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவானது 12.07.2016 அன்று சீனாவின் ஆக்கிரமிப்புக்கெதிராக வெளிவந்துள்ளதுடன் இவ்பல்துருவ நகர்வை மேலும் கூர்மையடையச் செய்துள்ளது.

அந்தவகையில் இவ்மாறிவரும் பல்முனை நகர்வின் அச்சாணிகளாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ரஸ்சியா, சீனா போன்ற நாடுகள் பிரதானமாக விளங்குகின்றன. இவற்றுக்கிடையேயான போட்டித்தன்மையே இவ் பல்துருவ நிலையை நோக்கிய உலக ஒழுங்கமைப்பைத் தீர்மானிக்கவுள்ளன. இப்புதிய ஒழுங்கமைப்பானது நாடுகள் சார் இறைமைக்கும் குடிமக்கள் சார் இறைமைக்கும் புதிய வரைவிலக்கணங்களை ஏற்படுத்த விளைந்துள்ளன. சிரியா, உக்ரேன் போன்றவற்றில் இவ்விரண்டு இறைமை சார்பில் ஒன்றுக்கொன்று முரணான நிலைமைகளையே மேற்சொன்ன நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பானது நாடுகள்சார் இறைமையை முன்னிலைப்படுத்தவில்லை. இதுவே பிரித்தானியா அதிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாகம். அதேநேரம் பிரித்தானியாவின் இம் முடிவானது ஏற்கனவே தமது இறைமையை பிரித்தானியாவிடம் இழந்து நிற்கின்ற ஸ்கொட்லாண்ட், வட அயர்லாந்து தேசங்களுக்கு மீண்டும் இழந்த இறைமையை வென்றெடுக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இவற்றைப் போலவே சீனாவின் கடல்சார் ஆதிக்கத்துக்கெதிராக வழங்கப்பட்ட தீர்வானது சீனாவின் தொடர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்ற (சீனாவின் ஒரு பகுதி என) தாய்வானுக்கு தனது இறையாண்மையை தக்கவைக்க மேற்கொள்ளும் போராட்டத்திற்கான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.

taiwan-independence

இப்படியான பல்துருவ நகர்வானது மிகவும் குழப்பகரமானதும், பிரச்சனைகளையும் மோதல்களையும் உருவாக்குபவையாகவும் இருப்பதுடன் ஈற்றில் சர்வதேச மத்தியஸ்தத்துடனான தீர்வுகளை ஏற்றுச் செயல்ப்படவேண்டிய நிலைமைக்கே வழிவகுக்கும். பொதுவாக இக்காலப்பகுதியில் தேசிய இனங்கள் தாம் இழந்த இறைமையை மீண்டும் முழுதாக பெற்றுக்கொள்வதற்கோ அல்லது அதற்கு ஈடான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கோ வாய்ப்பான காலப்பகுதியாக காணப்படுகின்றது.

இலங்கையின் அமைவிடமானது மேலே சொல்லப்பட்ட பல்துருவ நகர்வினால் ஏற்பட்ட முரண்பாடுகள் நடைபெறுகின்ற பகுதிகளுக்கிடையிலான (Arch) வளைவின் மையத்தில் அமைந்துள்ளது. இதனாலே இயல்பாகவே சர்வதேசத்தின் முழுக்கவனமும் இங்கு குவிக்கப்படுகின்றது. அதிலும் இரண்டு மூலோபாயங்கள் ஒன்றோடொன்று உரசும் பகுதியாக இது அமைந்துள்ளது. அதாவது சீனாவானது தனது பட்டுப்பாதை (Silk Road) திட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட One Belt One Road மூலோபாய திட்டத்திற்காகவும் அமெரிக்காவானது தனது Trans Pacific Partnership Trade Pact மூலோபாய திட்டத்திற்காகவும் இலங்கையை தமது பிடிக்குள் கொண்டு வர விரும்புகின்றன.

இதற்காகவே அமெரிக்காவின் தொடர்பாடல் அதிகாரிகளின் இலங்கை நோக்கிய விஜயங்களும் பசுபிக் கட்டளை பீடத்தின் சிறிலங்கா படைகளுடனான உயர்ந்த பட்ச உறவாடல்களும் நடைபெற்று வருகின்றன. மறுமுனையில் இதுகாலம் வரையில் தென்னிலங்கையை மையப்படுத்தி செயற்பட்ட சீனாவானது வடபுலத்தை நோக்கிய பார்வையைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதன் முதற்படியாகவே சீன தூதுவரினதும் முதலமைச்சர் விக்னேஸ்வரனினதும் சந்துப்பும் வடபுலத்தின் அபிவிருத்தியில் பங்கெடுக்க சீனா ஆர்வமாகவுள்ளது என்ற அறிவிப்பும் அமைந்துள்ளது. அத்துடன் சிறிலங்காவில் தனக்கு சாதகமற்ற ஆட்சி இருக்கின்றபோதிலும் தொடர்ந்தும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பங்காளிப்பதன் மூலம் தனது பிடியை தக்கவைக்க முனைகின்றது.

இம்மாறிவரும் சர்வதேச சூழல்களையும் அவற்றின் மூலோபாயங்களையும் நாம் எமது நலன்களுடன் முரண்படாத வண்ணம் மூலோபாய திட்டங்களை வகுத்து செயற்படுவோமாயின் எமது விடுதலைக்கான பயணத்தை இலகுபடுத்தலாம். அதற்கு முதலாவதாக எமது போராட்டம் உயிர்ப்புடன் தக்கவைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஸ்கொட்லாண்ட் மக்களின் விடுதலை வேட்கை தொடர்ந்து தக்க வைக்கப்படுவதுடன் சரியான மூலோபாயங்களுடன் நகர்த்தப்படுவதும் அதன் விடுதலையானது வெகு தொலைவில் இல்லையென்பதை பறைசாற்றுகின்றது. 18.09.2014ல் நடைபெற்ற தனிநாடுக்கான கருத்தறியும் வாக்கெடுப்பில் 44.7% ஆதரவே கிடைத்ததுடன் அம்முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அன்று அவர்கள் தமது தனிநாட்டுக்கொள்கையை கைவிட்டுவிடவில்லை. மாறாக தற்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை தமக்கு சாதகமாக்கி இரண்டாவது வாக்கெடுப்பை அதுவும் முன்னையது நடந்து முடிந்து 2 வருடங்கள் கழிவதற்குள்ளாகவே வேண்டி நிற்கின்றனர். இதற்கு உறுதியான தலைமை கட்டுக்கோப்பான அமைப்பு மூலோபாயங்களுடனான செயற்பாடு என்பன பிரதான இடங்களை வகுக்கின்றன.

10-Scotland-Getty-v4

அன்று மாறிவரும் உலக ஒழுங்கை அவதானித்து விடுதலைப் புலிகளால் ஒன்றுக்கொன்று முரண்நிலையில் இருந்தவர்களை ஒன்றாக்கி தமிழின விடுதலை ஒன்றே குறி என்ற கொள்கையுடன் கட்டியெழுப்பப்பட்டு தமக்க பின்னரான போராட்டத்தை அணையாமல் காக்கவேன கொண்டு வரப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இன்று அதற்கு முற்றிலும் முரணாக “சிறிலங்கன்” எனும் பெளத்த சிங்கள தேசியத்துக்குள் தமிழ்த்தேசியத்தை கரைப்பதையே தமது குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகின்றது.

எமது எதிரியானவன் எம்முடன் நேரடியாக மோதினால் தமக்கான சேதங்கள் கூடும் என்பதுடன் எம்மை வீழ்த்தமுடியாது என்பதை புரிந்தமையால்த்தான் எம்மில் சிலரை வைத்தே எம்மை வீழ்த்த முனைகின்றான். அதில் பல முனைகளில் வெற்றியும் பெற்றுள்ளான். அன்று கதிர்காமர், டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி என்று தொடங்கி இன்று சுமந்திரன், சம்பந்தன், அடைக்காலநாதன், மாவை என்று அந்த வரிசை நீள்கின்றது.

தமிழ்த்தேசிய போராட்டம் என்றுமில்லாதவாறு மிகப்பெரிய ஆபத்தில் இன்று உள்ளது. நாம் இது வரை சொத்துக்களையும் உயிர்களையும் இழந்துள்ளோம். இனவழிப்புக்கும் உட்பட்டு நிற்கின்றோம். ஆனாலும் இன்றுவரை கொழுந்து விட்டெரியும் விடுதலைச் சுடரை அணையாமல் தக்கவைத்துக்கொண்டுள்ளோம். ஆனால் இன்று நடப்பவையெல்லாம் எம்மில் உள்ள கைக்கூலிகளை வைத்து அச்சுடரை அணைப்பதற்கான முயற்சிகளை எதிரியானவன் மிகச் சிரத்தையுடன் செய்து வருகின்றான். அதன் வெளிப்பாடாக

1. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை வலுப்படுத்தத் தவறியதுடன் அமைப்பு ரீதியான முடிவுகளை புறம்தள்ளி தனிநபர் முடிவுகளை அமைப்பின் முடிவுகளாக முதன்மைபடுத்தி செயல்ப்படத் தொடங்கியமை .

2. எந்தவொறு உறுதியான தீர்வுகளையும் பெற்றெடுக்க முன்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையை கைவிட்டு விட்டதாக அறிவித்தமை.

3. தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி சர்வதேச விசாரணையை வலியுறுத்த தவறியதுடன் கலப்பு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து ஈற்றில் கலப்பு விசாரணை உள்ளக விசாரணையாக மாற்றி அதிலும் சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை எனும் அளவிற்கு நிலைமையை கொண்டுவந்துள்ளமை.

4. யுத்தத்தால் அனைத்தையும் இழந்து ஏதிலிகளாக நிற்பவர்களுக்கு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அதற்கூடாக அவசர திட்டங்களை வகுத்து சர்வதேச அணுசரணையுடன் அதனை செயற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரங்ளையும் மீள்கட்டுமாணங்களையும் மேம்படுத்தத் தவறியதுடன் தொடர்ந்தும் கையேந்தும் நிலையிலேயே வைத்துள்ளமை.

5. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை முற்று முழுதாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட்டு வலிகாமத்திலும் சம்பூரிலும் சிறுதுண்டு நிலப்பரப்பை விடுவித்து அதற்கூடாக ஏனைய ஆக்கிரமிப்புக்கள் மறைக்கப்பட்டு அதை நல்லிணக்கச் செயற்பாடாகவும் தமது இராஜதந்திர வெற்றியாகவும் காட்ட சிறிலங்கா முற்பட்டுள்ளமையை கண்டு காணாமல் விட்டுள்ளமை . (அசுர வேகத்தில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களும் புதிதாக முளைவிடும் பௌத்த விகாரைகளும் மறைக்கப்பட்டுள்ளன).

6. மத்தியிலே அதிகாரங்கள் குவிக்கப்பட்டு கிடப்பதாக மாகாண சபை முறைமையை நிராகரித்திருந்த தமிழர்களுக்கு இன்று அதே மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள தமிழர்களே மாகாண நிர்வாகத்திற்குள் தடங்களை ஏற்படுத்தி வருவதுடன் தமது முடிவுகளையே ஏற்றுச் செயற்பட வேண்டுமென வட மாகாணத்திற்கு கட்டளையும் இடுகின்றமை.

7. மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும் இல்லாமல் செய்யும் சிறிலங்காவின் சதித்திட்டங்களுக்கும் அதாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, இணைத்தலைமை, கிராம இராச்சியம் போன்றவற்றுக்கு முண்டுகொடுத்து நிற்கின்றமை .

8. இவற்றுக்கு மேலாக, யுத்தக் குற்ற விசாரணையின் (இனவழிப்பு விசாரணை) முடிவில் பரிகார ரீதியாக கொடுக்கப்பட வேண்டிய தீர்வானது அரசியல் அமைப்பு மாற்றம் எனும் போர்வையில் மறுதலிக்கப்பட்டு அதற்கூடாக தமிழ்த்தேசியம் அழிக்கப்பட்டு சிறிலங்கன் என்ற தேசியத்திற்குள் உள்வாங்கப்படுவதே தமிழர்களுக்கான தீர்வாக கொண்டு வருவதற்கு உடந்தையாக செயற்பட்டு வருகின்றமை.

9. வடமாகாணத்திற்கான பொருளாதார வலயம் என்ற போர்வையில் தெற்கே உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு வடக்கே தமது சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவே அதன் அமைவிடத்தை வவுனியா நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு சிறிலங்கா முயன்றது. இதனால் இலாபம் அடையப்போகிறவர்கள் வடபுல விவசாயிகள் அல்ல மாறாக புத்தளம் முதல் மதவாச்சி, அனுராதபுரம், மணலாறு வரை உள்ள விவசாயிகளே . அதனாலேயே ஓமந்தை, மாங்குளம் போன்ற வடபுல விவசாயிகளின் சந்தை வாய்ப்புக்கு பெரிதும் உகந்த இடங்கள் நிராகரிக்கப்படுகின்றது. இவற்றைக் கூட சரிவர கணித்து உரிய முடிவை எடுக்க முடியாதவர்களாக எது எப்படி போனாலும் பரவாயில்லை விக்னேஸ்வரனை முடியு எடுக்கவோ செயற்படவோ விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றமை. போன்றவைகள் காணப்படுகின்றன.

PMS-Sampanthan-860-15

எப்போது உரிமை வேண்டி போராடுகின்ற இனம் பதவி பெற்றுச் செயற்படுகின்றதோ அப்போதே அவ்வினத்தின் உரிமை விற்கப்படுகின்றது என்பதே உண்மையாகும் .

இன்றைய இந்த ஆபத்தான நிலைமையை கருத்திற்கொண்டு தமிழத்தேசியத்தின்பால் பற்றுள்ள புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், ஊடகவியளாளர்கள் ஒருங்கிணைந்து உடனடியாக தாயகத்தில் தமிழ் தேசியத்தையும் அதன் உரிமைப் போராட்டத்தையும் தக்க வைக்கும் நோக்கில் காலத்தின் தேவை கருதி தமிழர்களுக்கான கட்டமைப்புசார் அமைப்பு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவ் அமைப்பானது பல் தளங்களில் செயற்படுவதற்குரிய கட்டமைப்புகளை கொண்டுள்ளதாக அமைவதுடன் கொள்கை வழிநின்று செயற்படுவதுடன் அக் கொள்கையின் வழி மக்களை அணி திரட்டி செயற்படுவதும் அம்மக்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் துறைசார் புத்திஜீவிகளை உள்வாங்கி நிறுவனமயப்பட்டு செயற்படுவதாகவும் இருத்தல் வேண்டும்.

அரசியல், பொருளாதார, சமூக , பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் தேச நிர்மாணத்தை அமைக்கும் மூலோபாயங்களை வகுத்தல், அதற்காக தமிழகம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்புகள் மற்றும் உறவுகளை ஏற்படுத்தக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக இது இருக்க வேண்டும். சிங்கள தேசத்தில் தங்கி நிற்காமல் உலக தமிழ் மக்களின் பலத்திலும் ஆதரவிலும் தமிழ் தேசத்தை கட்டி எழுப்புவது இதன் நோக்கமாக இருக்கவேண்டும். உதாரணமாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, சிங்கள தேசத்துடன் யுத்தம் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, விடுதலைப்புலிகள் தமிழ் தேசத்தை கட்டி எழுப்பும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

தமிழீழத்தின் உட்கட்டுமான அமைப்பை வடிவமைத்தல் தொடர்பாக ஆராய்வதற்கென 1993 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதியன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழீழம் தனக்கேற்றதான வகையில் எதிர்கால உட்கட்டுமான அமைப்பை தீர்மானிப்பது தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்று புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை கொண்ட உட்கட்டுமானம் தொடர்பாக 8 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதேபோன்று, சிங்கள தேசத்துடன் அரசியல் ரீதியான போராட்டம் ஒருபுறம் நடைபெற , சிங்கள தேசத்தில் தங்கி நிற்காமல் எமது தேசத்தை கட்டி எழுப்பும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

அரசியல் ரீதியில் தலைமைத்துவத்தை வழங்குபவரே (முதலமைச்சரே) இவ்வமைப்பின் தலைவராக இருத்தல் வேண்டும். இது முரண்நிலைச் செயற்பாடுகளையும் அதிகாரப் போட்டிகளையம் குறைப்பதுடன் இலக்கு நோக்கிய பயணத்தில் குவிவை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவும் உதவும் . இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஸ்கொட்லாந்து SNP கட்சியின் தலைவியும் அத்தேசத்தின் முதலமைச்சருமாகிய நிக்கோலா சேர்ஜென் (Nicola Sturgeon) ஐ குறிப்பிட முடியும்.

அமைப்பு ரீதியிலான செயற்பாடின்றேல் எமது அழிவை தடுப்பது இயலாத காரியமாகும். இதேவேளை புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் தமது உறங்குநிலையை கலைத்து உண்மையான தமிழ் உணர்வுடன் காத்திரமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

root