வடக்கு மக்களை புறக்கணிக்கும் மீள்குடியேற்ற செயலணி
-நரேன்-
பிரித்தானிய ஏகாபத்திய ஆட்சியில் இருந்து இலங்கை தீவு சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் இருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் வடக்கு – கிழக்கு பகுதி மக்களை இனவாதக் கண்ணோடும், தீண்ட தகாதவர்கள் போன்றும் செயற்பட்டதன் விளைவே இந்த நாட்டில் அழிவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆட்சியாளர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஜனநாய கோரிக்கைகளையும், அவர்களது உரிமைகளையும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் கூட மதிக்காது செயற்பட்டு வருகின்றனர். முன்னைய அரசாங்கம் ஒரு சர்வதிகார தன்மையுடன் முழு நாட்டையம் ஆட்சி செய்ததன் விளைவாக தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் அந்த அரசாங்கம் விரட்டியடிக்கப்பட்டது. சர்வதேச பின்னனிகளுடன் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரளவேனும் விடிவைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று வரை இடம்பெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது அந்த நம்பிக்கை தொடர்ந்தும் கானல் நீராகவே தெரிகிறது. ஏனெனில் வடக்கு மாகாணம் தொடர்பில் ஆட்சி மாற்றத்தின் பின் கூட இந்த அரசாங்கம் பின்பற்றி வருகின்ற நடைமுறைகள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் சீண்டிப்பார்க்கச் செய்கின்ற செயற்பாடுகளாகவே அமைந்திருக்கின்றது.
வடக்கு மக்களைப் பொறுத்தவரை தமக்கான ஒரு ஆட்சி நிர்வாகத்தை தமது வாக்கு பலத்தின் மூலம் மாகாணசபை தேர்தலின் ஊடாக பெற்றுக் கொண்டார்கள். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஒரு ஆரம்ப புள்ளியாக மாகாண சபை முறை தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் போராட்டம் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை இன்று முழு நாட்டிலும் நடைமுறையில் உள்ள போதும் ஏனைய மாகாணங்களுக்கு இல்லாத கட்டுப்பாடுகளும், வரையறுகளும் வடக்கிற்கு போடப்படுகிறது. இதற்கு காரணம் தமிழ் மக்களின் ஆட்சி என்பதா என்ற சந்தேகம் உள்ளது. சாதாரண மாகாணசபையைக் கூட சுதந்திரமாக செயற்படவும், மாகாணத்தில் நடக்கும் அபிவிருத்தியை தீர்மானிக்கவும் விடுவதற்கு இந்த அரசாங்கமும் தயாராக இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் நல்லிணக்கம், அதிகாரபரவலாக்கம், நல்லாட்சி என்ற சொற்பதங்கள் சொல்லளவிலேயே இருக்கின்றன.
மத்திய அரசாங்கத்தின் ஒரு கபினட் அமைச்சருக்கு இருக்கும் அதே அதிகாரம் ஒரு முதலமைச்சருக்கு இருக்கிறது. ஒரு கபினட் அமைச்சர் என்பவர் தனது துறை சார்ந்த அமைச்சில் மட்டும் நாடாளவிய ரீதியில் செயற்பட முடியும். ஆனால் மாகாண முதலமைச்சர் தமது மாகாணத்திற்குட்பட்ட அனைத்து அமைச்சுக்களுக்கும் தலைமை அமைச்சராக இருப்பவர். அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டியவராகவும், மாகாணத்தின் அபிவிருத்தியை திட்டமிடுபவராகவும் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சரை புறக்கணித்து அவரை ஒரு சம்பளம் பெறும் உத்தியோகத்தராக வைத்துக் கொண்டு, அவரது அல்லது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மக்களதோ விருப்பத்திற்கு மாறாக அபிவிருத்தி என்ற போர்வையில் தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்த முனைகிறது. இது ஏற்புடையதல்ல. இதை தான் கடந்த அரசாங்கமும் செய்து வந்தது. அப்படி இருக்கையில் புதிய நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபைக்கு எதைத் தந்தது என்ற கேள்வி எழுகிறது. ஆளுனர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். பிரதம செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் மத்திய அரசே வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்தையும் தான்தோன்றித்தனமாக தீர்மானிக்க தொடங்கியுள்ளது.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மூலம் கொண்டு வரப்படும் நீரை திசைதிருப்பும் விவகாரம், இரணைமடு விவகாரம், பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என நீண்டு தற்போது மீள்குடியேற்ற செயலணி என அது சென்று கொண்டே இருக்கிறது. அண்மையில் அரசாங்கத்தால் வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை இன்னும் மீள்குடியேற்றவில்லை. அது தொடர்பில் வடமாகாணசபை கவனம் செலுத்த வில்லை. அதனால் இந்த செயலனி மூலம் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தும் உள்ளார். இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழுகின்றது. இந்த மீள்குடியேற்ற செயலனி முற்று முழுதாக முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கானதா? வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றுவதாக கூறி கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது காடுகள் அழிக்கப்பட்டு மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் பல குடியேற்றங்கள் இடம்பெற்றது. இந்திய அரசின் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதில் பல வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் பற்றைகளால் மூடப்பட்டும் உள்ளது. அப்படியாயின் அந்த குடியேற்றங்கள் மீள்குடியேற்றம் இல்லையா என்ற சந்தேகத்தை இவரது கருத்து ஏற்படுத்தியும் உள்ளது. அதேபோல் சிங்கள குடியேற்றங்களும் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு சாட்சியங்களாக நாவற்குழி, கலாபோபஸ்வேவ, கொக்கிளாய் என பலபகுதிகள் உள்ளன. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம், சிங்கள மக்களை இடம்பெயர்ந்து 26 வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றுவதற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் இடம்பெயர்ந்தவர்களில் பலர் தற்போது இல்லாத நிலையில் அவர்களது பிள்ளைகள் வழிவந்த உப குடும்பங்களே அதிகம் உள்ளன. அவர்கள் நிரந்தரமாக வேறு பகுதிகளில் வசிக்கும் நிலையில் உடனடியாக அவர்களை மீள்குடியேற்ற செயலனி உருவாக்குவது என்பது எதற்காக என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் யுத்தத்தால் வெகுவாக பாதிப்படைந்த தமிழ் மக்கள் பலர் இன்றும் மீள்குடியேற்றப்படாத நிலையில் முகாம்களில் வாழ்கின்றனர். இன்னும் சிலரது காணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலையில் வேறு இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒரு நல்லெண்ண சமிக்ஞைகள் எதிர்பார்த்த படி இடம்பெறவில்லை. அவர்களுக்காகான மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த செயலனியும் உருவாக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் சிங்கள, முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான செயலணி என்பது தமிழ் மக்களை இந்த அரசாங்கமும் கைவிட்டு விட்டதா என்ற கேள்வியையே எழுப்பி இருக்கின்றது.
வடமாகாண சபையை புறக்கணித்து வடக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற செயலணி என்பது இனப்பரம்பலை சீர்குலைக்கும் வகையிலான ஒரு குடியேற்ற நடவடிக்கையாக அமைவதற்கான வாய்ப்புக்களே அதிகம். முன்னைய அரசாங்கம் அதனை மக்கள் மீது திணித்தது. தற்போது செயலணி உருவாக்கப்பட்டு மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே வடக்கின் இனவிகிதாசராத்தை குழப்பி பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. வழிபாட்டுக்குரிய புத்தபெருமான் தற்போது நில அபகரிப்பு சின்னமாக வடக்கில் நிலை கொள்ளத் தொடங்கியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் கூட கண்டிய நடனத்தை கொண்டுவரப்படவேண்டும் என மாணவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் நடவடிக்கை இடம்பெறத் தொடங்கியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகளின் பின்னனியிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபையை புறக்கணித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1915 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரம் வெடித்த போது அதனை தடுத்து ஒற்றுமையைக் கொண்டு வந்த தமிழ் மக்கள் மேல் ஏறி சவாரி செய்வதற்கு தற்போது முனைப்பு காட்டப்படுகிறது. ஆனால் தமிழ் மக்கள் தம்மையும் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இணைந்து சமத்துவ அதிகாரங்களுடன் வாழ வழிவிடுமாறே கோருகின்றனர். இதனால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் முஸ்லிம், சிங்கள மக்களுடன் கைகோர்த்து நடப்பதற்கு தயாராகவே உள்ளனர். ஆனால் அதனை தென்னிலங்கை அரசாங்கம் புரிந்து செயற்பாடாத வரை இனநல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புக்களே இல்லை என்பதே தற்போதைய களயதார்த்தம்.
N5




