பொருளாதார மத்திய நிலைய விவகாரம்: விவசாயி சாகும் வரை உண்ணாவிரதம்
ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவேண்டும் என கோரி ஓமந்தை பகுதியை சேர்ந்த முதியவரொருவர் இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தா. மகேஸ்வரன் என்ற 73 வயதுடைய முதியவரே வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், வட மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தா.மகேஸ்வரன் தெரிவிக்கையில்,
வவுனியாவிற்கு பொருளாதார மத்தியநிலையம் ஒன்றை அமைப்பதற்கு 2010 ஆம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டு நிபுணர்குழுவின் ஆலோசனையின் படி ஓமந்தையில் 18 ஏக்கர் காணியும் ஓதுக்கப்பட்டுள்ளது. அப்போதைய இணைத்தலைவர்களான ஆளுனர் சந்திரசிறி, அமைச்சர் றிசாட்பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், நூர்தீன் மசூர், நுனைஸ்பாறுக் மற்றும் அரச அதிகாரிகள் என 82 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் ஏகமானதாக அந்த இடம் தெரிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பொருளாதார மத்திய நிலையத்தை ஒட்டுமொத்த விவசாயிகளினதும், ஒருங்கிணைப்புக்குழுவினதும் முடிவுக்குமாறாக வேறு இடத்தில் அமைக்க முயற்சி எடுக்கப்படுவதை எதிர்த்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். சாதகமான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பேன். எனது பிணத்தின் மேல் தான் பொருளாதார மையம் அமைக்கப்பட வேண்டும் என்றால் அவ்வாறே அமையட்டும் எனத் தெரிவித்தார்.
N5





