வடக்கு மாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இப்போது சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்படும் ஒருவராகவும் மாறியிருக்கிறார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கருத்துக்கள் தான் இதற்குக் காரணம்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தான் நடத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வையே வலியுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச விசாரணை என்ற விவகாரம் எப்போதுமே சிங்கள அரசியல்வாதிகளுக்கு கசப்பானது தான். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோரை அவர் யாராக இருந்தாலும் கடித்துக் குதறுவது சிங்கள அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.
நல்லாட்சி அரசு என்று கூறிக்கொள்ளும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களும் தம்மைத் தாமே முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்வோரும் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
சர்வதேச விசாரணை என்பதை வடக்கு மாகாண முதலமைச்சர் வலியுறுத்துவதால் அவரை நல்லிணக்க முயற்சிகளை குழப்புபவர் என்றும், சிங்கள கடும் போக்காளர்களை உசுப்பேற்றுபவர் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூட விமர்சித்திருக்கிறார்.
அரசாங்கம் எதைக் கொடுக்க நினைக்கிறதோ அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் எதையும் கோருபவர்களை விரோதியாகப் பார்க்கின்ற போக்கில் தான் அரசாங்கத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் அரசாங்கம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகளிடம் எதிர்பார்ப்பது ஜனநாயகம் அல்ல.
கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டிருங்கள் என்பதற்குப் பெயர் சர்வாதிகாரம். இதனைத் தான் மகிந்தவும் கையாண்டார். கொஞ்சம் வித்தியாசமாக இப்போதைய அரசாங்கமும் கையாள முனைகிறது.
சர்வதேச விசாரணை விவகாரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்து சிங்கள் அரசியல்வாதிகளிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் எதிர்வினையைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பான அவரது கருத்து முஸ்லிம்கள் மத்தியிலும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கிறது.
1987ம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்பாட்டுக்கு அமைவாக தற்காலிகமாக ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள், 2007ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இணைந்தே இருந்தன.
ஜே.வி.பி. தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றமே, இணைப்பு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி இரண்டு மாகாணங்களையும் பிரிக்க உத்தரவிட்டது.
தமிழரின் தாயகம் என்று உரிமை கொண்டாடப்படும் வடக்கு கிழக்கு மாகாணங்களை சிங்களத் தேசியவாதிகள் திட்டமிட்டே பிரித்தனர்.
வடக்கையும் கிழக்கையும் தனிமைப்படுத்துவதற்காக சிங்களக் குடியேற்றங்களை ஒரு கருவியாகவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்தன.
தவிர்க்க முடியாமல் இந்தியாவின் அழுத்தங்களால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போதிலும் சிங்களத் தேசியவாதிகள் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவற்றைப் பிரித்தனர்.
இந்தப் பிரிப்பினால் சிங்களத் தேசியவாதிகளை விட அதிகம் மகிழச்சியடைந்தது முஸ்லிம்கள் தான்.
கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது பெரும்பான்மையினரான முஸ்லிம்கள் தமக்கான அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்த பிரிப்பு துணையாக இருக்கும் என்று கருதினர்.
2012ம் ஆண்டு சனத் தொகைக் கணக்கெடுப்பின்படி கிழக்கில் 39.29 வீதமான தமிழர்களும், 36.69 வீதமான முஸ்லிம்களும் வசிக்கின்றனர். 23.15 வீதமான சிங்களவர்களும் வாழ்கின்றனர்.
கிழக்கு முஸ்லிம்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதை விட சிங்களவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கே முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறார்கள்.
முன்னர் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றித்தே வாழ்ந்து வந்தாலும் பின்னர் அரசியல் செயற்பாடுகளாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் சதியாலும் இரு இனங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.
அரசதரப்புடன் எப்போதும் இணைந்து செயற்பட்ட முஸ்லிம்களை தமிழர்கள் விரோதமாகப் பார்த்தனர். தம்மை விரட்ட முனைகிறார்கள் என்று தமிழர்களை முஸ்லிம்கள் குரோதமாகப் பார்த்தனர்.
இரண்டு தரப்புகளுமே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்படாதது பரஸ்பர அவநம்பிக்கைக்கு வழிவகுத்தது.
முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் போராட்டங்களை பலவீனப்படுத்துவதற்குத் துணை போனதும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதும் கிழக்கில் சில முஸ்லிம் கிராமங்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதும் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஆறாத வடுக்களாகவே இன்னமும் நீடிக்கின்றன.
இப்போதைய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தனியான அலகு ஒன்றை உருவாக்க முனையும் போது முஸ்லிம்கள் அதனை வேறு விதமாகப் பார்க்கின்றனர்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் தற்போது 36.69 வீதமாக இருக்கின்ற தமது சனத்தொகை வீதம் 17 வீதமாக குறைந்து விடும். அது தமது அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பேரம் பேசும் பலத்தையும் குறைத்து விடும் என்று அஞ்சுகின்றனர்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையில் தமிழர்களுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடுவதை விட சிங்களக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றனர் என்பது வெளிப்படையான உண்மை.
2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஒன்று வந்த போதிலும் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து ஆட்சியை அமைத்துக் கொண்டது முஸ்லிம் காங்கிரஸ்.
அப்போது 11 ஆசன்ங்களை வென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு முதலமைச்சர் பதவியைத் தருகிறோம் என்று கூறிய போதிலும்ஹ அதனைக் கண்டு கொள்ளவில்லை.
மிக அண்மையில் கூட இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக படித்த, பண்புள்ள முஸ்லிம் ஒருவரை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
அதற்கு முஸ்லிம் தலைமைகளால் தெளிவான எந்தப் பதிலையும் கூற முடியவில்லை.
வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துக்குப் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்று கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் வலியுறுத்தியிருக்கிறது.
அவ்வாறு செயற்பட்டால் முஸ்லிம்களின் நலன்கள் பறிபோய் விடும் என்று அவர்கள் அச்சத்தை வெளியிட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சத்துக்கு தமிழர் தரப்பும் ஏதோ சில வழிகளில் காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் பொதுநலன் ஒன்றை முன்னிறுத்தி இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகின்ற போது அதனைத் தட்டிக்கழிப்பது இரண்டு சமூகங்களுக்கும் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் காணிகள் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படுகின்றன. கிழக்கில் இதே பிரச்சினையை முஸ்லிம்களும் எதிர்கொள்கிறார்கள். மாகாணங்களின் இணைப்பில் இதுபோன்ற பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கும் வாய்ப்பு கிட்டலாம்.
அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் விடயத்தில் இதுவரை செயல் ரீதியான எந்த முன் முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
ஆனால் அரசியல் ரீதியாக இரண்டு தலைமைகளும் இந்த விவகாரம் குறித்த திறந்த வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.
ஆக்கபூர்வமான ஒளிவுமறைவில்லாத எந்தப் பேச்சுக்களும் இணக்கமான ஒரு முடிவை நோக்கி நகரக்கூடும்.
அத்தகையதொரு பேச்சுக்களுக்குள் நுழைய வேண்டிய தேவையை இந்தச் சர்ச்சை இப்போது உணர்த்தியிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு அரசியலமைப்புத் திருத்தம் என்று வரும் போது, எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்கும் சிங்கள அரசியல் தலைமை தான் அந்த வாயப்பை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு போகும்.




