செய்திகள்

அவர் எழுதிக் கொடுத்த வரிகள் இன்று அவருக்கே உரித்தானது- ஒரு இயக்குனரின் சோகப்பதிவு

நா.முத்துக்குமார் அவர்களின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் தன் முகநூல் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதில் ‘வெகு சிலரின் மரணம் மட்டும் நம்மை உலுக்கி விடும்

விடிந்தால் இது பொய்யாகி விடாதா என மனம் ஏங்கும்

என் எல்லா முக்கியத் தருணங்களிலும், எல்லா உணர்வுகளுக்கும் இவரின் வரிகள் தாயின் மடி போல்!

வெறும் திரைக்கவியல்ல!

அதைவிட பன்மடங்கு மேல்,

உணர்வுக் கவிஞர்!!

இவரது கவிதை “தூர்” லயோலா கல்லூரியில் பல வருடங்களுக்கு முன்பே தமிழ் இலக்கிய பாடப்பகுதி!!!

நமது அதிகப்படியான போராட்டங்களுக்கும் வலிகளுக்கும் ஆறுதல் மருந்தாகின இவரின் படைப்புகள்.

எனது முதல் படத்தின் முதல் பாடல்

இவரால் இயற்றப்பட வேண்டும்

எனும் பலநாள் தீர்க்க வாஞ்சையோடு ஓர் ரசிகனாய் இவரை அணுகினேன்.

மறுக்காமல் அன்புடன் எழுதிக் கொடுத்தார்.

அவர் எழுதிக் கொடுத்த வரிகள் இன்று அவருக்கே உரித்தானது போல் தெரிகிறது:

“யாத்ரிகா! நீ போய் வா மகனே

உலகமே உந்தன் தாய் வீடுதான்…”

– திரு. நா.முத்துக்குமார் எழுதிய

ரங்கூன் பட தலைப்பு பாடலின் முகப்பு வரிகள்

இப்பாடலின் உருவாக்க தினத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு நண்பராய், ஒரு மூத்த சகோதரனாய் பழகுவார்.

இவரது சிறப்பு – பேராசையற்ற, தலைக்கனம் அறவேயற்ற, பண்பு.

“தலைவா! என் பையன் ஷூட்டிங் பாக்கணும்னு ரொம்ப நாளா சொல்றான். இதுவரைக்கும் பாத்ததே இல்ல.

கூட்டிட்டு வரலாமா?”

ஓ! சண்டை சீனா?! சூப்பர்!!! சினிமா சண்டை-லாம் பொய், சும்மானு அவனுக்கு நேர்ல் காமிச்சு புரிய வக்கனும் கூட்டிட்டு வரேன்” – னு, ஒரு நாள் வந்தார்.

சண்டைக்காட்சியை பார்த்து :

“தலைவா! ஒங்க படத்துல, நெஜ சண்டை மாதிரி இருக்கு. நா பையன கூட்டிட்டு கெளம்பறேன்”

– என கிண்டல் செய்தார்.

பின் அவரே அங்கிருந்த போலி ஆயுதங்களை காண்பித்து அவர் மகனுக்கு புரிய வைத்தார்.

இன்று அவரின் முகத்தை நேரில் பார்த்தபிறகும் என் மனம் நம்ப மறுக்கிறது.

தொடர் பேட்டிகள், சமூகவலைத்தளங்களில் தொடர்பு என எதுவும் வைத்துக்கொள்ளாமல் தன் பாடல்கள், படைப்புகள் மூலமாக மட்டுமே நம் மனதில் நிரந்தரமாக அமர்ந்து கொண்ட அவருக்கு மறைவு சாத்தியமில்லை என்பதற்கு இன்று அவருக்கு நேரிலும், மனதிலும் அமைதியாய் அஞ்சலி செய்த கோடிக்கணக்கான கண்ணீர்த்துளிகளே சான்று.

பட தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து – தவிர,

இது வரை நான் இங்கு எதை பற்றியும் நேரடியாக எழுதியதில்லை, எழுத நினைத்ததில்லை!

வெற்றிடம் விட்டுச் சென்றுள்ள அமரகவி மற்றும் ஒரு அன்பான சிறந்த மனிதனுக்கான சோக வெளிப்பாடு என நினைக்கிறேன்.

ஒரு சில மாதங்களே பழகிய எனக்கும்,

அவர் பாடல்கள் மூலமாக மட்டுமே அவருடன் அறிமுகமிருக்கும் நம்மில் பலருக்குமே இவ்வளவு துக்கம் இருக்க –

அவரின் மனைவி, மகன், மகள்

அவரை பிரிந்து வாடும் துன்பத்தை நாம்

அளவிடவே முடியாது.

அவர்கள் மனதைரியம் பெற்று இக்கொடுமையான கணங்களை கடந்து செல்லப் பிரார்த்திப்போம்.’ என்று தெரிவித்துள்ளார்.

N5