உலகின் மனச்சாட்சியை உலுக்கும் அலெப்போவின் அவலத்தை சொல்லும் புதிய படம்
அலெப்போவில் இடம்பெற்ற விமானக்குண்டுத்தாக்குதல்களில் உயிர் தப்பிய சிறுவன் ஓருவன் அதிர்ச்சியடைந்த நிலையில் காயங்களுடன் அம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் படமொன்று உலகின் மனச்சாட்சி குறித்து கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளது.
மிகவேகமாக சமூக ஊடகங்களில் பரவிவரும் இந்த புகைப்படம் அலெப்போ சந்தித்துவரும் அவலங்களிற்கான அடையாளமாக மாறியுள்ளது.
அலெப்போவில் புதன்கிழமை இடம்பெற்ற விமானதாக்குதல்களின் காரணமாக காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஐந்து சிறுவர்களில் ஓருவனான ஐந்து வயது சிறுவன் ஓம்ரான் டக்னீசின் புகைப்படமே அது.
https://www.youtube.com/watch?v=bZw3VpGPqM4
இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பெரும் மனித பேரவலத்தை சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் வெளியிட்டு வருகின்றமை, சர்வதேச ரீதியில் இந்த யுத்தத்துக்கு எதிரான குரல்களை எழுப்பி இருப்பதுடன் இந்த மக்கள் மீதான அனுதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊடகங்களின் இந்த செய்திகள் காரணமாக ஐ. நா மட்டத்தில் இந்த மக்களுக்கான அவரச மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி மனித அவலத்தை நிறுத்திடுவது தொடர்பிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த அவலத்தை விடவும் பல மடங்கு மோசமான மனித அவலம் 2009ல் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த போதிலும் சர்வதேச ஊடகங்கள் அவற்றை வெளியிடா வண்ணம் செய்தியாளர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் யுத்த பகுதிக்கு செய்வதற்கு சிறி லங்கா அரசாங்கம் முழுமையான தடை விதித்து யுத்த தகவலை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை காரணமாக அங்கு வைத்தியசாலைகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவங்கள், யுத்த சூனிய பிரதேசங்களில் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை , கொத்துக்குண்டு மற்றும் விமான குண்டு தாக்குதல்கள் மற்றும் உணவு, மருந்து மற்றும் நீர் இன்றி பொதுமக்கள் இறந்தமை பற்றிய செய்திகளோ படங்களோ சர்வதேச ஊடகங்களால் வெளிப்படுத்தபட முடியவில்லை. அத்துடன் யுத்த பிரதேசத்துக்கு செல்வதற்கு அனுமதி பெற்றிருந்த சில இந்திய ஊடகங்கள் இந்த மனித பேரவலத்தை இருட்டடிப்பு செய்தமையும் சிறி லங்கா அரசின் பிரசாரத்துக்குள் ஏனைய சர்வதேச ஊடகங்கள் வீழ்ந்தமையும் அலெப்பே அவலம் போன்று முள்ளிவாய்க்கால் அவலம் உலகின் மனச்சாட்சியை உலுப்ப முடியாமல் போயிற்று.




